உள்ளூர் செய்திகள்

நான் ஒரு பார்வையில்லா ராஜா!

வெயில் வறுத்தெடுத்த ஒரு பகல் பொழுது...மதுரை - நத்தம் சாலையில், பாண்டியன் ஓட்டல் பின்புறம் உள்ள ஒரு இளநீர் கடையை நோக்கி பாதங்கள் சென்றன. தென்னை ஓலையால் வேயப்பட்ட அந்த குடிசை கடையில், அங்குமிங்குமாக, குவியல் குவியலாக இளநீர் காணப்பட்டது. அந்த இளநீர் குவியல்களுக்கு நடுவே உட்கார்ந்திருந்தார் பார்வையில்லாத, ராஜா.உழைத்து உழைத்து, கருத்துப்போன உடம்பு, பட்டன் இல்லாத பழைய சட்டை, இளநீர் கறை படிந்த லுங்கி, எப்போதோ வாரிய தலை. ஆனால், இது எல்லாவற்றையும் மறக்க செய்யும் வெள்ளந்தியான சிரிப்பு; இதுதான், பார்வையை இழந்தாலும், நம்பிக்கை இழக்காமல் இளநீர் வியாபாரம் செய்யும் ராஜாவின் அடையாளங்கள்.ரேடியோவில், பழைய சினிமா பாடல்களை ரசித்து கேட்டுக் கொண்டிருந்தவர், கடையின் வாசலில் யாரோ வருவதை உணர்ந்து, பாட்டை நிறுத்தி, 'வாங்க... இளநீர் சாப்பிடுங்க...' என்று அன்போடு சொன்னார்.நாம் யார் என்று அறிமுகம் செய்து கொண்டதும், 'ரொம்ப சந்தோஷம்; நம் கடை இளநீரை சாப்பிட்டு விட்டுதான் பேசணும்...' என்றவர், தட்டிப் பார்த்து, ஒரு இளநீரை தேர்வு செய்து, பின் அரிவாளை எடுத்து, மிக லாவகமாக, நிமிட நேரத்தில் சீவி, நம்மிடம் நீட்டினார். அவரது அன்பை போலவே அமிர்தமாக இனித்தது, இளநீர்.ராஜாவுக்கு, வயது, 62; தெரிந்தது எல்லாமே இளநீர் விற்பது மட்டுமே... சிறு வயது முதலே மாலைக்கண் நோய் இருந்தது, ஒன்பதாவது படிக்கும்போது, பார்வையில் பிரச்னை அதிகரிக்கவே, படிப்பை நிறுத்தி, இளநீர் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்.இளநீர் வியாபாரத்தில் இவர் முன்னேற முன்னேற, இவரது பார்வைத் திறனோ மிகவும் பின்னேறியது. கடந்த, 10 ஆண்டுக்கு முன், சுத்தமாக பார்வை இல்லாமல் போனது.பார்வை போனாலும், பதறாமல், தன் கைகளையே கண்களாக்கி, முழு மூச்சாக வியாபாரத்தில் இறங்கினார். பார்வை இல்லாதவர் என்று பரிதாபம் காட்டுவது இவருக்கு சுத்தமாக பிடிக்காது. உடல் வேகும் வரை மத்தவங்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது, அதற்காக சாகும் வரை உழைக்கணும் என்று சொல்லும் இவர், கடந்த பல ஆண்டுகளாக, இதே இடத்தில்தான் இளநீர் கடை வைத்துள்ளார்.நாகர்கோவில், தேனி பகுதிகளிலிருந்து வரும் இளநீரை, தர வாரியாக பிரித்து, விற்பனை செய்கிறார். இவருக்கு என்று வாடிக்கையாளர்கள் நிறைய உண்டு. இளநீரை கையில் எடுத்து விட்டால், அந்த இளநீர் இவரது கைகளில் பம்பரமாக சுழல்கிறது; அதற்கு மேல் அரிவாள் லாவகமாக வெட்டுகிறது. இதுவரை, ஒரு சிராய்ப்பு கூட கையில் ஏற்பட்டதில்லை. அந்த அளவு அனுபவம். இளநீருக்கான பணத்தை கொடுத்ததும், ரூபாய் நோட்டை தொட்டுப் பார்த்தே அதன் மதிப்பை உணர்ந்து, சரியாக மீதி சில்லரை தருகிறார்.விடிந்ததில் இருந்து இருட்டும் வரை இவருக்கு இந்த கடை தான் உலகம். இருட்டிய பின் ஊமச்சிகுளம், அப்பளக்காட்டில் உள்ள வீட்டிற்கு சென்று விடுவார். மனைவி, குழந்தைகள் உண்டு. 'குடும்பத்தை நடத்துவதற்கு போதுமான வருமானம் வருகிறது; இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்கிறோம். மழை காலத்திலும், குளிர் காலத்திலும் இளநீர் வியாபாரம் சரியாக இருக்காது. அப்போது மட்டும் கொஞ்சம் சிரமம் இருக்கும்; ஆனாலும், கவலைப்பட மாட்டேன்; கடைக்கு வந்துருவேன், யாராச்சும் படியளப்பர்...' என்கிறார், அவருக்கே உண்டான சிரிப்புடன்!இவருக்கு கொடுக்கப்பட்ட இலவச மனை பட்டாவை, யாரோ ஒருவர் அபகரித்து, இவரை விரட்டி விட்டாராம். என்ன, ஏது செய்வது என்று இவருக்கு தெரியவில்லை. 'இப்படியும் ஏமாற்றக்கூடிய ஆட்கள் இருக்காங்கய்யா...' என்று சொல்லி சிரிக்கிறார். அவரின், அப்போதைய சிரிப்பில், வேதனை மட்டுமே வெளிப்பட்டது.இவருடன் பேசுவதற்கான எண்: 80983 14510. எல்.ராகவேந்தர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !