வைட்டமின் டி குறைந்தால்....
சமீபகாலமாக, சத்தமே இல்லாமல், புது ஆபத்து ஆட்டுவிக்க ஆரம்பித்திருக்கிறது. அது, சூரிய ஒளியால் நமக்கு கிடைக்கும் வைட்டமின், 'டி' பற்றாக்குறை தான்.இன்று, 100க்கு, 95 பேருக்கு, இந்த பிரச்னை இருப்பதாக, அதிர வைக்கின்றனர், மருத்துவர்கள். அதிலும் குறிப்பாக, வெயிலில் அதிகம் போகாத பெண்களும், குழந்தைகளும், அதிகம் பாதிக்கப்பட்டு, மொத்த உடல் நலனையுமே இழக்கின்றனர்.சூரிய ஒளியே உடம்பில் படாமல், குழந்தைகளை, அடுக்கு மாடி குடியிருப்புகளில், 'பொத்தி பொத்தி' வளர்க்கும் காலம் இது. அதேபோல், கொஞ்சம் வெயில் உடம்பில் பட்டாலே, 'ஐயோ... 'ஸ்கின்' கறுத்து விடும்...' என்று, இளம்பெண்கள், வெயிலில் வராமல் தவிர்க்கின்றனர். இரு சக்கர வாகனம் ஓட்டினாலும் கூட, முழுதாக முகத்தையும், உடம்பையும் மூடியபடி போகின்றனர்.இப்படி, வெயில் படாமல், ஓடி ஒளிந்தபடி வீட்டுக்குள்ளும், 'ஏசி' அறையிலும், வாழ்வதால், என்னென்ன பிரச்னை வருகிறது தெரியுமா...* அடிக்கடி உடம்பு வியர்த்து, சளி பிடிக்கிறதா...* 'கை வலிக்குது, கால் வலிக்குது, அடிக்கடி உடம்பு அலுத்து போகுது...' என்று, சொல்கின்றனரா...உடனே, வைட்டமின், 'டி' குறைவாக இருக்கிறதா என, மருத்துவ பரிசோதனை செய்து பாருங்கள்.தலையில் அதிகம் வியர்ப்பது, முடி அதிகம் கொட்டுவது போன்ற சின்ன சின்னதாக தோன்றி, இதயம், நுரையீரல், சிறுநீரகம் வரை, உடம்பின் முக்கிய அங்கங்களில் பிரச்னை ஏற்படுவது, வைட்டமின், 'டி' குறைபாட்டால் தான். மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய பிரச்னை இது என, எச்சரிக்கின்றனர், மருத்துவர்கள்.* கை, கால் மூட்டுகளில் குடைச்சலான வலி அதிகமாக இருத்தல்* எலும்பை ஊடுருவினால் போல வலி இருத்தல்* லேசான வெயிலில் போனாலே, தோலில் எரிச்சல் ஏற்படுதல்* உடம்பின் சூடு வழக்கத்தை விட அதிகமாக இருப்பது* உடலில் ஒருவித எரிச்சல் உணர்வு எப்போதும் இருப்பது* லேசாக இடித்து கொண்டாலும், உயிர் போவது போல் வலியை உணர்வது* சின்னதாக ஒரு பொருளை துாக்க கூட சிரமப்படுதல்இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால், மருத்துவரை பாருங்கள். உங்களுக்கு வைட்டமின், 'டி' பற்றாக்குறை இருக்கலாம். ஒருவேளை, வைட்டமின், 'டி' பற்றாக்குறை தவிர, மற்ற பிற காரணங்களாலும் வரலாம். இந்த அறிகுறிகளை மட்டுமே வைத்து, வைட்டமின், 'டி' பற்றாக்குறை என்று உறுதி செய்ய முடியாது. ஆனால், எளிமையான ரத்த பரிசோதனையில் உறுதிபடுத்தி விடலாம். முன் காலத்தை விடவும் கூடுதலாக இக்கால பெண்கள் உழைக்கின்றனர். அதுவும், சூரிய ஒளி படாத வேலைகள். இதுதான் பிரச்னையே என்கின்றனர், மருத்துவர்கள்.நம் உடம்பின் அடிப்படை கட்டமைப்பில், வைட்டமின், 'டி'யின் பங்களிப்பு மிக முக்கியமானது. கால்ஷியம் உட்கிரகத்தல் மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு திறன், கணையத்தின் செயல்பாட்டை துாண்டி, இன்சுலின் சுரப்பை ஒழுங்குபடுத்துதல் - நீரிழிவு வராமல் தடுத்தல்...'ஹார்மோன்'களின் செயல்பாட்டில் பக்கத்துணை, சிறுநீரகம், இதயத்தின் செயல்பாடுகளில் உறுதுணை, இதய தசைகளுக்கு (பெரிகார்டியம்) வலு சேர்ப்பது என்று, நம் உடம்பில், வைட்டமின், 'டி' மிக முக்கிய பங்களிப்பு செய்வதாக கூறுகின்றனர், மருத்துவர்கள்.தாவரங்கள் முதல், சூரியனுக்கு கீழே இருக்கும் சகல ஜீவராசிகளும் உயிருடன் வாழ, சூரிய ஒளியின் அபரிமிதமான ஆற்றல் தேவைப்படுகிறது. குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு, முக்கிய ஆதாரம், வைட்டமின், 'டி!' அது, சூரிய ஒளியில் இருந்தே பெரும்பாலும் நமக்கு கிடைக்கிறது.சிறியவர்கள் மட்டுமல்ல, பெரியவர்கள், குறிப்பாக, 'டீன் - ஏஜ்' பெண்களும், கெண்டைக்கால் சதைப்பிடிப்பு, மூட்டு வலி, முழங்கால் வலி, முதுகு வலி என, பல பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் இருக்கும் அடிப்படையான ஒரு பிரச்னை, கால்சிய சத்து பற்றாக்குறை. இதற்கு முக்கிய காரணம், கால்சியத்தை உடலில் சேர்க்கிற, வைட்டமின், 'டி' பற்றாக்குறை தான்.முன்பெல்லாம் சிறுவர்களுக்கு, பால் பல் விழுந்தால், ஓரிரு மாதங்களில், புது பல் முளைத்து விடும். சமீபகாலமாக, பற்கள் முளைக்க ஓர் ஆண்டு கூட ஆகிறது. இதற்கும், வைட்டமின், 'டி' பற்றாக்குறை தான் காரணம்.வைட்டமின், 'டி' உடம்பில் சேராவிட்டால், நிறைய பாதிப்புகள் வரும். அதனால், கால்சியம் பற்றாக்குறை வரும். கால்சியம் பற்றாக்குறை வந்தால், 'ஆஸ்டியோபோரசிஸ்' - எலும்பு உளுத்து போகுதல், 'ஆஸ்டியோமலேசியா' எனப்படும், எலும்பு மென்மையாகி, அதன் கடின தன்மை குறைந்து போகும். குழந்தைகளுக்கு வரும், 'ரிக்கர்ட்ஸ்' - எலும்பு வளைதல் போன்ற பாதிப்புகள் வரும். உடலில் கால்சியம் குறைவாக இருப்பவர்களுக்கு, 'டைப் 1 டயாபடீஸ்' வரும் வாய்ப்பு அதிகம்.'ரெனின்' என்கிற, 'ஹார்மோன்' சுரப்பை, வைட்டமின், 'டி' உடம்பில் அதிகப்படுத்தும். இந்த, 'ஹார்மோன்' ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். இதனால், பி.பீ., கட்டுப்பாட்டில் இருக்கும். பொதுவாகவே, மனித உடல், ஒரு கலவையான இயந்திரம். அது, சிறப்பாக இயங்க, தினமும் எல்லா வகையான ஊட்டச்சத்தும், சரி விகிதத்தில் தேவை. குறிப்பாக, வைட்டமின், 'டி' அவசியம் தேவை.காலை, 6:30 மணி முதல், 7:30க்குள்ளாக அடிக்கும் இளவெயிலில், அகச்சிவப்பு கதிர்கள் இருக்கும். பனி காலங்களில், இந்த நேர அளவு சற்றே மாறுபடும். இது ரொம்ப நல்லது. வைட்டமின், 'டி' உற்பத்திக்கு, இந்த இள வெயிலில் சில நிமிடங்கள் நின்றால் போதுமானது.காலை, 9:00 மணியிலிருந்து, 12:00 மணி வரை அடிக்கும் வெயிலில், புற ஊதா கதிர்களின் அலைவீச்சு இருக்கும். 'அல்ட்ரா வயலட்'டின், 'டைப் ஏ' மற்றும் 'பி' கதிர் வீச்சுகள் இருக்கும். பெரிய பாதிப்பு இருக்காது. இந்த வெயிலில் நடமாடும்போதும் நம்மை அறியாமல், வைட்டமின், 'டி' உற்பத்தியாகி விடும்.சில நேரம் அதிக பாதிப்பில் உள்ளவர்களுக்கு, முற்பகல், 11:00 - 12:30 மணி வரையிலான வெயிலை, மருத்துவர் பரிந்துரை செய்வார். இது, நபருக்கு நபர் மாறுபடும்.உச்சிவெயில் மண்டையை பிளக்கும் என்பதால், அதை தவிர்ப்பது நல்லது. இந்த நேரத்தில், 'அல்ட்ரா வயலட், 'சி' டைப்' கதிர்வீச்சு வரும். அதனால், தோலில் கருநிற புள்ளிகள், தோல் சிவந்து போதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.