உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

மதிப்பிற்குரிய அம்மாநான், தனியார் துறையிலும், என் மனைவி, அரசுத் துறையில் பணிபுரிகிறோம். எங்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. நான், என் பணியின் நிமித்தம், ஒரு கல்லூரிக்கு செல்ல நேர்ந்தது. அப்போது, அக்கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியை ஒருவருடன் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து அங்கேயே பணி புரியும் சூழல் வந்ததால், அவரைப் பார்ப்பதையும், பேசுவதையும் தவிர்த்தேன்.என் வேலையின் சுறுசுறுப்பு, நேர்மையைப் பார்த்து, தன் தவறை உணர்ந்து, அவராகவே என்னிடம் பேசவும், நட்பு பாராட்டவும் ஆரம்பித்தார். நானும், நடந்ததை மறந்து அவரிடம் பழகினேன். எங்கள் நட்பு, அவர்களின் வீடு வரை தொடர ஆரம்பித்தது. அவருக்கும், ஒரு குழந்தை உண்டு. என் மேல் ஏற்பட்ட நம்பிக்கையால், அவரின் குடும்ப விஷயம், பிரச்னைகளை கூறுவார். அதில் சிலவற்றில் என் ஆலோசனைகளை பின்பற்றி, பிரச்னைகளில் இருந்து மீண்டார். இதனால், என் மேல் அவருக்கு நட்பும், அன்பும், பாசமும் அதிகரித்தது.இடையில் சில நாட்கள், அவரிடம் எந்த தொடர்பும் இல்லை. பின், ஒருநாள், மொபைல் போனில் அவரை தொடர்பு கொண்டபோது, எப்போதும் போலவே அன்புடன் பேசினார். எங்கள் நட்பு மொபைல் போனிலே தொடர்ந்தாலும், என்றாவது ஒருநாள், அவரின் வீட்டிற்கு சென்று, அவர் குடும்பத்தினரை பார்த்து வருவேன். அவருக்கு ஏதாவது உதவி தேவை என்றால், என்னை தொடர்பு கொண்டு கேட்பார்; நானும் செய்வேன். இருவருக்கும், ஒன்றிரண்டு வயது தான் வித்தியாசம்.என்மேல் அவர் காட்டிய அன்பினால், என் மனம் அவர் வசப்பட ஆரம்பித்தது. என் எண்ணம் தவறு என்று புரிந்தாலும், அவரை மறக்க முடியவில்லை.இந்நிலையில், ஒரு நாள், 'எனக்கும், என் பிள்ளைக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும்; உங்களைப் போன்ற ஒருவர், என் குழந்தைக்கு தந்தையாக இருந்தால், அவள் ரொம்ப சந்தோஷமாக இருந்திருப்பாள்...' என, குறுந்தகவல் வந்தது.இதைப் படித்ததும் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டாலும், என் நேசிப்பை சொன்னால், என்னை ஏற்றுக் கொள்வாரா இல்லை நட்பை துண்டித்து விடுவாரோ என பயமாக உள்ளது. அவரைப் பற்றிய நினைவினால், இரவில் தூக்கமின்றி தவிக்கிறேன். அதேசமயம், என் விருப்பத்தை அவரிடம் கூறி, அவரும் அதை ஏற்றுக் கொண்டால், எங்கள் இரு குடும்பத்துக்கும் நம்பிக்கை துரோகம் செய்தவர்களாகி விடுவோமே!எங்கள் இருவருக்குமே கடவுள் பக்தி அதிகம்; அதேபோன்று, இருவரின் எண்ணங்களும் சில நேரங்களில் ஒன்றாகவே உள்ளன.அவர், தன் கணவரிடம் பல ஆண்டுகளாக பனிபோர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறி அழுதுள்ளார். இதில், நான் வேறு, அவரை விரும்பும் விஷயத்தை கூறி, அவரின் நட்பு ஒரேயடியாக முறிந்து விட்டால்... குழப்பமாக உள்ளது; உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.— இப்படிக்கு அன்பு மகன்.அன்பு மகனுக்கு —நீயும், உன் மனைவியும், நல்ல வேலையில், கை நிறைய சம்பாதிக்கிறீர்கள். உன்கொரு குழந்தையும் உள்ளது. வயிறு நிறைய சாப்பிடும் போதே, பக்கத்து இலை பதார்த்தத்தை, திருட முயற்சிப்பது என்ன நியாயம்?பருவ வயது ஆண் பெண் முதல் சந்திப்பில் ஏற்படும் மோதல்கள், பெரும்பாலும் பாசாங்கே! செக்சை நோக்கி எடுத்து வைக்கும் முதல் அடியே, இத்தகைய மோதல்.'உங்களைப் போன்ற ஒருவர், என் குழந்தைக்கு தந்தையாக அமைந்திருந்தால் நன்றாக இருக்கும்...' என்ற பேராசிரியையின் குறுஞ்செய்தி, கள்ளக் காதலுக்கான பச்சைக்கொடி. நீ, அவரிடம், 'நான் உங்களை காதலிக்கிறேன்...' எனக் கூறினால், அவர் உன்னுடனான நட்பை முறித்துக் கொள்ள மாட்டார். 'நானும், உங்களை காதலிக்கிறேன்...' என்பார். உன் மனமும், அவர் மனமும் ஒரே மாதிரி சிந்திக்கிறது என நீ கூறுவது, கள்ளக் காதலில் ஈடுபட விரும்பி, உன் மனம் சொல்லும் நொண்டிச்சாக்கு!நீங்கள் இருவரும் கள்ளக் காதலில் ஈடுபட்டால், உங்களிருவரின் குடும்பங்களும் நூறு துண்டுகளாய் சிதறிப் போகும். குழந்தைகளின் எதிர்காலம் பாழாய் போகும்.பொதுவாக திருமணமான ஆணோ, பெண்ணோ இன்னொரு திருமணமான ஆண் அல்லது பெண்ணை பார்க்கும் போது, ஒரு இச்சை கூடிய ஆவல் பிறக்கும். இக்கரைக்கு, அக்கரை பச்சை என்பது போல தான் இதுவும்! முழு திருப்தியாய் தாம்பத்யம் செய்த ஆண் பெண் இதுவரை இவ்வுலகில் பிறக்கவில்லை; இனிமேல் பிறக்கவும் போவதில்லை. எல்லாருமே பக்கத்து வீட்டு ஜன்னலுக்குள் எட்டிப் பார்க்க முயற்சிக்கின்றனர். தங்கள் வீட்டுக்குள் இருப்பதையே தான் அங்கு காணப் போகிறோம் என தெரியாமல்!'நான் உன்னிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்...' என, நீ முதலில் சொல்ல வேண்டும் என, பேராசிரியையும், அவள் சொல்லட்டும் என, நீயும் காத்திருக்கிறாய். இருவரும் வாய் திறந்து கள்ளக் காதலை சொல்லாமலே இருந்து விடுங்களேன்!உங்களிருவரின் தொடர்பு, வெறும் நட்புடன் நிற்கட்டும். நீ, பேராசிரியைக்கு ஆலோசனை கூறு; உதவிகள் செய், தப்பில்லை. ஆனால், அதோடு நின்று கொள். நீயும் கோட்டைத் தாண்டாதே; பேராசிரியையும் கோட்டைத் தாண்ட விட வேண்டாம். பிறரின் குடும்பத்தினருக்கு செய்யும் உதவிகளை, உன் மனைவி குழந்தைக்கு செய். உன் மனைவிக்கு நல்ல கணவனாக, உன் குழந்தைக்கு நல்ல தகப்பனாக வாழப் பார்.ஒவ்வொரு முறை கள்ளக் காதல் விருப்பம் வரும் போதும், மனைவியுடன் சந்தோஷமாய் இருந்த கணங்களை யோசித்துப் பார். மனைவி கள்ளக்காதலில் ஈடுபட்டால், உன் நிலை என்ன என்பதை சிந்தித்துப் பார்.சிறிது காலம், பேராசிரியையை நேரில் சந்திக்காமல், போனில் பேசாமல் இரு. உங்களிருவருக்கும் சமூகத்தில் இருக்கும் மரியாதையை, கவுரவத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.வேண்டாத ஆசைகளை தூக்கி எறிந்து, ஒரு நல்ல குடும்பத் தலைவனாக வாழப் பார்!— என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !