உள்ளூர் செய்திகள்

நெடுந்தொலைவு!

அன்றைய தினம் வித்தியாசமாக, ஏன் அழகாகக் கூட இருக்கப் போகிறது என்று, அவனுக்குத் தோன்றியது.ஜெர்மனியிலிருந்து வந்த ஒரு குழுவை, அலுவலக ரீதியாக திருப்திப்படுத்தி விட்டான். கிட்டத்தட்ட, 50 லட்சம் டாலருக்கான, 'ஷார்ட் டேர்ம் கான்டிராக்ட்' அது. கச்சிதமாகச் செய்து விட்டால், மிகப்பெரும் எதிர்காலம், இதே ஐரோப்பாவிலிருந்து மலர்ந்து விடும். அந்த ஜெர்மன் குழுவின் தலைவன் ஹான்ஸ்; கலா ரசிகன். அவனுக்கு மாமல்லபுர சிற்பங்களைப் பார்த்தே ஆக வேண்டுமாம். இன்று அந்தக் குழுவினரோடு பயணம்.''ஆனந்தி, ஒரு நிமிடம் வாயேன்,'' என்று உள்நோக்கிக் குரல் கொடுத்தான்.''இதோ... ஒரு நிமிடம்,'' என்று பதில் வந்தது.''இதென்ன ஆனந்தி, பால் பாத்திரத்தை மூடாம வெச்சிருக்கே. பூச்சி, பல்லி விழுந்துடாது... காய்கறி தோல் எல்லாம் சமையலறையிலேயே கெடக்கு பார்... தோட்டத்துல போட்டா என்ன, செடிக்கு உரமாகும் தானே?''பச்சை குர்த்திக்கு சிவப்பு துப்பட்டாவா? அய்யே... கிளியோட டிரெஸ் இல்லே அது? என்ன டேஸ்ட்டோ போ. அழகா பச்சை பிரின்ட்டட் துப்பட்டா போடலாம்ல?'' என்றாள், அம்மா.முகம் நிமிர்த்தாமல், ஓரக்கண்ணால் சமையல் அறையைப் பார்த்தான்.ஆனந்தி சிரித்தபடியே, ''ஆமாம் அத்தை... அவசரம் எனக்கு... எல்லாம் தலைகீழா பண்ணிட்டேன். நீங்க சொல்றது தான் சரி. இதோ சரி பண்ணிடறேன்,'' என்று பாலை மூடினாள். காய்கறித் தோல் குப்பையை செடிகளுக்குப் போட்டாள். கை கழுவி வந்து, பச்சை பூக்கள் போட்ட துப்பட்டாவை எடுத்தாள்.''இப்போ ஓ.கே.,யா அத்தை. சரி, போய் உங்க பையனோட பேசிட்டிருங்க. மூணு பேருக்கும், நான் காபி கொண்டு வரேன்.''''சரி... மறந்து போய் எனக்கும் சக்கரையை அள்ளிக் கொட்டிடாதே, அரை ஸ்பூன் போதும்.''''ஓ.கே., அத்தை.''தஸ்... புஸ்... என, மூச்சு விட்டபடி வந்து உட்கார்ந்த அம்மா, ''என்னடா வினோத், சீக்கிரம் எழுந்துட்ட போல இருக்கு?''''ஆமாம்மா... இன்னிக்கு மகாபலிபுரம் போகணும்; ஆபிஸ் டூர் மாதிரி. ஆனந்தியை கூப்பிட்டேனேம்மா?''''இதோ வந்தாச்சு.''மணக்கும் காபி, காற்றை நிறைத்தது. அவன் கண்கள், மனைவியின் அழகிய முகம் பார்த்து உள்ளே பெருமிதம் விதைத்தது.''நீயும் வர்றியா ஆனந்தி?'' என்றான் கெஞ்சுவது போல.''எங்க வினோ?''''மாமல்லபுரம்... உனக்கும் கடல், பாறை, சிற்பம் எல்லாம் பிடிக்குமே. ஜெர்மன் ஆட்களை கூட்டிகிட்டுப் போறேன்.''''ஓ சாரி வினோ... இன்னிக்கு ஒரு, 'லெக்சர்' இருக்கு. 'டெவலப்மென்ட் சைக்காலஜி'ல முக்கியமானது. ப்ளீஸ் தப்பா நினச்சுக்காதீங்க,'' என்று அவளும் கெஞ்சுவது போல் சொன்னாள்.''இட்ஸ் ஓ.கே., டா... நாம இன்னொரு நாள் போகலாம். டின்னர் கூட இன்னிக்கு வெளில முடிச்சுப்பேன். அம்மாவுக்கும், உனக்கும் மட்டும் பார்த்துக்கோ.''''நானா? அதெல்லாம் அவள் தான் பண்ணணும். இப்பல்லாம், 6:00 மணி ஆனாலே எனக்கு தலைவலி வருது.''''கவலைப்படாதீங்க, அத்தை. டின்னருக்கு, உங்களுக்குப் பிடிச்ச சப்பாத்தி - தால் பண்ணிடறேன்.''''