கற்ற கடன்!
வீட்டிற்கு சில பொருட்கள் வாங்க, கடைத்தெருவுக்கு சென்றிருந்தார், குமரன். பொருள் வாங்கி, திரும்பும்போது, யாரோ, அவர் மீது மோதிவிட்டு போக, 'சுரீர்'ரென கோபம் வந்தது.''ஏன்யா, கண்ணு என்ன, முதுகிலா இருக்கு. எதிரில் ஆள் வர்றது தெரியலை... மோதற,'' என்று திட்டினார்.மோதிய இளைஞனான சுரேஷ், தன் தவறுக்கு வருந்துபவன்போல், அங்கேயே தயங்கி நின்றான். அவன் முகத்தை கூர்ந்து பார்த்த, குமரனுக்கு, தன்னால் மறக்க முடியாத, 30 ஆண்டுகளுக்கு முன், கணக்கு பாடம் சொல்லிக் கொடுத்த, ஆசிரியர் கணேசன் வந்து போனார். அந்த இளைஞனிடம், தயக்கமாக, ''நீங்க, கணேச வாத்தியார் மகனா?'' என்றார். கொஞ்சம் குழப்பமும், ஆச்சர்யமுமாக பார்த்து, ''சரியா சொல்றீங்க... சார், யாரு?'' என்றான், சுரேஷ். ''என் பேர், குமரன். அப்பாவிடம் கணக்கு படிச்சவன். அப்பவே அவர், வேற ஊர் மாற்றலாகிட்டார். நான் படிப்பு முடிஞ்சு, வேலையில் சேர்ந்த நாள் முதல், எங்கெல்லாமோ தேடினேன். அதிசயமாய் அதே சாயல்ல இருந்த உன்னை, இந்த தெருவில் பார்ப்பேன் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை.''கடவுளுக்கு நன்றி. ஆட்சேபனை இல்லைன்னா, இப்பவே என் வீட்டுக்கு வர முடியுமா... பக்கத்தில் தான்... நிறைய பேசணும்,'' என்று, அவன் கைகளை பிடித்துக் கொண்டார்.இவர் ஆர்வத்தை பார்த்து, தன் வேலைகளை ஒத்தி வைத்து, குழப்பத்துடன் பின் தொடர்ந்தான், சுரேஷ்.கடைக்கு சென்றிருந்தவர், வீடு திரும்பும்போது, ஒரு இளைஞனையும் அழைத்து வருவதை பார்த்து, புருவம் உயர்த்தினாள், கமலா.''நாற்காலியில் உட்கார்,'' என்று கூறிய குமரன் பரவசமானார். சங்கோஜமாக நின்று, கமலாவுக்கு வணக்கம் சொன்னான், சுரேஷ்.''யார்?'' என்று கேட்டாள். ''நான் அடிக்கடி சொல்வேனே, கணேச வாத்தியார்... எனக்கு கணக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியர்ன்னு, அவரோட மகன். இந்த ஊர்ல தான் இருக்கான். இன்னைக்கு தான் தற்செயலாக பார்க்க முடிஞ்சது.''''அப்படியா... சந்தோஷம் தம்பி, அடிக்கடி உங்க அப்பா பற்றி பேசிகிட்டிருப்பார். எத்தனையோ ஆண்டுகளுக்கு பிறகும், சொந்த ஊர், சொந்தங்களை மறந்தாலும், கணேச வாத்தியாரை மறக்கவே இல்லை. காரணம் என்னன்னு அவரே சொல்வார்... இரு, காபி எடுத்து வர்றேன்,'' என்று, உள்ளே போனார். குமரன் கூற ஆரம்பித்தார்...''எனக்கு, பள்ளத்துார் கிராமம்; விவசாய குடும்பம். அப்பா இல்லை; அம்மா தான். வயலில் கூலி வேலை பார்த்தாள். 5ம் வகுப்பு வரை, உள்ளூர் பள்ளியில் படித்தேன். மேற்கொண்டு படிக்க, ௧ கி.மீ., தொலைவில் இருந்த பள்ளிக்கு போக வேண்டும்.''கால் வலிக்க நடந்து போய் படித்து வந்தேன். ஐந்து பாடங்களில் நான்கு, ஓ.கே., கணக்கில் தான் பிணக்கு; சுட்டு போட்டாலும் வரவில்லை. ஒவ்வொரு ஆண்டும், கணக்கு பரீட்சையில், 'பார்டரில்' தேர்ச்சி பெற்று, 10வது கடந்திருந்தாலும், பிளஸ் 2வில், கணக்கு ரொம்பவே பயமுறுத்தியது.''ஆசிரியர்கள் நன்றாக நடத்தினர்; புரியவில்லை. இந்த ஆண்டும் பரீட்சையில் தோல்வி தான் என்று, மனம் நொந்திருந்தபோது, கணக்கு பாடத்துக்கு எங்கிருந்தோ வந்தார், இளைஞனாக, புது வாத்தியார். மெலிதான உடற்கட்டு, சிரித்த முகம், சினேக பார்வை. நம்பிக்கை வந்தது. நன்றாக சொல்லிக் கொடுத்தார்.''கிராமத்திலிருந்து வரும் ஏழைப் பையன் என்பதால், என் மீது, அவருக்கு அனுதாபம். அவர் நல்லவிதமாக சொல்லிக் கொடுத்தாலும், எனக்கு ஓரளவே மண்டையில் ஏறிச்சு.''என்னைப் போல இன்னும் சில மக்கு மாணவர்கள் இருந்தனர். 'என்னங்கடா... புரியலையா... யாருக்கெல்லாம் சந்தேகம் இருக்கோ, அவங்கெல்லாம் பள்ளி விட்டதும், சாயங்காலம் நான் தங்கியிருக்கும், 'மேன்ஷனுக்கு' வாங்க, சொல்லித் தர்ரேன்... 'டவுட்' இருந்தா, 'க்ளியர்' பண்ணிக்குங்க'ன்னு சொன்னார். ''போனோம். எங்களுக்காக, தினமும் ஒரு மணி நேரம் பாடம் எடுத்தார். அவர் அதை, 'டியூஷன்'னு சொல்லவும் இல்லை; அதற்கு கட்டணமும் கேட்கவில்லை. ஆனாலும், ஒரு மாசம் போனதும், பையன்களில் சிலர், பணம் கொடுத்தனர். என்னிடம் பணம் இல்லை. இலவசமாக படிக்க சங்கோஜமாக இருந்தது. 'டியூஷனை' தவிர்த்தேன்.''பள்ளிக்கு போனால், சார் ஏதும் கேட்பாரோ என்ற சங்கடம். பள்ளிக்கு போவதை நிறுத்தினேன். ஆனால், என்னை தேடி, கிராமத்துக்கே வந்துட்டார். 'ஏண்டா வரலை?'ன்னு கேட்டார். 'கஷ்டம், பணம் தர முடியலை...' என்றேன்.''அதற்கு, 'நான் கேட்டேனா... அதற்காக, பள்ளிக்கே வராம இருக்கறது சரியா... உன் படிப்பை கெடுக்கவோ, நிறுத்தவோ இங்கு வரவில்லை. அந்த பாவத்தை நான் செய்யக்கூடாது. குடும்பத்தின் எதிர்காலம் உன் படிப்பில் தான் இருக்கு... படிச்சு மேலே வந்து, ஒரு வேலையில் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பிச்சதும், கொடுத்துட்டு போ... நான் எங்க போயிடப் போறேன்; நீயும் தான் எங்க போயிடப் போற... 'டியூஷனு'க்கு வந்துடு...' என்றார்.''நெகிழ்ந்தேன். கை பிடித்து அழைத்து, பக்கத்தில் உட்கார வைத்து கனிவாக சொல்லிக் கொடுத்தார். அந்த வருஷம், கணக்கு பாடத்திலும் தேர்வாகி, கல்லுாரியில் சேர்ந்தேன். டிகிரி முடித்ததும், வேலை கிடைத்தது. முதல் சம்பளம் வாங்கியதும், சாரை பார்க்க ஓடினேன்.''அவர் மாற்றலில் வேறு ஊருக்கு போயிருந்தார். விசாரித்து, அங்கு போனேன். அந்த நேரம், சொந்த அலுவலாக இன்னொரு ஊருக்கு போயிருந்ததாக தகவல். இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று வந்துட்டேன்.''காரியத்தை தள்ளிப்போடுவது போன்ற மோசமான செயல் வேறு இல்லை. உடனுக்குடன் செய்து முடிக்காவிட்டால், அந்த செயலை வேறெப்போதும் செய்ய முடியாமலே போய்விடும் என்பதற்கு நானே உதாரணம். ''அதன்பின், அப்பாவை நான் சந்திக்கவே இல்லை. அவர் இறந்து விட்டார் என்ற தகவல் மட்டும் தெரிய வந்தது. காலம் கடந்தாலும், ஆசிரியரின் வாரிசை பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி,'' என்று சொல்லி, நெகிழ்ந்தார், குமரன். காபி எடுத்து வந்து கொடுத்தாள், கமலா; பருகினர்.''பேர், சுரேஷ்ன்னு மட்டும் சொன்னே... மேற்கொண்டு விபரம் சொல்லு தம்பி,'' என்றார்.''என்னைப் பற்றி சொல்ல அதிகம் இல்லை. அப்பா ஆசிரியராக இருந்தும், என்னால், 10ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. எனக்கு இரண்டு சகோதரிகள். அவர்களுக்கு கல்யாணம் முடிச்ச கையோடு காலமாகிட்டார். அம்மாவுக்கு, 'பென்ஷன்' வருது. சூழ்நிலை காரணமா, நாங்களும் பல ஊர் மாறிட்டோம்.''