கந்த புராணம் சொல்லும் பாடம்!
'அகலக்கால் வைக்காதே'- என்பது பழமொழி.நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் துாக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும் என்கிறது, திருக்குறள். மரக் கிளையின் நுனியில் ஏறி நின்றவர், அதற்கு மேலே செல்ல முயற்சிப்பாராயின், அவரது உயிருக்கு முடிவாகி விடும் என்பது, இதன் பொருள்.திருவள்ளுவர் வாக்கையும், பழமொழியையும் மெய்ப்பிக்கும், கந்தபுராணம் சொல்லும் கதை இது:கலிங்க நாட்டில், தருமதத்தன் என்ற வியாபாரி இருந்தார். வசதிக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. பலவிதமான தர்மங்கள் செய்து, பெரும்புகழ் பெற்றவராகவும் இருந்தார். அமைதியாகப் போய் கொண்டிருந்த, அவரின் வாழ்க்கையில், இடையூறுகள் வர துவங்கின. தருமதத்தனின் பெற்றோர் இறந்தனர்; துயரம் தாங்காமல், தனிமையிலேயே பொழுதைக் கழிக்கலானார். ஒருநாள், தருமதத்தன் தனியாக இருந்த நேரத்தில், அதிக அளவிலான ஆடம்பர அலங்காரங்களுடன் ரசவாதி ஒருவர் வந்தார். 'தருமதத்தா... நான் ஒரு ரசவாதி. இரும்பைப் பொன்னாக்குவேன். கடுந்தவம் செய்து பெற்ற வித்தை அது. குரு பக்தி உள்ளவர்களுக்கு மட்டுமே சொல்லக்கூடியது. குற்றம் இல்லாத உனக்காக செய்வேன். உன்னிடம் உள்ள பொருட்களை எல்லாம் என்னிடம் தந்தால், அனைத்தையும் தங்கமாக மாற்றித் தருகிறேன்...' என்றார்.ரசவாதியின் தோற்றத்திலும், வார்த்தை ஜாலங்களிலும் தன்னை இழந்தார், தருமதத்தன்.தன்னிடம் இருந்த செல்வங்களையும், ஆபரணங்களையும் எடுத்து வந்து, ரசவாதியிடம் சமர்ப்பித்தார். அது மட்டுமல்ல, தன்னிடம் இருந்த நிலம், ஆடு, -மாடுகள் என அனைத்தையும் விற்றார்; ஆசையின் காரணமாக அறத்தையும் விற்றார் என்கிறது, கந்த புராணம். அதாவது, தர்மம் செய்வதற்கு என்று இருந்த சொத்துக்களையும் விற்றார் என்பது பொருள்.அனைத்தையும் ரசவாதியிடம் சமர்ப்பித்தார், தருமதத்தன். ரசவாதியோ, அனைத்தையும் தங்கமாக்கி ஒரு குடுவையினுள் வைத்துக் கொண்டார்; ரசவாதம் செய்வதைப் போல, பெரும் புகையைக் கிளப்பினார். புகை, தருமதத்தனின் பார்வையை மறைக்க, தங்கம் நிறைந்த குடுவையை தன் ஆடையில் மறைத்து, அதேபோல, போலி குடுவை ஒன்றை தயாராக வைத்துக் கொண்டார், ரசவாதி.புகை தணிந்ததும், தன் கையிலிருந்த குடுவையை தருமதத்தனிடம் தந்து, 'இதை இந்தத் தணலில் வை...' என்றார். தருமதத்தனும் அப்படியே செய்தார்.'உண்ணாமல் உறங்காமல், யாரோடும் பேசாமல், என்னையே தியானம் செய்து கொண்டு இரு. நான் காளி கோவிலில் போய் ஒரு யாகம் செய்து, நான்காம் நாள் திரும்புவேன்...' என்று, அங்கிருந்து வெளியேறினார்.தருமதத்தனும், ரசவாதி சொன்னபடியே செய்தார். நான்காவது நாளும் கடந்தது. அவர் திரும்பவில்லை. ரசவாதியை தேடி, பல இடங்களிலும் அலைந்தார், தருமதத்தன்; அவர் அகப்படவில்லை.'இருப்பதை விட்டு விட்டு, பறப்பதை பிடிக்க ஆசைப்பட்டேன். இருந்ததும் போய் விட்டதே...' என்று, புலம்பிய தருமதத்தன், மிகுந்த துயரத்தால் இறந்து போனார்.'இருப்பதைக் கொண்டு திருப்தி அடை; முறைகேடான வழியில் முன்னேற முயலாதே...'- என, கந்தபுராணம் நடத்தும் பாடம் இது. பி.என். பரசுராமன்