சரி... கொஞ்சம் நேரம் ஓய்வு எடுக்கறேன். பூட்டிட்டு கிளம்புங்க. ஆனந்தி, மாத்திரைக்கு தண்ணீர் எடுத்து வைக்கும்போது, அரை டம்ளர் கூடுதலா வை. நேத்திக்கு பத்தலே எனக்கு.''''சரி அத்தை.''அவன் குளிக்கக் கிளம்பினாள்.தினசரியை மடித்து வைக்கும்போது, அவன் மொபைல்போன் அழைத்தது.''ஹே ராகவ்... என்னப்பா போன், சொல்லு,'' என்றான்.எதிர்முனை தயங்கியது. ''சார்... அது வந்து...''''அட சொல்லுப்பா... என்ன, வண்டி ரிப்பேர் ஆய்டுச்சா?''''இல்ல சார்... என்னால இன்னிக்கு, உங்க கூட டூர் வர முடியுமான்னு... சாரி சார்!''''இட்ஸ் ஓ.கே., ராகவ், நான் பார்த்துக்கறேன். ஒண்ணும் பிரச்னை இல்லையே?''''எப்பவும் இருக்கற பிரச்னை தான் சார்... இன்னிக்கு கொஞ்சம் அதிகமாகி விட்டது. அம்மாவுக்கும், அவளுக்கும் பயங்கர சண்டை. அவங்க வீட்டு ஆட்கள் பத்தி அம்மா ஏதோ சொல்ல, இவ பதிலுக்கு அம்மாவை கிண்டல் பண்ண, அம்மா பதிலுக்கு கத்த, இவள் கிச்சன்ல பாத்திரங்களை எறிய, ஒரே களேபரம் சார்...''அம்மா சடார்னு கிளம்பி, தங்கை வீட்டுக்குப் போயிட்டாங்க. எனக்கு மண்டை காயுது. இந்த வருஷம் பொறந்து இது ஆறாவது சண்டை. அது தவிர, தெனம் தெனம் குட்டி குட்டி யுத்தம். அது தனி கதை,'' என்று அழுது விட்டான், ராகவ்.''ஓ.கே., புரியுது ராகவ். கவலைப்படாதே, சரியாகிடும். நீ அம்மாவைப் பார்.''''எங்க சார் சரியாகப் போகுது? செல்வகுமார், நாவரசு எல்லாரும்தான் புலம்பறாங்களே... மாமியார் - மருமகள் விவகாரம் தான், உலகத்தின் தீர்க்கப்படாத எல்லைப் பிரச்னை சார்... எங்க போய் இது முடியுமோ தெரியல... ஆனா, நீங்க லக்கி சார்.''''என்னப்பா சொல்ற?'' என்றான்.''ஆமாம் சார்... உங்க ஆனந்தி மேடம் தங்கக்கட்டி சார். வீட்டை பூந்தோட்டம் மாதிரி வெச்சிருக்காங்க. ம்ம்ம்... சரி சார், பிறகு பேசறேன்.''இரவு மணி, 8:00 அடித்தது. அவன் எழுந்து கொண்டான்.இரவின் அமைதியும், வாசல்புற பவளமல்லிகையின் வாசமும் மனதை நெகிழ்த்தின. பகலில் பார்த்த சிலைகளும், அலைகளும் இன்னும் கண்களுக்குள்ளேயே இருந்தன. ''ஏய் ஆனந்தி... கொண்டைக்கடலையை ஊறப் போட்டியா? நாளைக்கு சென்னா மசாலா பண்ணணும்ன்னு சொன்னியே... வழக்கம் போல மறந்துடப் போற,'' என்று, அம்மா அலுத்துக் கொள்வது கேட்டது.''அட, ஆமாம் அத்தை. மறந்துட்டேன். நல்லவேளை ஞாபகப்படுத்தினீங்க. தாங்க்ஸ் அத்தை.''''என்ன வேலையோ, என்ன படிப்போ, என்ன சம்பளமோ... சின்ன சின்ன விஷயத்த கூட எடுத்து சொல்ல வேண்டியிருக்கு,'' என்றபடி, விளக்கை அணைத்து, துாங்கப் போனாள், அம்மா.திரைச்சீலையை விலக்கி, ஜன்னல் கதவை இன்னும் முழுமையாகத் திறந்தாள், ஆனந்தி.பவளமல்லியின் வாசனை இன்னும் அள்ளிக் கொண்டு போனது.''இன்னிக்கு முழுக்க உன் நினைவாவே இருந்துதுடா செல்லம்,'' என்று அவள் நெற்றியில் முத்தமிட்டான், வினோ.''ஏன், இன்னிக்கு என்ன ஸ்பெஷல்?'' என்று அவள் சிரித்தாள்.''ஒண்ணு மாமல்லபுரம், உனக்கு பிடிச்ச ஊர். அடுத்தது, என், 'டீம்' பையன்கள் சொன்ன விஷயம்.''''அது என்ன, வினோ?''''எல்லா வீட்டுலயும் உலகப் போர்கள் நடந்துகிட்டே இருக்காம், ஆனந்தி. மாமியார் - மருமகள் விவகாரம். அவனவன் அழறான். எந்த பக்கமும் முடிவு எடுக்க முடியல, ரெண்டு பேரும் போர்க்கொடி துாக்கிக்கிட்டு நிக்கறாங்க. நிம்மதியே இல்லேன்னு அழறாங்க. ''ஆனால், நம் வீடு ரிசார்ட் மாதிரி... அருவிக்கரை மாதிரி... குளுமையா, நிம்மதியா... எப்படிடா?'' என்றபடியே அவளை மென்மையாக அணைத்துக் கொண்டான்.புன்னகைத்தாள், ஆனந்தி.''அம்மா பத்தி எனக்கு நல்லா தெரியும் ஆனந்தி... அவளால குற்றம் கண்டுபிடிக்காமல் இருக்க முடியாது. புலம்பல் அவள் கூடப் பிறந்தது. யாரையாவது குறை சொல்லிகிட்டே இருக்கணும். உன்னை, அம்மா எப்பவும் ஏதோ சொல்லிக்கிட்டே இருக்கறதை, நாலு வருஷமா பார்க்கறேன்.''நீ அப்படி எந்தத் தப்பும் பண்ணுகிறவள் இல்ல. சொல்லப் போனால் உன் காரியங்கள் அருமையா, சுத்தமா, நறுவிசா இருக்கும். அம்மா தான் கொஞ்சம் ஷாபி. ஆனால், தான் ஒரு எலிசபெத் ராணி போல பேசறாங்க உன்கிட்ட...''ஒருநாள் கூட நீ, என்கிட்ட எதையும் பிரச்னையா கொண்டு வந்ததே இல்லே ஆனந்தி... எப்படிடா என் செல்ல கண்ணுக்குட்டி!''அவள் அதே சிரிப்புடன், ''அது, என் குணம். அப்புறம் என் சைக்காலஜி, படிப்பு ரெண்டுமே காரணமாக இருக்கும் வினோ.''''எப்படி?''''வந்ததுமே அம்மாவின் குணத்தை புரிஞ்சுகிட்டேன், வினோ. நல்லவங்கதான். ஆனால், பெரும்பான்மை மனிதர்களைப் போல ஏக்கம் இருக்கு அவங்க மனசுல. நம் தகுதிக்கு ஏத்த படிப்பு படிக்க முடியலே, சரியான வாழ்க்கை கிடைக்கலே, இன்னும் ராஜாத்தி மாதிரி இருந்துருக்கணும்...''இப்படி நான், அவங்க கனவுகளோட நனவாக இருக்கேன். நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல சம்பளம். தன்னம்பிக்கை, தைரியம், சிரிப்புன்னு என்னைப் பார்க்கும்போது அவங்களுக்கு தன் ஏக்கம் அதிகமாகுது. அது என்னைக் குத்தம் சொல்லி சமாதானப்படுத்திக்குது.''நானே அதுக்கான களத்தை உண்டாக்கித் தரேன், வினோ. வேணும்னே பால் பாத்திரத்தை மூடாம விடுவது, புடவையை சரியா மடிக்காமல் வைப்பது, புளியை சரியா கொதிக்காமல் விடுவது. அதை மிகச் சரியா சுட்டிக் காட்டி எனக்கு, 'அட்வைஸ்' கொடுப்பாங்க. ஈகோ திருப்தி ஆகிடும்.''என்ன படிச்சு என்ன, நாமதானே சொல்லித் தர வேண்டியிருக்கு என்ற பெருமிதம் தோணும். இந்தக் காலத்து பொண்ணுங்க எதையும் முழுசா செய்யறதில்லேன்னு நினைச்சுப்பாங்க.''நாம இருக்கப் போய்த் தான் வீடு வீடா இருக்குன்னு ஒரு நிறைவு தோணும் உள்ளே... அதுதானே வாழ்க்கையை நகர்த்தும், வினோ... அம்மாவை ஒரு சிறுமி போலத்தான் பார்க்கிறேன். ஆனா, உண்மையான அன்போட பார்க்கிறேன்.''அவன் திகைப்புடனும், பிரமிப்புடனும் பார்த்தான்.பெண்ணின் அகமனம் பற்றிப் புரிந்து கொள்ள இன்னும் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டும் என்று நினைத்தான். கரம் நீண்டு, அவள் கரம் தொட்டு கண்களில் பதித்துக் கொண்டது.வி. உஷா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !