பசுமை நிறைந்த நினைவுகளே... (69)
குற்றால டூருக்கு வரும் வாசகர்களை எந்த மாதிரியெல்லாம் புதுமைகளை புகுத்தி சந்தோஷப்படுத்தலாம் என்பதை, ஒவ்வொரு ஆண்டும் உண்மையிலேயே ரூம் போட்டுத்தான் யோசிப்போம்.அப்போது பீட்சா, பர்கர் மற்றும் ரூமாலி ரொட்டி போன்றவை பிரபலமாகிக் கொண்டிருந்த நேரம். 'எத்தனை நாள்தான் நம்ம ஊர் இட்லி, பொங்கல், ஆனியன் தோசையை சாப்பிடுவது... ஒரு மாற்றத்திற்காக வடமாநில உணவுகளையும் சேர்த்து கொடுப்போம்...' என்று எண்ணி, இந்த உணவுகளை தயார் செய்யும் நிபுணர் ஒருவரை வடமாநிலத்தில் இருந்து வரவழைத்திருந்தார் அந்துமணி.அவரும், தன் குழுவுடன் வடமாநில உணவுகளை விதவிதமாக வழங்கினார்.கடந்த, 2007ல் வடமாநில உணவு வழங்கிய புதுமை நடந்தது என்றால், 2008ல் முழுக்க முழுக்க கேரளா உணவே வழங்கப்பட்டது. ஐந்தருவி போகும் வழியில் உள்ள குற்றாலம் ரிசார்ட்சில் செயற்கை அருவி, நீச்சல் குளம் போன்ற வசதிகள் இருந்ததால், அந்த ஆண்டு வாசகர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டனர். 'வெளியில் இருந்து வரும் ஆட்களை சமைக்க விடமாட்டோம்; எதுவேண்டுமென்றாலும் நாங்களேதான் சமைத்து தருவோம்...' என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.இந்த ரிசார்ட்சில் முதலாளி முதல் தொழிலாளி வரை எல்லாரும் கேரளாவை சேர்ந்தவர்கள். கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியுமே தவிர, நம்ம பக்கத்து உணவு பற்றி பெரிதாக எதுவும் தெரியாது.பொங்கல் பற்றி புரிய வைப்பதற்கே பெரும்பாடாகி விட்டது. 'சாம்பாரில் ஏன் வடையை ஊறப் போடணும்... மினி இட்லிக்கு பதிலாக ஒரு இட்லியை எட்டாக வெட்டி தரலாமே...' என்றெல்லாம் அவர்கள் கேட்ட கேள்வியிலேயே, 'பொங்கல் பொங்கலா இருக்காது, சாம்பார் வடை சாதாவடையாகி விடும், மினி இட்லி மின்மினி இட்லியாகி விடும்...' என்பது புரிந்து போனதால் நாம், அவர்கள் லெவலுக்கு இறங்கி விட்டோம்.'நீங்க ஒண்ணும் புதுசா பழக வேண்டாம்; உங்க சமையல் மாஸ்டருக்கு எதெல்லாம் நல்லா செய்ய வருமோ அதை சிறப்பா செய்யுங்க. அது போதும்...' என்றதும், 'இப்ப பேசுறது கரெக்ட் சாரே... இனி நம்ம சமையல் ஜோராயிட்டும் பாரு சாரே...' என்றனர்.இதன் காரணமாக அந்த ஆண்டு வாசகர்கள் நெய் அப்பம், கொண்டைக்கடலை குழம்பு, புட்டு, சொதி, வேகவைத்த நேந்திரம் வாழைப்பழம், உப்பேரி, இஞ்சிதயிர், சுசியம், போளி, பாலடைப்பிரதமன், மஞ்சள் சாதம், பிரிஞ்சி போன்ற சைவ உணவுகளும், இதே போன்ற அசைவ உணவுகளும் உண்டு மகிழ்ந்தனர்.ரிசார்ட்சில் நடுப்பகுதி பெரிய மைதானம் போன்று இருக்கவே, கிரிக்கெட் விளையாடுவது என்று வாசகர்கள் முடிவெடுத்தனர்.'யாருக்கெல்லாம் கிரிக்கெட் விளையாட ஆர்வம் இருக்கிறதோ அவர்கள் முன்வரலாம்...' என்றதும், அனைவருமே முன்வந்தனர். 'இதில் யாருக்கெல்லாம் கிரிக்கெட் விளையாட தெரியும்...' என்று கேட்டதும், அனைவருமே பின் வாங்கினர்.'ரூல்சா முக்கியம்... சந்தோஷம்தானே முக்கியம்...' என்று சொன்ன வாசகி தமிழ்செல்வி, கிரிக்கெட் மட்டையை அருவாளை போல பிடித்து நின்ற விதத்தை பார்த்ததும், எதிரணி வெலவெலத்து போனது.