இது, உடை அல்ல; பால்!
பாலில், காபி, டீ போடலாம் பால்கோவா செய்யலாம்... வேறு என்ன செய்ய முடியும்? ஆனால், லண்டனை சேர்ந்த, பிரபல பெண் புகைப்படக் கலைஞர், ஜரோஸ்லவ் விஜோர்கிவிச் என்பவர், 'கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தால், பாலில், புதுமையான உடைகளையே தயாரிக்கலாம்...' என்கிறார். தான் கூறியது, வெறும் வாய்ப் பேச்சு அல்ல என்பதை, நிரூபித்தும் காட்டி விட்டார். சற்றே, பதப்படுத்தப்பட்ட தூய பாலை, லிட்டர் கணக்கில் வாங்கி, அதை, பிரபல மாடல் அழகிகள் மீது ஊற்றி, மிக வேகமாக படம் பிடிக்கும், அதி நவீன கேமராக்கள் மூலம், படம் பிடித்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்தால், இதுவரை பார்த்திராத, புதுமையான உடைகளை, மாடல் அழகிகள் அணிந்திருப்பது போல், காட்சி அளிக்கிறது. பிரபல நிறுவனத்தின் காலண்டரில் வெளியிடுவதற்காக, இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாம். ஆனால், புகைப்படங்களை பார்க்கும் பலரும், 'பாலில் உடையா? நம்ப முடியவில்லையே. கிராபிக்ஸ் வேலையாக இருக்கும் போல் தெரிகிறது' என, சந்தேகம் எழுப்புகின்றனர். இது குறித்து, ஜரோஸ்லவ் கூறுகையில், 'இதற்காக, எவ்வளவு சிரமப்பட்டோம் என்று, எங்களுக்கு தான் தெரியும். இதில், எந்த மாயாஜாலமும் இல்லை. புகைப்படம் எடுக்கப்பட்டபோது, அதை வீடியோவும் எடுத்துள்ளோம். அதை, வெளியிடும்போது, சந்தேகம் எழுப்புவோர், காணாமல் போய் விடுவர்...' என்கிறார்.- ஜோல்னா பையன்.