குருவின் இலக்கணம்!
மக்களை நல்வழிப்படுத்த, ஊர் ஊராக சென்று, தியானக் கூட்டங்களை நடத்தி வந்தார், குரு ஒருவர். அப்படி ஒருமுறை நடந்த கூட்டத்தின் போது, அவரின் சீடர்களில் ஒருவன், எதையோ திருடி விட்டான். மற்ற சீடர்கள், அதை கவனித்து, கையும், களவுமாக பிடித்து, குருவின் முன் நிறுத்தினர்.ஆனால், குருவோ, அதை கண்டுக்காமல் விட்டு விட்டார். மற்ற சீடர்களுக்கு இது ஏமாற்றமாக இருந்தாலும், குருவை மீறி எதுவும் செய்ய இயலவில்லை. சில நாட்களுக்கு பின், சீடர்களுடன் வேறொரு ஊருக்கு சென்று, தியானக் கூட்டம் நடத்தினார், குரு.அதே சீடன், மறுபடியும் ஒரு திருட்டில் ஈடுபட்டு, மற்ற சீடர்களிடம் மாட்டிக் கொண்டான்; குரு முன் நிறுத்தினர். இப்போதும், அதை பெரிதுபடுத்தவில்லை, குரு.சீடர்களுக்கு கோபம் வந்து விட்டது. குருவிடம் சென்று, 'திருடியவன் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, தண்டனை தரணும். இல்லாவிட்டால், நாங்கள் உங்களை விட்டு எங்காவது சென்று விடுவோம்...' என்றனர்.அவர்களிடம், 'நீங்கள் அனைவரும் புத்திசாலிகள். நல்லது, கெட்டது எது என்று உங்களுக்கு புரியும். நீங்க, எங்கு சென்றாலும் மேன்மேலும் நிறைய படித்து, குருவை மிஞ்சிய சீடர்களாக மாறவும் முடியும்.'ஆனால், உங்களால், திருட்டு பட்டம் சூட்டப்பட்ட இவன், நல்லது, கெட்டது எது என்று அறியாதவன். அவன் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.'இப்போது அவனை, இங்கிருந்து துரத்தி விட்டால், அவனை யார் நல்வழிப்படுத்துவர். அதனால், அவன் இங்கேயே இருக்கட்டும். அவனுக்கு நான் குருவாக இருந்து, நல்வழி புகட்டுவேன்...' என்றார், குரு.இவ்வளவையும் திருட்டில் ஈடுபட்ட அந்த சீடன் கேட்டுக் கொண்டிருந்தான். கண்ணீர் மல்க, குருவின் காலடியில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.குரு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பது, சீடர்களுக்கு புரிந்தது. சீடன் என்பவன், குருவிடம் இருந்து நல்லொழுக்கத்தை கற்றுக் கொள்வதோடு, உலக வாழ்வின் மாயைகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் புரிந்ததல்லவா! பி. என். பி.,