அம்மாவை பற்றி இவர்...
காந்திஜி: என் அம்மாவை பற்றி நினைக்கும் போதெல்லாம், துறவியை போல், அவர் வாழ்ந்த வாழ்க்கை தான் என் நினைவிற்கு வரும். மிக ஆழமான, மத நம்பிக்கை கொண்டவர். தினசரி பிரார்த்தனைக்கு பின் தான், சாப்பிடுவார்; இதை, ஒரு நாளும் மீறியதில்லை. கடுமையான வேண்டுதல்களை வேண்டி, இம்மி பிசகாமல், அவற்றை பின்பற்றுவார். அவை, பெரும்பாலும் உடலை வருத்திக் கொள்வதாக இருக்கும். உடல்நலம் குன்றிய போதும், அவர் இவற்றை தளர்த்திக் கொண்டதில்லை.ஹென்றி போர்டு - கார் தயாரிப்பில் சாதனையாளர்: எதைச் செய்தாலும் மிக கச்சிதமாக செய்வார், என் அம்மா. சுகாதாரத்தில் அவருக்கு இருந்த ஆழ்ந்த பிடிப்பின் காரணமாகவே, பின்னாளில், என் தொழிற்சாலையை மிகவும் சுத்தமாக வைத்திருக்கும் தீர்மானத்தை என்னால் எடுக்க முடிந்தது. பலதரப்பட்ட கருவிகளை பற்றி தெரிந்து கொள்வதில் எனக்கு மிகுந்த ஆவல். இவ்விஷயத்தில் எனக்கு நிறைய ஊக்கம் கொடுத்தார், என் அம்மா.காமராஜர்: குமாரசாமி நாடாருக்கும், சிவகாமி அம்மையாருக்கும் பிறந்தவர், காமராஜர். இவருடைய பாட்டி, இவருக்கு காமாட்சி என்று பெயரிட்டார். ஆனால், அம்மாவோ ராஜா என்றே அழைத்தார். இதனால், காமாட்சி, ராஜா ஆகிய இரு பெயர்களையும் இணைத்து, காமராஜா என்று பெயரிட்டனர்.தேங்காய் வியாபாரியான அப்பா, காமராஜரின் சிறு வயதிலேயே இறந்து விட்டார். அதன் பின், இவருடைய அம்மா, தன் நகைகளை விற்று, அதில் கிடைத்த பணத்தை வைத்து, குடும்பத்தை நடத்தினார். வறுமையில் செம்மை என்பது, காமராஜரின் மனதில் பதிந்தது இக்கால கட்டத்தில் தான்!ஒருமுறை, காந்திஜியின் உத்தரவின்படி, மதுக்கடை வாசலில் தர்ணா நடந்த போது, அதில் காமராஜரும் கலந்து கொண்டார். இதைப் பார்த்த அவருடைய அம்மா, திருமணமானால், இதையெல்லாம் நிறுத்தி விடுவான் என நினைத்து, திருமண ஏற்பாடுகளை செய்தார். மறுத்த காமராஜர், கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.அப்துல் கலாம்: எங்களுடையது பெரிய கூட்டுக் குடும்பம். இதனால், என் பாட்டியும், அம்மாவும் குடும்பத்தை நடத்த மிகவும் கஷ்டப்பட்டனர். காலை, 4:00 மணிக்கு எழுந்து குளித்து, கணிதம் கற்றுக் கொள்ள சென்று விடுவேன். எனக்கு முன்பாக எழுந்து குளித்து, என்னை தயார்படுத்துவாள், என் அம்மா. கணித வகுப்பு முடிந்து, 5:30 மணிக்கு வந்தவுடன், 'நமாஸ்' செய்ய அழைத்துச் செல்வார், அப்பா. அதன்பின், 8:00 மணிக்கு எளிய சிற்றுண்டி காத்திருக்கும்.வீடுதோறும் நாளிதழ்கள் வினியோகித்து, அதன்மூலம் சிறிது வருமானம் ஈட்டினேன். படித்தபடியே வேலையும் செய்ததால், என் மீது அம்மாவுக்கு அதிக பாசம். 93 வயது வரை வாழ்ந்த என் அம்மா, கருணையின் உறைவிடம்; தினமும், ஐந்து முறை, 'நமாஸ்' செய்வாள். அப்போது, அவள் முகம் தேவதை போல் மின்னும்.நெல்சன் மண்டேலா - தென்னாப்ரிக்காவில் நிறவெறிக்கெதிராகப் போராடிய தலைவர்: என் அம்மாவின் பெயர் நான்கபி; என் அப்பாவிற்கு நான்கு மனைவிகள். என் அம்மா மூன்றாவது மனைவி. எங்கள் இனத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருப்பது, வளமைக்கு சான்று. என் முதல் நண்பர் என் அம்மா தான். நிறைய நீதிக்கதைகளை சொல்லி என்னை வளர்த்தார்.ஒரு கட்டத்தில், கிறிஸ்தவ மதத்துக்கு மாறி, தன் பெயருடன், பானி என்பதையும் சேர்த்துக் கொண்டார். எனக்கும் ஞானஸ்நானம் செய்து வைத்தார். விளையாடுவதற்கு என்னை அனுமதித்து, ஊக்குவித்தார். விளையாட்டில் வெற்றி பெறும் போது கூட, எதிராளியை ஒருபோதும் அவமானப்படுத்தக் கூடாது என்ற நல்லொழுக்கத்தை, அம்மாவின் மூலம் தான் கற்றுக் கொண்டேன். எல்லாருடனும் அன்பாக பழக வேண்டுமென்று அடிக்கடி வலியுறுத்துவார், என் அம்மா.