உள்ளூர் செய்திகள்

திரையுலக கர்ணன் ஜெய்சங்கர்! (14)

காலம் வெல்லும் படத்தின் மற்றொரு சண்டைக் காட்சியிலும், பகீர் அனுபவம் ஏற்பட்டது. ஒரு காட்சியில், அதிவேகமாக குதிரையில் வரும் நாயகன், ஜெய்சங்கர், அதில் இருந்தபடியே லாவகமாக தரையில் கிடக்கும் துப்பாக்கியை எடுத்து, எதிரிகளை சுட வேண்டும்.படத்தில் முக்கியத்துவம் பெற்ற இக்காட்சி, மிக, 'ரிஸ்க்' ஆனது என்பதால், 'டூப்' போட்டு எடுக்க முதலில் முடிவானது. அதை மறுத்த ஜெய், 'ஜேம்ஸ்பாண்ட் பட்டம் எனக்கு; 'ரிஸ்க் டூப் ஆர்ட்டிஸ்டு'க்கா...' என, தானே அந்த காட்சியில் நடிக்க, தயாரானார்.கேமரா ஓட துவங்கியது. ஜெய்யை ஏற்றிய குதிரை சீறிக் கிளம்பி, துப்பாக்கி கிடந்த இடத்தை நெருங்கியது வரை, எதிர்பார்த்தபடியே நடந்தது. ஒத்திகையில், பயிற்சியாளர் சொல்லிக் கொடுத்தபடி, ஜெய்சங்கர் வளைவதற்கு சாதகமாக, தானும் சமர்த்தாக சாய்ந்து ஒத்துழைத்த குதிரை, 'டேக்'கின் போது சொதப்பியது.குதிரையில் இருந்தபடியே துப்பாக்கியை எடுக்க, சற்று சாய்வாக உடலை வளைத்தார், ஜெய். ஆனால், கம்பீரமாகவே இருந்து விட்டது, குதிரை. அதனால், பேலன்ஸ் இழந்து தரையில் விழுந்தார். பதற்றமான குதிரை, இன்னும் வேகமாக திமிறி ஓடத்துவங்கியது. குதிரையின் லகானில் கால் சிக்கியதால், ௦.௫ கி.மீ., துாரம் குதிரையால் இழுத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவத்திலும், ஆபத்தை உணர்ந்த ஜெய், சாதுர்யமாக தன் தலை தரையில் படாதவாறு துாக்கிக் கொண்டதால், பெரும் ஆபத்திலிருந்து தப்பினார்.'இந்த மாதிரி, 'ரிஸ்க்' ஆன காட்சிகளை தவிர்க்கலாம்...' என்றார், இயக்குனர் கர்ணன். 'ரசிகர்கள், என்னை தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்னு கொண்டாடுறாங்க. அந்தப் பெயர் கிடைக்கிறது அவ்வளவு சுலபமா என்ன... இப்படி சிரமப்பட்டால் தான் அவங்களுக்கும், 'த்ரில்லிங்' இருக்கும். எனக்கும் அந்தப் பெயரை ஏத்துக்க மனசாட்சி இடம் தரும். அடுத்த காட்சி எங்க...' என கூறியபடி தயாரானார், ஜெய்சங்கர்.தமிழ் சினிமாவில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே.பாலசந்தருடன் இணையும் வாய்ப்பை வழங்கியது, நுாற்றுக்கு நுாறு படம். படத்திற்கு மக்கள் வழங்கிய மதிப்பெண்ணும் அதுவே.ஸ்ரீவித்யா, லட்சுமி, விஜய லலிதா, ஜெமினி கணேசன் என, பெரிய பட்டாளத்துடன் இந்த படத்தில் நடித்தார்.ஒழுக்கத்தில் சிறந்த பேராசிரியர் மீது, மாணவி ஒருத்தி, கல்லுாரி அறையிலேயே வைத்து தன்னை மானபங்கப்படுத்த முயன்றதாக களங்கம் சுமத்துகிறாள். தொடர்ந்து மேலும் சில பெண்கள், அதே குற்றச்சாட்டை பேராசிரியர் மீது சுமத்துகின்றனர். மாணவி ஏன் அவ்வாறு சொன்னாள், பேராசிரியர் அதை எப்படி எதிர்கொண்டு தன்னை நிரூபிக்கிறார் என்பது தான், படத்தின் கதை.இளம் பேராசிரியராக உணர்ச்சிகரமான ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தார், ஜெய்சங்கர். அடிதடி, வெட்டுக்குத்து, 'ரொமான்ஸ்' இன்றி முதிர்ச்சி பெற்ற பேராசிரியர் கதாபாத்திரம், ஜெய்சங்கரின் சினிமா பயணத்தில் இன்னொரு மைல்கல்லாக அமைந்தது.படம் பெரும் வெற்றி பெற்றது. இது, ஜேம்ஸ்பாண்ட் பாணியிலிருந்து விலகி, வேறுபட்ட பாத்திரங்களில் நடிக்கும் ஆசையை, ஜெய் மனதில் விதைத்தது.சினிமா துறையில், மற்றொரு புரட்சிக்கும் விதை போட்டார், ஜெய்சங்கர். திறமையான நடிகர்கள், தங்களின் வாய்ப்புக்காக, பிரபல சினிமா நிறுவனங்களை நம்பியிருப்பதையும், அந்த நிறுவனங்கள் அல்லது தனி நபர்கள், சினிமாவின் மீது தங்கள் செல்வாக்கை செலுத்துவதையும், சினிமாவுக்கான ஆரோக்கிய குறைவாக நினைத்தார். பணம் கொழிக்கும் சினிமா என்ற மிகப்பெரிய மீடியத்தால், விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் மட்டுமே, திரும்பத் திரும்ப ஆதாயம் அடைவது உறுத்தலாக இருந்தது. சினிமா என்ற மாபெரும் சந்தை, ஓரிரு முதலாளிகளை நம்பியிருப்பது அடிப்படையில் கோளாறு என, நினைத்தார். பின்னாளில், இது சினிமா தொழிலை நசியச் செய்துவிடும் என்ற கருத்து, அவருக்குள் ஆழமாக வேரூன்றி இருந்தது. சினிமா மிகப்பெரிய வணிகச் சந்தையாக வேண்டும் என்ற, அவரது கனவு நிறைவேறுவதற்கான முயற்சியில் இறங்கினார். இதனால், அவருக்கும் கூட போட்டியாளர்கள் உருவாகலாம். எனினும், அதுபற்றி துளியும் கவலை கொள்ளவில்லை.சினிமாவின் இதயம் போன்ற தயாரிப்பாளர்கள் பெருகினால், படங்களின் எண்ணிக்கையும் பெருகும். சினிமாவின் அத்தனை துறைகளிலும் பணப்புழக்கம் அதிகரிக்கும். சினிமாவை நம்பி உள்ள கலைஞர்கள் முதல், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை இருந்து கொண்டே இருக்கும்.நுாறு குடும்பங்கள் பிழைக்கும் இடத்தில், ஆயிரமாக அந்த எண்ணிக்கை உயர்ந்தால், அதுதான் சினிமாவின் நிஜமான வெற்றி என்பதோடு, புதியவர்கள், நம்பிக்கையோடு சினிமாவுக்குள் வருவர் என்பது, அவர் கணக்கு. சினிமா என்ற பெரும் சந்தையின் வெற்றியை தீர்மானிக்கும் ஒரு கதாநாயகனிடம், இந்த சிந்தனை உதித்ததால், அதைச் செயல்படுத்துவதில் எந்த சிரமமும் இருக்கவில்லை. எண்ணப்படி தகுதியும், திறமையும் கொண்டவர்களை தேடிப் பிடித்து, அவர்களை தயாரிப்பாளர் ஆக்கினார். அவர் காலத்தில், தயாரிப்பு நிர்வாகியாக இருந்த பலர், தயாரிப்பாளர்கள் ஆகினர்.புகைப்பட கலைஞர்கள், 'ஸ்டன்ட் மாஸ்டர், மேக் - அப் மேன், லைட் மேன்' மற்றும் பத்திரிகையாளர் என, சினிமாவின் பிற அங்கங்களான இவர்களை தயாரிப்பாளர்கள் ஆக்கினார். திறமையானவர்களை கண்டறிந்து, தானே முன் வந்து பல யோசனைகளை தருவார்.படத்தின் பட்ஜெட்டில், கதாநாயகனின் சம்பளம் தான் கணிசமானது என்பதால், தன் சம்பளத்தை இவ்வளவு என நிர்ணயித்துக் கொள்ள மாட்டார். சமயங்களில், பண தட்டுப்பாட்டால் படம் நிற்கும் நிலை வந்தால், தானே பணத்தை புரட்டித் தரவும் தயங்க மாட்டார். படம் திரையிட்டு வெற்றி பெற்ற பிறகு, லாபத்தில் ஒரு சிறு தொகையை தன் சம்பளமாக பெற்றுக் கொள்வார். அதுவும் மிக குறைந்த சம்பளமாகத்தான் இருக்கும். லாபம் குறைவு என்றால், தன் சம்பளம் குறித்து பேசவே மாட்டார்.'கவலைப்படாதீங்க பிரதர். விறுவிறுன்னு அடுத்த படத்துக்கு பூஜை போடுங்க. நான், 'கால்ஷீட்' தர்றேன். அடுத்த படத்துல என் சம்பளத்தை சேர்த்து வாங்கிக்கிறேன்...' என, நம்பிக்கையூட்டிச் செல்வார்.படப்பிடிப்புக்கு தாமதமாக வந்த ஜெய்சங்கரிடம் பந்தயம் கட்டி தோற்ற நடிகை... - தொடரும்- இனியன் கிருபாகரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !