பசுமை நிறைந்த நினைவுகளே! (34)
தற்போது, பழத்தோட்ட அருவியை பார்க்க முடியுமே தவிர, அதில் குளிக்க முடியாது. இதற்கு, நிர்வாக காரணம் என்று முன்பே கூறியிருக்கிறேன். இந்த அருவிக்கு, வி.ஜ.பி., அருவி என்றும் ஒரு பெயர் உண்டு.உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்களை தவிர்த்து, அநேகமாக இந்த அருவியில் குடும்பத்துடன் குளித்தவர்கள், வாரமலர் வாசகர்கள் தான். இதற்கான விசேஷச அனுமதியை பெற்றுத் தந்தவர் அந்துமணி. குற்றாலத்தில் இருப்பவர்களே குளிக்க முடியாத பழத்தோட்ட அருவியில், நம்மை குளிக்க வைத்தவர் என்பதனால், வாசகர்கள் அந்துமணியை கொண்டாடுவர்!டூரின் மூன்றாவது நாள், மூன்று மணி நேரம், பழத்தோட்ட அருவியில்தான் குளியல். அந்த குளியல் அனுபவம், வாசகர்களின் வாழ்நாளில் மறக்க முடியாது.இந்த அருவியில்தான், 99-ம் வருடம், டூர் வாசகர்கள் குளித்து திரும்பும் போது, 'போலாமா...' என்று கேட்ட போது, 'போலாமே...' என்று கூடுதலாக குரல்கள் கேட்டது என்று, கடந்த வாரம் எழுதியிருந்தேன்.அந்த குரல்களுக்கு சொந்தக்காரர்கள், டூரில் வந்த வாசகர்கள் சிலருக்கு, சொந்தக்காரர்கள்.குறிப்பாக அந்த வருடம் மூன்று தம்பதிகள் கலந்து கொண்டனர். ரங்கநாதன்- - ஷோபனா, சுந்தரமூர்த்தி- - சாந்தி, கணேசன்- - ரோஸ்லின்மேரி. இந்த மூன்று தம்பதிகளும், புது மணத்தம்பதிகள் என்பது, இன்னும் விசேஷம். அதிலும், கணேசன் -- ரோஸ்லின்மேரி கலப்பு மணத்தம்பதி.பொதுவாக புதுமணத் தம்பதிகளை ஆடி மாதம் பிரித்து விடுவர். ஆடி மாதம் நடைபெறும், நம் வாரமலர் குற்றால டூர், இவர்களை பிரிய விடாமல் சேர்த்து வைத்ததால், அவர்களுக்கு பெரிதும் மகிழ்ச்சி. நடுத்தர மற்றும் எளிய குடும்பத்தை சேர்ந்த அந்த தம்பதிகளுக்கு, குற்றால டூர், தேனிலவு டூராகவே அமைந்து விட்டது. மேலும், இவர்கள் புதுமணத் தம்பதிகள் என்பதை அறிந்ததும், அவர்களை சந்தோஷப்படுத்தும் விதத்தில், பல பரிசுகள் வழங்கப்பட்டன. அத்துடன், டூரில் கலந்து கொண்ட மற்ற வாசகர்களும், தம்பதிகளை, 'மாப்பிள்ளை' என்றும், 'மகளே' என்றும் அழைத்து, அவர்களை பாசத்தில் நனைத்தனர்.இந்நிலையில், இந்த தம்பதிகள் தங்களுக்கு ஏற்பட்ட இனிய அனுபவத்தை, குடும்பத்தாருக்கு சொல்லி, மூன்றாம் நாளான பழத்தோட்ட அருவிக்கு போவதையும், அதன் முக்கியத்துவத்தையும் புகழ்ந்து சொல்லி விட்டனர். இதன் காரணமாக, அவர்களின் உற்றம், சுற்றம் என்று, ஒரு பெரிய கூட்டமே குற்றாலம் வந்து இறங்கியது.'டூரில் தாங்கள் எப்படி ராஜா- ராணியாக வலம் வருகிறோம் பாருங்கள்...' என்று, சொல்லாமல் சொல்லும் விதத்தில், உறவினர்களை வரவழைத்தவர்கள், முதல்நாளே அந்துமணியிடம் அனுமதி பெற்று, தங்களது உறவுகளையும், பழத்தோட்ட அருவிக்கு கூட்டிச் சென்று, குளிக்க வைத்து விட்டனர்.குளிக்கும் போதே இடை இடையே இளநீர், நுங்கு, பதநீர் போன்ற குளிர்பானங்களும், டீ,காபி போன்ற சூடான பானங்களும், நொறுக்கு தீனிகளும், குளிப்பதற்கு தேவைப்படும் துண்டு, எண்ணெய்,ஷாம்பூ என்றெல்லாம் வழங்கப்பட்டன. இதையெல்லாம், வாய் பிளந்து பார்த்த உறவுகள், 'இத்தனைக்கும் காரணமான அந்துமணிக்கு, நன்றி சொல்லவாவது பார்த்தே தீருவோம்...' என்று, வாசகர்கள் பயணித்த பஸ்சின் பின்னாடியே வந்து, அன்பு தொல்லை கொடுத்தனர். இது அந்துமணியின் காதிற்கு போன போது, 'முதல்ல அவர்களை சாப்பிடச்சொல்லுங்கள்...' என்று சொல்லி, மதிய விருந்தில், அவர்களையும் பங்கேற்க வைத்தார்.அளவில்லா ஆனந்தம் அடைந்த அவர்கள், இதற்கு காரணமான அந்துமணியையும், தங்களது மருமகள்களையும் இன்னமும் கொண்டாடிக் கொண்டு இருக்கின்றனர்.இவர்களாவது பராவாயில்லை; ஒரு ஜீப், இரண்டு கார், மூன்று வேன்களில் வந்த ஒரு கோஷ்டியினர், 'அந்துமணியை இப்போதே பார்த்தாகணும்...' என்று சொல்லி, அடம்பிடித்து நின்றனர்.அவர்கள் வந்து நின்ற நேரம், நள்ளிரவு இரண்டு மணி!அவர்கள் யார் என்பதை, அடுத்த வாரம் சொல்கிறேன்.குற்றாலமும், ராமநதி அணையும்...கடையம் அருகே, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது ராமநதி அணை. ஒரு கி.மீ தூர ஆற்றுப்பகுதி அடர்ந்த வனத்திற்குள், அணை அமைந்துள்ளதால், குடும்பத்தோடு குளித்து மகிழ, இது, வசதியான இடம்.மேலும், வனப்பகுதியில், தலைமலை சாஸ்தா கோவில் அமைந்துள்ளது. இதனால், ராமநதி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள், உணவு சமைத்து, குளித்து மகிழ்ந்து, கோவிலில் சாமி கும்பிட்டு செல்வது வழக்கம்.அரியப்புரம், பாவூர்சத்திரம், ஆவுடையானூர், திப்பணம்பட்டி, ஆலங்குளம், மயிலப்புரம், மேட்டூர், கடையம் என்று, இதன் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு, ராமநதி அணை, ஒரு சுற்றுலாத் தலமாகவே உள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில், வெளியிடங்களிலிருந்து கார் மற்றும் வேன்களில், சுற்றுலா பயணிகள் அதிகம் குவிகின்றனர்.அணை, இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதம். இதில், பிளாஸ்டிக், பழைய துணிகள், மதுகுடித்த பாட்டில்களைப் போட்டு, அணை மற்றும் ஆற்று நீரை அசுத்தப்படுத்தும் செயல், நம் தலையில், நாமே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதற்கு சமம் என்பதை, மனதில் வையுங்கள். நாம் இம்மாதிரி காரியங்களை செய்யாவிட்டாலும், அடுத்தவர் இக்காரியங்களில் ஈடுபடும் போது, தடுத்து நிறுத்துங்கள்.— அருவி கொட்டும்.-எல்.முருகராஜ்