அஞ்சல் ஓட்டக்காரர்!
கேரளாவில், மன்னராட்சியின் போது, தபால்காரரை, 'அஞ்சல் ஓட்டக்காரன்' என்றழைத்தனர். தமிழக - கேரள எல்லையில், மறையூர் காட்டுப் பகுதியில் வாழ்ந்து வந்த கண்ணன், வயது, 90. சமீபத்தில் காலமானார். திருவாங்கூர் மன்னராட்சியின் போது, அரசு ஆவணங்களை, வேறு ஊருக்கு எடுத்து செல்பவரை தான், அஞ்சல் ஓட்டக்காரர் என்பர். 'மலப்புலய' சமுதாயத்தை சேர்ந்தவர், கண்ணன். 1950களில், வாகனங்கள் மிக குறைவாக இருந்தபோது, இவர், காட்டுப் பாதைகளில், தினமும், 16 கி.மீ., துாரம் ஓடி தான், வேலை செய்து வந்தார். ஒரு கையில், அரசு முத்திரை பதித்த ஈட்டி, பல மணிகள் பொருத்திய பட்டை மற்றும் மற்றொரு கையில் ஒரு மணி, இது தான் அவர் வேடம். 'ஓய்... ஓய்...' என்று கூவியபடியே ஓடும் இவரை, யாரும் தடுக்க முடியாது. தடுத்தால், ஈட்டியால் தாக்குவார். அச்சமயத்தில், உயிரிழப்பு ஏற்பட்டாலும், சட்டப்படி, அது குற்றமாகாது.— ஜோல்னாபையன்.