இப்போ, இந்த ஊரில் துணிக்கடை ஒன்றை நடத்துறேன். கடை திறக்க போய்கிட்டிருந்தேன். உங்கள் மீது மோதியதும், என்னை யாரென்று நீங்கள் யூகித்ததும், உங்கள் அழைப்பிற்காக இங்கு வந்தேன். இனி, அடிக்கடி சந்திப்போம்... வரட்டுமா சார்,'' என்றான்.''ஒரு நிமிஷம், சுரேஷ்... தப்பா எடுத்துக்க கூடாது. உன் அப்பாவுக்கு நான் பட்ட கடன். 'கோடி கொடுத்தாலும், குருவின் கடனை அடைக்க முடியாது'ன்னு சொல்லுவாங்க. அவர் இருந்து நான் கொடுத்தால், எப்படி சந்தோஷப்பட்டிருப்பாரோ அப்படி நினைச்சு, நீ, இதை வாங்கிக்கணும்,'' என்று, கையில் திணித்தார். ''இதெல்லாம் இப்ப எதுக்கு சார்?''''என் மன திருப்திக்காக. எப்படியாவது இந்த தொகையை அவரிடம் சேர்க்கணும்ன்னு, காத்துகிட்டிருந்தேன். உன்னை நான் ஆசிரியராகவே பார்க்கறேன். இதை நீ ஏத்துகிட்டு எனக்கு நிம்மதியை கொடுக்கணும்.''''அப்பா உயிரோடு இருந்து, அவருக்கு இந்த கடனை திருப்பி கொடுத்திருந்தால், சந்தோஷப்பட்டிருப்பாருன்னா நினைக்கறீங்க... நீங்க படிச்ச காலத்தில், அப்பா, 'டியூஷன்' நடத்தி, சில மாணவர்களிடம் பணம் வாங்கியிருக்கலாம். பின்நாளில், 'டியூஷன்' வைப்பது தப்புன்னு நினைச்சார். ''வகுப்பில் சரியாக சொல்லி புரிய வைச்சிருக்கணும். எத்தனை சந்தேகம் இருந்தாலும், ஓய்வு நேரங்களிலோ அல்லது தனி வகுப்பெடுத்தோ சொல்லித் தரணும். அதற்கு தான் அரசு சம்பளம் கொடுக்குது. அதை ஒரு பக்கம் வாங்கிகிட்டு, 'டியூஷன்' என்ற பெயரில், மேலும் சம்பாதிப்பது சரியில்லைன்னு நினைச்சு, அதை கை விட்டுட்டார். அவர் விரும்பாத ஒண்ணை, நான் எப்படி சார் ஏத்துக்குவேன்,'' என்றான்.ஆடிப்போனார். என்ன பேசுவதென்று புரியவில்லை.''நான் பணத்தை வாங்கிக் கொள்ளவில்லை என, நீங்கள் வருத்தப்படக் கூடாது. அந்த நாளில் பணம் கொடுத்து படித்தவர்கள் கூட, அப்பாவை நினைவில் வச்சிருக்க மாட்டாங்க. ஏன், நீங்களும் அப்பவே பணம் கொடுத்திருந்தால், அவரை மறந்திருப்பீங்க.''கொடுக்க முடியாமல் போனதாலும், அதை ஒரு கடனாக நினைச்சதனாலயும் தான், அப்பாவை மறக்காம இருக்கீங்கன்னு நினைக்கிறேன். இப்போ பணத்தை கொடுத்துட்டா, கடன் தீர்ந்ததுன்னு மறந்து போவீங்க. இந்த பணம் உங்களிடமே இருக்கட்டும்.''அப்படியாவது உங்களைப் போன்ற நேர்மையான மாணவர் மனதில், அப்பா வாழ்ந்து கொண்டிருக்கட்டுமே... உங்கள் வாழ்நாள் முழுக்க நினைப்பு இருக்கும் இல்லையா...''நன்றியுள்ள மாணவன் ஒருவனின் நினைவில் நாம் இருக்கிறோம் என்று, அப்பாவுக்கும் ஒரு திருப்தி இருக்கும்தானே... அந்த வகையில் சில கடன்கள் அடையாமல் இருப்பதே நல்லது. ''கொடுத்தால் தான் திருப்தி வரும்ன்னு நீங்க நினைத்தால், இந்த பணத்தில், ஏழை மாணவர்கள் சிலருக்கு, அப்பா பெயரில், படிக்க உதவி செய்யுங்க... அது இன்னும் மன திருப்தியை தரும்,'' என்றான், சுரேஷ்.அவன் கைகளைப் பிடித்து, ''உன் அப்பா தான் சிறந்த ஆசிரியர்ன்னு நினைச்சேன். நீயும், ஒரு ஆசிரியராகவே மாறிட்டே. நம்மை விட்டு பிரிந்து போன அப்பாவை மட்டுமல்ல, இனி, உன்னையும் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்,'' என்றார், குமரன்.கம்பீரமாக வெளியேறினான், சுரேஷ்.படுதலம் சுகுமாரன்