மஞ்சள் வளத்துடன் வாழ்க!
மார்ச் 14 காரடையான் நோன்பு!காரடையான் நோன்பு நன்னாளில் தான், பதிவிரதையான சாவித்திரி, தன் கணவனின் உயிரை, எமனிடமிருந்து மீட்டாள்.கார்காலத்தில் (முதல்போகம்), விளையும் நெல்லை குத்தி, மாவாக்கி, அதில் வெல்லம் அல்லது காரம், தட்டாம்பயிறு (காராமணி) சேர்த்து தயார் செய்யும் அடையே, கார் அடை. இந்த நைவேத்யத்தின் பெயரால் அனுஷ்டிக்கும் விரதமே, 'காரடையான் நோன்பு' ஆயிற்று. சுமங்கலிப் பெண்கள், தங்கள் மாங்கல்ய பாக்கியத்திற்கும், கன்னியர், தங்களுக்கு சிறப்பான வாழ்க்கைத் துணை அமையவும், இதை அனுஷ்டிக்கலாம்.மந்திரதேச மன்னன் அஸ்வபதியின் மகள் சாவித்திரி. பெற்றோருக்கு ஒரே மகள் என்பதால், வீராங்கனையாகத் திகழ்ந்தாள். ஒரு முறை, தந்தையுடன் வேட்டைக்குச் சென்ற போது, சால்வதேச இளவரசனான சத்தியவானை சந்தித்தாள். அவனைத் திருமணம் செய்ய முடிவெடுத்தாள். அவனது பார்வையற்ற பெற்றோர், நாட்டை பகைவர்களிடம் இழந்து, காட்டில் மறைந்து வாழ்ந்தனர். அவர்களுக்கு சேவை செய்வதை தவமாக எண்ணினான் சத்தியவான்.பெற்றவர்களுக்கு சேவை செய்யும் ஒருவன், மனைவியை நல்லபடியாக பாதுகாப்பான் என்பதைப் புரிந்து கொண்ட சாவித்திரி, தன் விருப்பத்தைப் பெற்றவர்களிடம் தெரிவித்தாள். நாடிழந்த ஏழையானாலும், மகளின் விருப்பத்தை பூர்த்தி செய்ய, அஸ்வபதி சம்மதித்தார். திருமணம் பேச இருந்த சூழலில், அஸ்வபதியைச் சந்தித்தார் நாரதர் .'நீ பார்க்க இருக்கும் மணமகன், திருமணமான ஓராண்டில் இறந்து விடுவான் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தவிர்த்து விடு...' என்று அறிவுரை சொன்னார். சாவித்திரியோ, தன் நிலையில் உறுதியாக இருந்து, சத்தியவானைத் திருமணம் செய்து கொண்டாள். கணவன் இட்ட பணிகளை நல்லபடியாகச் செய்தாள்.கண்ணிழந்த மாமியார், மாமனாருக்கு, பெற்றவர்களை விட ஒரு படி அதிகமாக@வ சேவை செய்தாள். அவர்களும், தங்கள் மருமகளை, மகளுக்கும் மேலாக பரிவுடன் நடத்தினர். இந்த பதிவிரதா தன்மையால், அதிக Œக்தியைப் பெற்றாள்.சத்தியவானுக்கு குறிப்பிட்ட அந்த நாள் வந்தது. அன்று கணவனை வெளியே எங்கும் செல்ல வேண்டாம் என்றாள். ஆனால், தன் பெற்றோருக்கு பழம் பறித்து வர வேண்டும் என அவன் கூறவே, அவளும் உடன் சென்றாள். திடீரென, சத்தியவான் மயங்கி விழுந்தான். எமதர்மராஜா, அவன் உயிரை எடுத்துச் சென்றார். பதிவிரதைகளின் பார்வைக்கு மட்டுமே தேவர்கள் தெரிவர். அவரைப் பின்தொடர்ந்த சாவித்திரி, தன் கணவனின் உயிரைத் திருப்பித் தருமாறு கேட்டாள்.அது முடியாது என்ற எமதர்மர், 'இதைத் தவிர மூன்று வரங்கள் தருகிறேன்...' என்றார்.'மாமனார், மாமியார் இழந்த பார்வையையும், நாட்டையும் பெற வேண்டும். தன் தந்தைக்கு பிறகு, நாடாள ஆண் வாரிசு வேண்டும். தனக்கு நூறு பிள்ளைகள் வேண்டும்...' என்றாள். சற்றும் யோசிக்காத எமதர்மன், வரத்தைக் கொடுத்து, சிக்கிக் கொண்டார். சாவித்திரிக்கு குழந்தைகள் வேண்டுமானால், கணவன் உயிரோடு இருந்தாக வேண்டும். எனவே, அவனை விடுவித்தார் எமதர்மர்.கணவர், மாமியார், மாமனாருக்கு உரிய கடமையைச் சரிவர செய்பவர்களும், பிறந்த வீட்டிற்கு பெருமையைப் பெற்றுத் தருபவர்களும், பதிவிரதையாகின்றனர். அவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்பது, சாவித்திரியின் வரலாறு உணர்த்தும் உண்மை.கார் அடையுடன், வெண்ணெயும் வைத்து<, 'உருகாத வெண்ணெயும், ஓரடையும் நான் செய்தேன், ஒருகாலும் என் கணவர் என்னை விட்டு பிரியாத வரம் வேண்டும்...' என்று பிரார்த்தியுங்கள். சாவித்திரி தேவியின் அருட்கடாட்சம் உங்களுக்கு கிடைக்கும். மாமியாருக்கு சேவை செய்யும் மருமகள்களுக்கான விரதம் மட்டுமல்ல, மருமகளை, தங்கள் மகளாக எண்ண வேண்டும் என்று, மாமியாருக்கும் உணர்த்தும் விரதம். காரடையான் நோன்பை அனுஷ்டித்து, மஞ்சள் குங்குமத்துடன் நீடுழி வாழுங்கள்.***தி. செல்லப்பா