போதுமென்ற மனமே....
மனிதனின் புத்தியை கெடுப்பவை ஆசை தான். ஒரு மனிதனுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என்ற மூன்றும் தேவையான அளவு இருந்து விட்டால், அவன் நிம்மதியாக வாழலாம். பதவி, பணம், பொருள் என்று சேர்க்க ஆரம்பித்து விட்டால், அவைகள் இவனைப் பிடித்து ஆட்டிக் கொண்டே இருக்கும். ஒரு ஏழை உழவன் இருந்தான். தான் ஒரு ஏழை என்ற எண்ணமே இல்லாமல், காடுகளில் போய் அங்கு கிடைக்கும் காய், கனி, கிழங்குகளை கொண்டு வந்து தன் மனைவி, மக்களோடு சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்து வந்தான். கடவுள் இவனை சோதிக்க விரும்பினார். ஒரு நாள் அவர் உழவனின் வீட்டில் புது துணி வகைகளை கொண்டு வந்து வைத்தார். அதை பார்த்து, 'இது ஏது? புது துணிமணிகள். இதை நான் வாங்கி வரவில்லையே... எப்படி வந்தது?' என்று சொல்லி, துணிகளை ஒரு ஓரமாக வைத்து, அதை கவனிக்காமலே இருந்து விட்டான்.ஒரு நாள் காட்டில் பழங்களை பொறுக்கிக் கொண்டிருந்தான். அங்கே ஒரு தங்க கட்டியை போட்டு வைத்தார் பகவான். உழவன் தங்க கட்டியை பார்த்தான். 'இது தானாக கிடைத்தது. இதை ஏன் நான் எடுத்து போகக் கூடாது...' என்று முதலில் எண்ணினான். பிறகு, தன் சபல புத்தியை நினைத்து மனம் மாறினான். தங்கக் கட்டியை எடுத்து வந்தால் பிரச்னைதான் என்று, எடுக்காமல் வந்து விட்டான்.பகவானுக்கு இது ஏமாற்றமாக இருந்தது. அவர் ஒரு ஜோதிடர் உருவம் கொண்டு உழவனின் மனைவியிடம் போய், 'உன் புருஷனுக்கு புத்தியே இல்லை. அவர் கண்ணெதிரில் ஒரு தங்கக் கட்டி கிடந்தது. அதை அவர் எடுத்துக் கொள்ளாமல் வந்து விட்டார். நீ அவருக்கு புத்தி சொல்லி அந்த தங்க கட்டியை எடுத்து வரச்சொல். இது தானாக வந்த அதிர்ஷ்டம்; இதை நழுவ விடலாமா?' என்று சொன்னார்.அந்த சமயம் உள்ளே வந்த உழவனிடம் மனைவி, 'தங்க கட்டியை ஏன் எடுத்து வரவில்லை. உடனே போய் எடுத்து வா! வேறு யாராவது எடுத்துக் கொண்டு போய் விடப் போகின்றனர்...' என்றாள். ஜோதிடனும், அவள் சொன்னபடியே உபதேசம் செய்தான்.ஜோதிடனை பார்த்து, 'ஐயா... இது நாள் வரை காடுகளில் போய் அங்கே கிடைக்கும் காய், கனி வகைகளை கொண்டு வந்து குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிட்டு, சந்தோஷமாக இருக்கிறோம். தங்க கட்டியை கொண்டு வந்து விட்டால் இன்னும் கிடைக்குமா என்று பார்க்க தோன்றும். அதையே நான் காட்டில் தேடிக் கொண்டிருக்க வேண்டியது தான். 'கொண்டு வந்த தங்க கட்டியை எங்கே வைத்து பாதுகாப்பது, எப்படி செலவு செய்வது? இதனால், என் மன அமைதி தான் கெடும். இது நாள் வரையில் கவலையில்லாமல் இருக்கிறேன். அன்றன்று கிடைப்பதை உண்டு, மகிழ்வோடு வாழ்கிறோம். நாளைக்கு வேண்டுமே என்று எதையும் சேமித்து வைக்கவில்லை. நாம் சேமித்து வைத்தாலும் கூட நாளை நாம் அதை அனுபவிக்க இருப்போமா என்பது நிச்சயமில்லை. 'அப்படியிருக்க யாருக்காக சேமித்து வைக்க வேண்டும்? இப்போது நான் நிம்மதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தங்க கட்டியை பார்த்து நான் ஏமாறவோ, அமைதியை இழக்கவோ விரும்பவில்லை. அதனால், அது எனக்கு வேண்டாம்...' என்றான். அவனது மனைவியும் மனம் சமாதானம் அடைந்தாள்.பகவான் தன் தோல்வியை மனதார ஒப்புக் கொண்டு, உழவனின் நேர்மையை கண்டு சந்தோஷப்பட்டு, தன் சுய ரூபத்தை காட்டி உழவனுக்கும், அவன் குடும்பத்துக்கும் அருள் செய்து மறைந்து விட்டார். பகவான் அருளால் உழவன் குடும்பத்தில் சகல செல்வங்களும் நிறைந்து விட்டது. அவர்களும் சவுகரியமாக இருந்தனர்.அனாவசியமாக ஆசைப்பட்டு, மனதை அலட்டி, அவதிப்படாமலிருந்தாலே நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும். பணம், பணம் என்று பேயாக அலைய வேண்டாம்.***ஆன்மிக வினா-விடை!நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும், சுமங்கலி களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், மஞ்சள், குங்குமம், ஜாக்கெட் பிட் கொடுப்பது போல, குங்குமத்தை எவர்சில்வர் குங்குமச் சிமிழில் வைத்து கொடுக்கலாமா?மற்ற எல்லா மங்கலப் பொருட்களும் கொடுப்பது சரியானதுதான்; ஆனால், குங்குமத்தை எவர்சில்வர் சிமிழில் கொடுக்கக் கூடாது.***வைரம் ராஜகோபால்