உள்ளூர் செய்திகள்

கை விளக்கு!

திரும்பிய திசையெல்லாம் கடல்நீர்; குடிப்பதற்கு, ஒரு சொட்டு நீர் கூட இல்லை -என்பதை போல, திரும்பிய பக்கமெல்லாம் ஏதாவது ஒரு வடிவில் பிரச்னைகள், தயாராக இருக்கின்றன. தப்பிக்க வழி என்ன?பாண்டவர்களின் வளமான வாழ்வு கண்டு, பொறாமை கொண்ட, துரியோதனன், சகுனியுடன் ஆலோசித்தான். பாண்டவர்களை சூதாட்டத்திற்கு அழைத்து, அவர்களின் செல்வங்களை கவர வேண்டும் என்று முடிவானது. புது மண்டபம் ஒன்றை கட்டி, 'புது மண்டப விழாவிற்கு வாருங்கள்... பேசி மகிழலாம்...' என்று, ஓலை எழுதினான், துரியோதனன்; அதில், கையெழுத்திட்டார், திருதராஷ்டிரன்; ஓலையுடன், பாண்டவர்களிடம் போனார், விதுரர்.தகவல் அறிந்த தர்மர், தம்பிகளை அழைத்து, 'பெரியப்பா, திருதராஷ்டிரன் கையெழுத்திட்டு, துரியோதனன் அனுப்பிய ஓலை; சித்தப்பா, விதுரர் கொணர்ந்து இருக்கிறார். புது மண்டப விழாவிற்குப் போகலாமா...' என்று, ஒவ்வொருவரிடமும் தனித்தனியே சொல்லி, அவரவர் கருத்தை கேட்டார்.அப்போது, 'அண்ணா... அந்த ஓலையில் கையெழுத்திட்டவர் யார்...' எனக் கேட்டான், சகாதேவன்.'பெரியப்பா, திருதராஷ்டிரன்...' 'சரி... ஓலையை அனுப்பியது யார்...' என்றான்.'துரியோதனன்...' என்றார்.'ஓலையை எடுத்து வந்தது யார்...' என கேட்டான்.'சித்தப்பா, விதுரர்...' என்றார், தர்மர்.சகாதேவன் விடவில்லை; அதே கேள்விகளையே, மறுபடியும், மறுபடியும் கேட்டான். தர்மருக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.'தம்பி... ஏன் இப்படி, கேட்டதையே திரும்பத் திரும்ப கேட்கிறாய்?' எனக் கேட்டார்.'கோபித்துக் கொள்ளாதீர்கள் அண்ணா... ஓலையில் கையெழுத்திட்டவர், ஒருவர்; அதை அனுப்பியவர், வேறொருவர்; ஓலையை எடுத்து வந்தவர், மற்றொருவர் என, நீங்கள் நினைத்து கொண்டு இருக்கிறீர்கள். அது தவறு... ஓலையில் கையெழுத்து இட்டது, அனுப்பியது, எடுத்து வந்தது எனும், மூன்றையும் செய்தவன், ஒருவன் தான்... அவன் இப்போது, நம் அரண்மனை வாசலில் நிற்கிறான்...' என்றான்.சகாதேவனின் வார்த்தைகளை கேட்டு குழம்பினார், தர்மர்.'யார் அது?' எனக் கேட்டார்.'விதி தான், அது...' என்று முடித்தான், சகாதேவன். திகைத்தார், தர்மர்.நம் செயல்களின் மூலம், நமக்கு நாமே விதித்துக் கொண்டது தான், விதி. சரி... அதை மாற்ற அல்லது அதிலிருந்து விடுபட வழி இருக்கிறதா? விதி அழைத்துச் செல்லும், இருளடர்ந்த வழியில் தவறி விழாமல் இருக்க, என்ன செய்ய வேண்டும் தெரியுமா... தெய்வம் காப்பாற்றும் எனும், நம்பிக்கை விளக்கை ஏந்தி நடந்தால், துயரம் எனும் இருள், ஒருபோதும் நெருங்காது. பி. என். பரசுராமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !