கிருஷ்ணஜெயந்தி ஸ்பெஷல்!
ரவா லட்டு!தேவையான பொருட்கள்: ரவை - 150 கிராம், சர்க்கரை - 200 கிராம், நெய் - கால் கிலோ, முந்திரி கொஞ்சம்.செய்முறை: ரவையை பொன்னிறமாக வறுத்து சூடு ஆறியபின், சர்க்கரையுடன் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். இத்துடன், நெய்யில் வறுத்த முந்திரி பருப்பை சேர்த்து இளஞ்சூட்டில் நெய்யை ஊற்றி கிளறி, உருண்டைகளாக பிடிக்கவும்.போளி!தேவையான பொருட்கள்: கடலை பருப்பு - 100 கிராம், துாள் வெல்லம் - 100 கிராம், மைதா மாவு - 100 கிராம், தேங்காய் அரை மூடி, மஞ்சள் பொடி, முந்திரி, ஏலக்காய், நெய் தேவையான அளவு.செய்முறை: மைதா மாவை மஞ்சள் துாள் சேர்த்து, எண்ணெய் விட்டு பிசைந்து வைக்கவும். கடலை பருப்பை வறுத்து, வேக விடவும்; குழையக் கூடாது. கையால் அழுத்துகிற பதம் வந்தவுடன் இறக்கி, வெல்லத்துடன் தேங்காய் துருவல், ஏலக்காய் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறி இறக்கவும். இதை, மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, நெய்யில் வறுத்த முந்திரி பருப்பை போட்டு கிளறி, பூரணமாக சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும். பிசைந்து வைத்துள்ள மைதா மாவை, நெல்லிக்காய் அளவு எடுத்து வாழை இலையில் அப்பளம் போல் இட்டு, பூரணத்தை வைத்து மூடி, மறுபடியும் அப்பளமாக இட்டு தோசை கல்லில் போட்டு, இருபுறமும் வெந்ததும், நெய் விட்டு எடுக்கவும். சுவையான போளி தயார்!வெல்ல சீடை!தேவையான பொருட்கள்: அரிசி மாவு - 100 கிராம், வெல்லம் - 150 கிராம், உளுந்து மாவு - 2 ஸ்பூன், தேங்காய், எள், எண்ணெய் தேவையான அளவு.செய்முறை: அரிசி, உளுந்து மாவை லேசாக வறுத்து ஆற விடவும். தேங்காயை சிறு துண்டுகளாக்கி, எள்ளுடன் நெய்யில் வறுத்தெடுத்து, கையில் ஒட்டாத பதத்தில் உள்ள வெல்லப்பாகுடன் மாவு கலவை, தேங்காய் மற்றும் எள் சேர்த்து கிளறி, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, இளஞ்சூட்டு எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.திரட்டுப்பால்!தேவையான பொருட்கள்: பால் - 2 பாக்கெட், சர்க்கரை - 2 கப் அல்லது கருப்பட்டி கால் கிலோ.செய்முறை: பாலை அடுப்பில் வைத்து, கொதி வந்த பின் அரை மூடி எலுமிச்சை சாறு பிழிந்து, பாலை திரிய விட்டு, வடிக்கட்டவும், சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து, அடிபிடிக்காமல் கிளறி, கெட்டியானவுடன் இறக்கவும்.