உள்ளூர் செய்திகள்

கள்வர்கள் - கதாகாலட்சேபம்!

ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமையைக் கொடுத்திருக்கிறது, தெய்வம். அதை வைத்து நலம்பெற வேண்டும்; எதிர்பாராத பிரச்னைகளில் இருந்து அது காப்பாற்றும். 19-ம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் நடந்த இந்த வரலாறு அதை மெய்ப்பிக்கும்.தஞ்சையிலிருந்து பக்கவாத்தியக் குழுவினரோடு புறப்பட்டு, ஓர் ஊரில் கதாகாலட்சேபம் செய்து, ஊர்க்காரர்கள் கொடுத்த சன்மானங்களோடு, இரவோடு இரவாகப் புறப்பட்டார், பாகவதர் ஒருவர். அவர்கள் வந்த மாட்டு வண்டிகள், ஊர் எல்லையைத் தாண்டி, அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் புகுந்தன. கும்மிருட்டு. வண்டிக்குள் இருந்த பின்பாட்டுக்காரர், 'இந்தப் பக்கம் தீவட்டிக் கொள்ளைக்காரர்கள் அதிகமாம்...' என்றார்.அவர் சொல்லி முடிப்பதற்குள், 'ஏய்... நிறுத்து வண்டியை...' என்று, சூழ்ந்து கொண்டனர், தீவட்டி ஏந்திய கொள்ளையர்கள். 'ம் ம்... இறங்குங்கள் கீழே...' என்றான், கொள்ளையர் தலைவன்.பாகவதர் உட்பட அனைவரும் இறங்கினர்.'கழட்டுங்கள் எல்லாவற்றையும். இன்று, சரியான வேட்டை...' என்றான், கொள்ளையர் தலைவன்.'சரி... இதுவும் இறைவன் திருவிளையாடல்...' என்று எண்ணிய பாகவதர், துண்டை விரித்து ஆபரணங்களை எல்லாம் கழற்றி போட்டார். சன்மானமாகக் கிடைத்த பணத்தையும் அதில் போட்டார். 'ஏது இவ்வளவு பணம்...' என்றான், கொள்ளையர் தலைவன். 'நான் கதாகாலட்சேபம் செய்பவன். பக்கத்தில் உள்ள கிராமத்தில் கதாகாலட்சேபம் செய்துவிட்டு வருகிறேன். இந்தப் பணம் அங்கே கொடுத்தனர்...' என்று தன்னைப் பற்றிச் சொன்னார், பாகவதர்.'இவ்வளவு சன்மானம் கிடைக்கிறது என்றால், உங்கள் கதை நன்றாகத்தான் இருக்க வேண்டும். அங்கே சொன்ன கதையை இங்கே சொல்லுங்கள்; நாங்களும் கேட்கிறோம்...' என்றான்.பக்கவாத்தியங்களுடன், வள்ளிக்கல்யாணம் எனும் தலைப்பில் கதாகாலட்சேபம் செய்தார், பாகவதர். நொண்டிச்சிந்து, காவடிச்சிந்து, தெம்மாங்கு பாடல்கள் என பாடி, கதாகாலட்சேபம் செய்து, 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...' என, கூவி முடித்தார்.கொள்ளைக்காரர்களும் மெய்மறந்து கேட்டனர்.ஆபரணங்களும், பணமும் அடங்கிய மூட்டையை, பாகவதரின் காலடியில் வைத்து, விழுந்து வணங்கி, 'ஐயா... உங்கள் கதாகாலட்சேபத்திற்கு, என்னால் சன்மானம் எதுவும் தர முடியவில்லையே...' என்று வருந்தினான், கொள்ளையர் தலைவன்.'வருந்தாதே... இன்று முதல் இந்தத் தீய செயலை விட்டு விடு. அதுவே நீ தரும் சன்மானம்...' என்றார், பாகவதர்.'சத்தியமாக, நாங்கள் இனி கொள்ளையடிக்க மாட்டோம்...' என்றான். தீமை செய்ய வந்த திருடர்களை திருத்தியவர், கிருஷ்ண பாகவதர்; 19-ம் நுாற்றாண்டில் மிகவும் புகழ்பெற்றவர்.பி. என். பரசுராமன் ஆன்மிக தகவல்கள்!அன்னம் முதலியவற்றை, எவர்சில்வர் பாத்திரத்தில் நேரடியாக வைத்து, தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக் கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து, அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !