குழந்தை நலமுடன் இருக்க..
சிறு குழந்தைகளுக்கான, 'டே கேர் சென்டர்ஸ்' எனும், மழலை பராமரிப்பு மையங்கள் இன்று நகரங்களில் மட்டுமல்ல, சிற்றூர்களிலும் விரிவடைந்துள்ளன.குழந்தைகளுக்கான இப்பராமரிப்பு மையங்களை தேர்ந்தெடுப்பதற்கு முன், மையத்தை நேரடியாக பார்ப்பதுடன், அங்கே, ஏற்கனவே இருக்கும் குழந்தைகளின் பெற்றோரிடம் அபிப்ராயம் கேட்கலாம்.இரண்டொரு அறைகள், அதில் விளையாட்டு சாமான்கள் இருந்தால் மட்டும் போதாது; சற்று விசாலமான தரை தள கட்டடம், அதனுள், குழந்தைகளை ஈர்க்கும் வண்ணத்தில் உள் அலங்காரம், காற்றோட்டம் மற்றும் சுகாதாரமான வெளியிடம் இருக்கிறதா என்பதையும் கவனியுங்கள். மேலும், அருகில் மருத்துவமனை மற்றும் அவசரத்துக்கு மருத்துவரை அழைக்கும் வசதி போன்றவற்றையும் உறுதிபடுத்தவும். அத்துடன், உங்களது குடியிருப்பு அல்லது பணியிடத்துக்கு அருகில் இருக்கும் சென்டருக்கு முன்னுரிமை தரலாம். இது, தேவைப்பட்ட போது குழந்தையை பார்த்து வர எளிதாக இருக்கும்.மையத்தின் பணியாளர்கள், குழந்தையை அளவுக்கு மீறி கண்டிக்கின்றனர், அடிக்கின்றனர், சாப்பிட மற்றும் தூங்குவதற்கு மிரட்டுகின்றனர் எனில், காப்பகத்தை மாற்றுவது நல்லது.மைய நிர்வாகிகளுடன் மட்டுமல்ல, குழந்தைகளோடு நேரடி தொடர்பில் இருக்கும் பணியாளர்களுடனும் அடிக்கடி பேச வேண்டும். காலை அல்லது மாலையில் மையத்தில், குழந்தையுடன் சிறிது நேரம் விளையாட்டு, பேச்சு என்று நேரத்தை செலவழிப்பதன் மூலம், மைய சூழலுக்கு குழந்தை பொருந்திப் போக இது உதவும். மேலும், அங்கு ஏதேனும் குறைகள் இருப்பின், நமக்கும் தெரிந்து விடும்.குழந்தைக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது, எதற்கு பயப்படுவான், தூக்கத்தின் இடையில் வீறிடுவானா மற்றும் அலர்ஜி உண்டென்றால் அந்த விவரங்கள் உள்ளிட்ட குறிப்புகளை வாய்மொழியாக சொல்வதோடு, அதை எழுதி, குழந்தையை பார்த்துக் கொள்வோரிடம் தரலாம். இதில், குழந்தையின் சுருக்கமான மெடிக்கல் ஹிஸ்டரி மற்றும் குடும்ப மருத்துவர் விவரம் போன்றவற்றை குறிப்பிடுதல் நலம்!