கலைவாணர் என்.எஸ்.கே. (13)
கலைவாணர் நாடங்களில் நடித்த காலத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றது. அது... 'கலைவாணரும், மதுரமும் சேர்ந்து நடித்தால் தான் நாடகத்திற்கு கூட்டம் வரும்; இருவரில் ஒருவர் பிரிந்தாலும் வசூல், 'டல்'லாகிவிடும்...' என்று சிலர் பேசியது, கலைவாணரின் காதில் விழுந்தது.அப்போது, ராமநாதபுரத்தில், நாடகம் நடத்த ஒப்புக் கொண்டு, ஸ்ரீரங்கத்தில் நாடக நடிகர்களோடு தங்கியிருந்தார், கலைவாணர். நாடகம் நடத்த வேண்டிய நாளன்று, காரில் ஏறிய கலைவாணர், 'ராமநாதபுரம் நாடகத்திற்கு, மதுரம் இல்லாமல் நாம் மட்டுமே கிளம்புகிறோம்; மதுரத்தைத் தவிர, மற்றவர்கள் காரில் ஏறுங்கள்...' என்றார்.அதைக் கேட்டு மதுரமும், மற்றவர்களும் திகைத்தனர். ஒரு சிலருக்கு, 'மதுரமில்லாமல் நாடகம் நடக்குமா, நடந்தாலும் கூட்டம் வருமா...' என்ற ஐயம் எழ, வெளிக்காட்டாமல் காரில் ஏறினர். மதுரம் காரில் ஏறாததைக் கண்டு, காரை எடுக்க தயங்கினார், டிரைவர் ராஜ்.அதை புரிந்து, 'ஏன் தயங்குறே... வண்டிய எடு; மதுரம் இல்லாமத் தான், ராமநாதபுரத்தில் நாடகம் நடத்த முடிவு செய்திருக்கோம்...' என்றார், கலைவாணர்.ராமநாதபுரத்தில் நாடகத்தின் துவக்க காட்சியில் தோன்றிய கலைவாணர், நாடக பாத்திரத்திற்குரிய வசனங்களைப் பேசாமல், 'நாடகம் பாக்க வந்திருக்கும் ரசிகப் பெருமக்களே...' என்று துவக்கினார். கூட்டம் அவரையே ஆவலோடு நோக்கியது. திரைமறைவில் ஒப்பனை செய்தபடி இருந்த நாடகக் குழுவினரும், கலைவாணர் சொல்லப் போகும் அறிவிப்பைக் கேட்டு, மக்கள் நாடகக் கொட்டையில் இருப்பரா அல்லது வெளியேறுவரா என்று தெரியாமல் அமைதியாக இருந்தனர்.தொண்டையை மெதுவாக கனைத்து, 'ரசிக பெருமக்களே... மதுரம் உடல் நலக் குறைவால் ஸ்ரீரங்கத்தில் தங்கியுள்ளார். நான் மட்டும் நடிக்கும் நாடகத்தை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களா அல்லது மதுரமும் சேர்ந்து நடித்தால் தான் நாடகம் பார்ப்பீர்களா... உங்களுடைய கருத்தை அறிய விரும்புகிறேன்...' என்றார்.அதைக் கேட்டதும், உற்சாகக் குரலில், 'நாங்கள் உங்களுக்காகவே நாடகம் பார்க்க வந்துள்ளோம்; மதுரம் இல்லாமலேயே, நாடகம் நடத்தலாம்...' என்று உரத்த குரலில் கூறினர், மக்கள். அதன்படி, அன்று, மதுரமின்றி, நாடகம் வெற்றிகரமாக நடைபெற்றது.இச்செய்தியை கேள்விப்பட்ட மதுரம், கலைவாணரது தனித்திறமையை மதிக்க பெருங்கூட்டம் இருக்கிறது. அதனால் தான், நாம் இல்லாமல் கூட நாடகம் வெற்றிகரமாக நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டார்.நாடகம் முடிந்து, ஸ்ரீரங்கத்திற்கு காரில் திரும்பிய கலைவாணர், தன் நடிக கோஷ்டியிடம், 'இது, என்னை பற்றி மதுரம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவளுக்கு வைத்த பரீட்சை அல்ல; மக்களின் மனதை சோதிக்க நான் வைத்த தேர்வு. இதுபோன்ற சமயத்தில் தான், மக்கள், என்னை எப்படி மதிக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது...' என்றார், நெகிழ்ச்சியாக!கலைவாணரின் இச்சமாதானத்தை கேட்டு, காரில் வந்த நடிகர்கள், பெருமிதம் கொண்டனர்.அந்நாளில் பட முதலாளிகளும், சினிமா இயக்குனர்களும் கலைவாணரை மிகவும் மதித்தனர். அவரது, நற்கருத்துகளுக்காக, அவரை கண்ணியமாக நடத்தினர். அவர்களுள் ஒருவர் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் இயக்குனர், டி.ஆர்.சுந்தரம்.எத்தனையோ நடிகர், நடிகையருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய, டி.ஆர்.சுந்தரத்தையே தன் நடிப்பாற்றலால், தம் வயப்படுத்தியவர், கலைவாணர்.மாணிக்கவாசகர் என்ற தமிழ் படத்தில் நடிப்பதற்காக, கலைவாணரும், மதுரமும் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவுக்கு வந்தனர். தன் வழக்கமான கெடுபிடிகளுடன் படத்தை இயக்கிய டி.ஆர்.சுந்தரம், படப்பிடிப்புக்கு நடுவே, தேவையில்லாமல் மிரட்டுவதையும், பெருங்குரலில் தம் கருத்துகளை, வெளியிடுவதையும் கண்டார், கலைவாணர்.அதுவரை, டி.ஆர்.எஸ்., சொல்வதை அப்படியே கேட்டு, நடிப்பது தான் நடிகர், நடிகையரின் வழக்கம். யாரும் அவருக்கு எதிராக குரல் எழுப்பியதில்லை. அன்று, மாணிக்கவாசகர் படப்பிடிப்புக்கு நடுவே, தம் கருத்தைக் கூறிய டி.ஆர்.எஸ்.,சிடம், தைரியமாக, 'நீங்கள் விஷயம் தெரிந்த இயக்குனர்; வெளிநாடு சென்று, பெரும் படிப்பு எல்லாம் படித்து விட்டு வந்திருக்கிறீர்கள் என்பதை ஏற்று கொள்கிறேன். ஆனால், இக்காட்சியில், நானும், மதுரமும் எப்படி நடித்து முடிக்கிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். இக்காட்சி, படமாக்கப்பட்ட பின், எப்படி அமைந்துள்ளது என்பதை, திரையிட்டு பாருங்கள். உங்களுக்கு திருப்தி ஏற்படவில்லை என்றால், படத்திலிருந்து இக்காட்சியை, வெட்டி எறிய சொல்லுங்கள். அதற்கு செலவான பணத்தை தந்து விட, தயாராக இருக்கிறேன்...' என்றார், கலைவாணர்.இப்படி கலைவாணர் தம்முன், துணிந்து கூறியதும், அதிர்ச்சியும், ஆத்திரமும் ஏற்பட்டாலும், அவர் சொன்னதில் நியாயம் இருப்பதால், கஷ்டப்பட்டு கோபத்தை அடக்கி, படப்பிடிப்பு அறையிலிருந்து வெளியேறினார், டி.ஆர்.எஸ்.,'இயக்குனர் சீற்றத்தோடு போறாரே, இனி, என்ன ஆகுமோ...' என்று, படப்பிடிப்பு அறையில் இருந்தவர்கள் கலங்கினர். ஒரு சிலர், 'இப்படி கேட்க ஒருவராவது இருந்தாரே...' என, உள்ளூர மகிழ்ந்தனர்.படப்பிடிப்பு அறையிலிருந்து வெளியேறிய, டி.ஆர்.எஸ்., அக்காட்சி படமாகி முடிந்த பின்பும், 'செட்டு'க்குள் வரவில்லை. ஆனால், கலைவாணர் கூறியபடி, அக்காட்சியை, 'எடிட்' செய்து, திரையிட்டு பார்த்த போது, அவரது தனி திறமையை தெரிந்து கொண்ட டி.ஆர்.எஸ்., உடனே, கலைவாணரை அழைத்து, பெருந்தன்மையோடு தட்டிக் கொடுத்து, பாராட்டினார்...'கிருஷ்ணா... மாணிக்கவாசகர் படம் மட்டுமல்ல, இனி, மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில், உன் தொடர்புள்ள, காமெடி காட்சிகள் படமாகும் போது, நான் தலையிட மாட்டேன். உன் விருப்பம் போல், எப்படி வேண்டுமானாலும், நகைச்சுவை காட்சிகள் அமைத்து நடிக்கலாம். உன் திறமையை நம்பி, இந்த உரிமையை உனக்கு அளிக்கிறேன்...' என்றார், உற்சாகமாக!அவர் அறிவித்தது போலவே, கடைசி வரையில் நடந்து கொண்டார், டி.ஆர்.எஸ்., மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில், கலைவாணரும், மதுரமும் நடிக்க வந்தால், படப்பிடிப்பு அறைக்குள், அவர் நுழைவதே இல்லை. அப்படிப்பட்ட சிறப்பை, அந்நாளில், பெற்றவர், கலைவாணர் ஒருவரே!சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் கலைவாணர் நடிக்க சென்றிருந்த சமயம், அங்கு பணியாற்றி வந்தார், மு.கருணாநிதி. அவரைப் பற்றி, ஏற்கனவே சிலர், 'திருவாரூரை சேர்ந்த ஒரு இளைஞர், மிக எழுச்சியோடு, நல்ல தமிழில், புரட்சிகரமான கருத்துகளோடு, வசனம் எழுதுகிறார், பெயர் மு.கருணாநிதி...' என்று கூறியிருந்தனர்.அன்று தம்மை சந்திக்க வந்திருந்த கருணாநிதியை உற்று நோக்கினார், கலைவாணர். மெலிந்த உருவத்தோடு, கைகளை குவித்து வணங்கியவரைப் பார்த்து, அருகில் இருந்தவர்களிடம், 'பார்க்கச் சிறிய ஆளாக இருக்கிறாரே என்று ஆச்சரியப்படாதீர்கள். ஆளுக்கும், உருவத்திற்கும் மதிப்பில்லை; அறிவுக்கு தான் மதிப்பு...' என்றார், கலைவாணர். அதைக் கேட்டதும் மெய்சிலிர்த்து, முதல் சந்திப்பிலேயே தம்மை பற்றி, சரியாக எடை போட்டதை கண்டு, அவரிடம் மட்டற்ற ஈடுபாடு கொண்டார், கருணாநிதி.அன்று, மாடர்ன் தியேட்டர்சில் அவரின் பேனா ஆற்றலை அறிந்த கலைவாணர், தாம் தயாரித்த, பணம் படத்திற்கு வசனம் எழுத, அவருக்கு வாய்ப்பளித்தார். அப்படத்தில், கருணாநிதி எழுதிய வசனங்கள், கலைவாணரை மிகவும் கவர, கருத்தாழம் நிறைந்த ஒரு சில வசனங்களை, தம்மை காண வருவோரிடம் சொல்லி, சிலாகிப்பார்.பணம் படத்திற்காக, கருணாநிதி எழுதிய வசனத்தில் கலைவாணரை மிகவும் ஈர்த்த வசனம் இது:'பணம்... மோகனமான மூன்றெழுத்து; முட்டாளின் கையிலே சிக்கும்; முரடரின் கையிலே கொஞ்சும்...'- இதுபோன்ற, வசனங்களை அடிக்கடி சொல்லி, தம்மையும், மற்றவர்களையும் உற்சாகப்படுத்தும் தனிகுணம், கலைவாணருக்கு இருந்தது.— தொடரும்.நன்றி: வ.உ.சி., நூலகம்பதிப்பாளர் மற்றும் நூல் விற்பனையாளர்.மா. பாலசுப்ரமணியன்