அளவுக்கு அளவானவர்!
எத்தனையோ கோவில்களுக்கு சென்று, சன்னிதியின் முன் நின்று, மூலவரை தரிசித்திருப்பீர்கள்... கர்ப்பக் கிரகத்தில் உள்ள சிலை, உங்கள் உயரத்துக்கோ அல்லது அதை விட உயரமாகவோ, குட்டையாகவோ இருக்கும். தரையில் அமர்ந்து அதை வணங்கும் போது, உயரமான சிலை என்றால், நீங்கள் அமர்ந்திருக்கும் மட்டத்திலிருந்து உயரமாகவும், சிறிய சிலை என்றால், உங்கள் மட்டத்துக்கோ அல்லது அதை விடக் குறைவாகவோ இருக்கும். ஆனால், நின்றாலும், அமர்ந்தாலும், எதன் மீதாவது ஏறி நின்று பார்த்தாலும், ஒரே மட்டமாக தெரியும் அதிசய சிவலிங்கம், தேனி மாவட்டம், சின்னமனுார் பூலாநந்தீஸ்வரர் கோவிலில் உள்ளது.தேனி மாவட்டம், வீரபாண்டி கிராமத்தை சுற்றியுள்ள பகுதி, ஒரு காலத்தில் அளநாடு எனப்பட்டது. இந்நாட்டை, ராஜசிங்கபாண்டியன் ஆண்டு வந்தான். இவன் வேட்டைக்கு சென்ற சமயத்தில், பூலா மரங்கள் அடர்ந்த காட்டுக்கு வந்தான். அதுவே, தற்போதைய சின்னமனுார் பகுதி. அங்கு தங்கியிருந்த போது, தனக்கு தினமும் பால் கொண்டு வரும்படி, மாடு மேய்ப்போர் தலைவனிடம் கூறினான்.அவ்வாறு, அவன் பால் கொண்டு வரும்போது, தினமும், ஒரு பூலா மரத்தின் வேர் தட்டி விட, பால் கொட்டியது. தகவலறிந்த மன்னன் ஆச்சரியத்துடன், அப்பகுதியை தோண்ட, உள்ளே ஒரு லிங்கம் இருந்துள்ளது. அந்த மூர்த்தியிடம், நேரில் தரிசனம் தர வேண்டும் என்று மன்னன் வேண்ட, அவ்விடத்தில் கண்ணைப் பறிக்கும் ஜோதி தோன்றி, வானுக்கும், பூமிக்குமாக விஸ்வரூபம் எடுத்து நின்றது. அவ்வுருவத்தை, தன் உயரத்துக்கு ஏற்ப, காட்சி தரும்படி கெஞ்சினான், மன்னன்.சிவனும் மனமிரங்கி, அவனுடைய உயரத்துக்கு ஏற்ப காட்சியளித்தார். அவன் தரையில் உட்கார்ந்து இறைவனின் கால்களைப் பிடித்தால், அதே அளவுக்கு சுருங்கினார். எழுந்து நின்று வணங்கினால், அவன் முகத்துக்கு நேராக நின்றார். இந்த அருள்காட்சி கண்டு, தன்னை மறந்து, சிவனை ஆலிங்கனம் செய்தான் மன்னன். அப்போது சிவன் மீது பதிந்தது அவன் முகம். 'அளவுக்கு அளவானவரே' என, கொண்டாடினான்.தல வரலாறு எப்படியிருந்தாலும், சிற்பக்கலையின் பேரதிசயம், இங்குள்ள லிங்கம். இதன் நடுப்பகுதியில், ராஜசிங்க பாண்டியன் பதித்த முகம் இருக்கிறது.இக்கோவில் எதிரில் பவதாரிணி கோவில் உள்ளது. இங்கு, 28 அடி உயர விநாயகர் சிலை பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வட்டவடிவில் திசை மாறாமல் வைக்கப்பட்டுள்ள நவக்கிரகங்கள், கோதாவரியில் கிடைத்த சிவலிங்கம் ஆகியவை சிறப்பம்சம். தியான மண்டபமும் உள்ளது. தேனியில் இருந்து, 20 கி.மீ., தொலைவில் உள்ளது, சின்னமனுார்.தி.செல்லப்பா