நேர்த்திக்கடன் இங்கு இல்லை!
நாம் நினைத்தது நடக்க, கடவுளுக்கு காணிக்கை செலுத்துவதாக நேர்ந்து கொள்வது வழக்கம். ஆனால், நேர்த்திக்கடனே செய்யாத கோவில், சென்னை, திருவொற்றியூரில் இருக்கிறது. அது தான், பட்டினத்தார் கோவில்.காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்த சிவ பக்தரான, திருவெண்காடர், கடல் வணிகம் செய்தார். சிவகலை என்பவரை திருமணம் செய்தார். குழந்தை இல்லை; சிவனிடம் புத்திரப்பேறு வேண்டினார்.இதனிடையே, சிவசருமர் - சுசீலை என்னும் மற்றொரு சிவபக்த தம்பதிக்கு, மருதவாணர் என்ற மகன் பிறந்தார். வறுமையில் வாடிய இவர்கள், சிவன் கனவில் வந்து சொன்னபடி, தங்கள் குழந்தையை திருவெண்காடருக்கு தத்து கொடுத்தனர்.மருதவாணரும் வணிகம் செய்தார். ஒருசமயம், தன் தாயிடம் ஒரு பெட்டியை கொடுத்து, வீட்டிலிருந்து வெளியேறி விட்டார், மருதவாணர். மகன் சம்பாதித்து வந்ததை காண, பெட்டியைத் திறந்தார், திருவெண்காடர். அதில், காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே... என்று எழுதப்பட்ட ஓலை இருந்தது.திருவெண்காடருக்கு சுரீரென உரைத்தது.மனிதன் எவ்வளவு தான் சம்பாதித்தாலும், கடைசியில், பயனில்லாத காதற்ற ஊசியை கூட, கையில் எடுத்து செல்ல முடியாது என்பதை உணர்ந்தார். இல்லற வாழ்க்கையை துறந்து, சிவத்தல யாத்திரை சென்றார். திருவெண்காடர், காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால், பட்டினத்தார் எனப்பட்டார். காசியை ஆட்சி செய்த, பத்ரகிரி என்ற மன்னனை, சீடனாக ஏற்றார். கும்பகோணம் அருகிலுள்ள, திருவிடைமருதுாரில் அவர்கள் தங்கினர். சிவன், பத்ரகிரியாருக்கு முதலில் முக்தி கொடுத்தார். பட்டினத்தார் தனக்கும் முக்தி வேண்டவே, ஒரு கரும்பைக் கொடுத்து, அதன் நுனி இனிக்கும் இடத்தில், முக்தி தருவதாக கூறினார்.திருவொற்றியூர் வந்தபோது, நுனிக்கரும்பு இனித்தது. அங்கிருந்தவர்களை அழைத்து, தன்னை ஒரு பாத்திரத்தால் மூடும்படி கூறினார். லிங்க வடிவமாகி முக்தி பெற்றார். பிற்காலத்தில் இவ்விடத்தில் கோவில் எழுப்பப்பட்டது.இங்கு, ராஜகோபுரம், விமானம் கிடையாது. பட்டினத்தார் பிறந்த, உத்திராடம் நட்சத்திரம் மற்றும் வியாழக் கிழமைகளில் சிறப்பு பூஜை நடக்கும். பட்டினத்தார் துறவி என்பதால், 'இந்த பொருளை செலுத்துகிறேன்...' என்று நேர்ந்து கொள்வதில்லை.கோரிக்கையை மட்டும் சொல்வர். நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டினால், அது நிறைவேறாது என்பதும் நம்பிக்கை.சன்னிதி முகப்பில், 27 நட்சத்திர தீபத்தில் நெய் தீபம் ஏற்றுவர். சென்னை, எழும்பூரில் இருந்து, 12 கி.மீ., மற்றும் கோயம்பேட்டில் இருந்து, 22 கி.மீ., துாரத்தில் கோவில் உள்ளது.தி. செல்லப்பா