எதிரணி என்பது ஆண் வாசகர்கள் நிறைந்தது.வாசகியர்களுக்கு, பந்து போடும் போது, பந்து வீச்சாளர், வலது கைக்காரராக இருந்தால் இடது கையால் போட வேண்டும்; இடது கைக்காரராக இருந்தால், வலது கையால் போட வேண்டும். பந்தை அடிப்பது போல போட வேண்டும், பிடிப்பது போல வந்தால் விட்டுவிட வேண்டும். 'ரன் அவுட்' செய்யக்கூடாது; மீறி செய்தால் செய்தவர் அணியைவிட்டு, 'வாக்-அவுட்'டாகி விட வேண்டும். இப்படி ஏகப்பட்ட புது ரூல்சோடு நடந்த கிரிக்கெட் போட்டியில், அன்று பங்கேற்றவர்கள் அதற்கு முன் பந்து, மட்டை என்று எதையுமே தொட்டுக்கூட பார்த்தது இல்லை என்பது அவர்கள் பந்தையும், மட்டையையும் கையாண்ட விதத்தில் இருந்தே தெரிய வந்தது.இந்த மேட்சிற்கு தேர்டு அம்பயர் பத்தாது என்று போர்த், பிப்த், சிக்ஸ்த் அம்பயர் எல்லாம் உண்டு. பிரதான அம்பயரான சுப்புராமிடம் மகளிர் அணி, 'மேட்ச் பிக்சிங்' செய்தனரோ என்னவோ... வாசகியர் அடித்த பந்திற்கு எல்லாம் போர், சிக்சர் என்று மட்டும் இல்லாமல் எய்ட், டென் என்றெல்லாம் ஏகத்திற்கு ரன் கொடுத்து ஆடவர் அணியின் சாபத்தை வாரிக்கட்டிக்கொண்டு இருந்தார்.இதே போல மறக்கப்பட்ட தட்டாங்கல், பல்லாங்குழி, தாயம் போன்ற விளையாட்டுகளும் விளையாடப்பட்டன.இவ்வளவு விளையாட்டு போதாது என்பது போல ரிசார்ட்ஸ் வெளியே இருந்த ஆல மர வேர்களை பிடித்து அஸ்வினி, காயத்ரி, தமிழ்செல்வி போன்ற வாசகிகள் தொங்கி விளையாடினர்.வேர்களை பிடித்தபிடி வலுவாக இல்லாவிட்டால் விழுந்துவிடும் அபாயம் உண்டு என்பதை எடுத்துச் சொல்லி, அவர்களை அழைத்து வரும்படி மூத்த வாசகிகள் ஜெகதா, சந்திரா, நாகேஸ்வரி போன்றவர்களை ஒருவர் பின் ஒருவராக அனுப்பினோம். ஏற்கனவே விளையாடியவர்களும் வரவில்லை; அவர்களை அழைத்து வர ஒருவர் பின் ஒருவராக போனவர்களும் வரவில்லை. போன இடத்தில் அப்படி என்னதான் நடந்தது என்பதை அடுத்த வாரம் சொல்கிறேன் — அருவி கொட்டும்.குற்றாலமும், இரண்டாவது சீசனும்...பொதுவாக ஜூன் மாதம் துவங்கி ஆகஸ்ட் வரைதான் குற்றாலத்தில் சீசன் என்பர். ஆனால், சமீப காலமாக நவம்பரில் துவங்கி, ஜனவரி வரை இரண்டாவது சீசன் உருவாகியுள்ளது.இரண்டாவது சீசன் பெரும்பாலும் ஐயப்ப பக்தர்களால் ஆராதிக்கப்பட்டு வருகிறது. ஐயப்ப பக்தர்கள் எந்த ஊரில் மாலை போட்டு ஐயப்பன் கோவில் போனாலும், ஒரு நாள் குற்றாலம் என்பது போல, பயண திட்டத்தை வகுத்துக்கொண்டு வருகின்றனர்.'குளிர்காலம் என்பதால் கூட்டம் நிறைய இருக்காது; அருவி நீர் ஜில்லென்று இருந்தாலும், இதன் சுகமும், அது கொடுக்கும் ஆனந்தமும் தனி...'என்கின்றனர் ஐயப்ப பக்தர்கள்.இனனொரு ஆச்சர்யமான விஷயம்... முதல் சீசனில் திரும்பிய பக்கம் எல்லாம் அசைவ ஓட்டலாக இருக்கும். ஆனால், இரண்டாவது சீசனில் எந்த ஒட்டலிலும் முட்டை கூட கிடைக்காது; சைவ குற்றாலமாக மாறியிருக்கும். காரணம், ஐயப்ப பக்தர்கள்!குறைவான கூட்டம், தள்ளு முள்ளு கிடையாது, குறைந்த வாடகையில் அறைகள், அருமையான அருவி குளியல் என்று இரண்டாவது சீசன், இனிமையான சீசனாக உள்ளதால், ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி, யார் வேண்டுமானாலும் அனுபவிக்கலாம். -எல்.முருகராஜ்