உள்ளூர் செய்திகள்

பசுமை நிறைந்த நினைவுகளே! (28)

கடந்த, 98-ம் ஆண்டு, டூரில் கலந்து கொண்ட வாசகர்கள், தாங்களே நிகழ்ச்சிகளை நடத்தினர் என்று, கடந்த வாரம் சொல்லியிருந்தேன்.பட்டிமன்ற நடுவராக இருந்த புவனேசுவரி, ஒருவர் விடாமல், அனைவரையும் பேசவும், பாடவும் வைத்து, அவர்களை டூரோடு ஐக்கியப்படுத்தும் பணியை, அற்புதமாக செய்து கொண்டு இருந்தார்.பஸ்சுக்குள் இருந்த அனைவரும் பாடியது மட்டுமல்லாமல், பஸ் ஓட்டுனர் வெங்கடேசன் கூட ஒரு பாட்டு பாடினார். அதே நேரம், கூடவே இருந்து அனைவரையும் உற்சாகப் படுத்திக் கொண்டு இருந்த அந்துமணி, தனது முறை வந்தபோது, காணாமல் போய் இருந்தார்.வாசகர்களும் அவரை, தினமலர் குழுமத்தின் முக்கிய நபர் என்றே அறிந்திருந்ததால், ஏதோ முக்கியமான வேலையாக போயிருப்பார் என்று நினைத்து, அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் இறங்கினர்.நாட்டியம், ஓரங்க நாடகம், பட்டி மன்றம், மிமிக்ரி என்று, மூன்று நாட்களும், அவரவர் திறமையை அற்புதமாக வெளிப்படுத்தினர். வேடிக்கை பார்த்து, வயிறு வலிக்க சிரிப்பது மட்டுமே, எங்கள் வேலையாக இருந்தது.அந்த ஆண்டு, குறிஞ்சி வில்லா ரிசார்ட்சில், தங்கியிருந்தோம். மெயினருவியை பார்க்கும்படியாக அமைந்திருந்த அந்த விடுதியின் மாடியில் இருந்தபடி, மெயினருவியை பார்த்துக் கொண்டே நிகழ்ச்சிகளை நடத்தியது இன்னும் சந்தோஷத்தை தந்தது.இன்னொரு விஷயம், குற்றாலத்தில், அவ்வப்போது ஆளைத் தூக்கிச் செல்வது போல், பலத்த காற்று வீசும். இந்த காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், பந்தல்கள் பறக்கும்.பந்தியில் வைக்கப்படும் காய்கறி,சாப்பாடு,சாம்பார்,ரசம் எல்லாம் ஒன்றாக கலந்து, கலவை சாதமாகி விடும். இருந்தாலும், அந்த சுத்தமான, அழுத்தமான காற்றுக்கு ஈடு கொடுத்து, மாடியில் சாப்பிடுவது என்பது, இனிய சுகானுபவம்.அன்று அப்படி வீசிய காற்றின் வேகத்திற்கு, விருந்தின் ஆரம்பத்தில் வழங்குவதற்காக வைக்கப்பட்டு இருந்த குலோப் ஜாமூன்கள்,விருந்தின் முடிவில் வழங்குவதற்காக வைக்கப்பட்டு இருந்த ஐஸ்கிரீம் கப்புகளில் விழுந்துவிட, 'ஐஸ்கிரீம் வித் ஹாட் குலோப் ஜாமூன்' என்ற புதிய அயிட்டமாக மாறி விட்டது. அந்த பதார்த்தம், வித்தியாசமாகவும், சிறப்பாகவும் இருக்கவே, அதன்பிறகு, 'ஐஸ்கிரீம் வித் ஹாட் குலோப் ஜாமூன்' என்பது, தவிர்க்க முடியாத மெனுவாகி விட்டது.விடுதியின் உரிமையாளர்களான வாசுதேவன்-, பூங்கோதை தம்பதியினர், டூர் நடைபெற்ற மூன்று நாட்களிலும் வாசகர்கள் கூடவே இருந்து கவனித்துக் கொண்டனர். அவ்வப்போது, மதுரையில் உள்ள தங்களது நட்சத்திர ஓட்டலின் மெனுப்படி, மல்லி பிரியாணி, ஸ்டப்டு பரோட்டோ, வெரைட்டி, ப்ரைடு ரைஸ் போன்ற, புதிய உணவு வகைகளை கொடுத்தும் அசத்தினர்.அந்த ஆண்டு, அந்துமணியின் நண்பர்களான எழுத்தாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.இது, வாசகர்களுக்கு, கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.புத்தகத்தில் மட்டுமே படித்து, மானசீகமாக தாங்கள் மதித்துவரும் எழுத்தாளர்களை பார்ப்பதும், அவர்களுடன் பேசுவதும் அவர்களுக்கு நினைத்து பார்க்க முடியாத, அனுபவமாகவே இருந்தது.அவர்களில் ஒருவர்தான், ஜே.டி.ஆர்., என்றழைக்கப்படும், ஜோசப் டி. ரவி. 200 சிறுகதைகள், ஏழு நெடுந்தொடர், எட்டு குறுந்தொடர் என்று, எழுதி, இளம் வயதிலேயே புகழ் பெற்றவர். அந்துமணி மூலமாக, வாசகர்களுக்கு அறிமுகமாகி, எழுத்து உலகில் பிரபலமானவர். இப்போதும் தன் வீரியமிக்க எழுத்துக்களால், வாசகர்களை வசீகரித்து வரும் இவர், தற்போது, திண்டுக்கல் மாவட்ட மாற்றுத் திறனாளிகள், நல அலுவலராக பணியாற்றி வருகிறார். குற்றாலத்திற்கு பக்கத்தில் உள்ள ஆழ்வார்குறிச்சி தான், இவரது சொந்த ஊர் என்றாலும், எழுத்துப் பணி மற்றும் அரசுப்பணி காரணமாக, சென்னையில் செட்டிலாகி விட்டவர்.எப்போதும் ஒரு பொருளோ, நபர்களோ அருகில் இல்லாத போது தான் அதன் அருமை தெரியும் என்பது போல, குற்றாலத்தின் அருகில் இருந்த போது, அங்கே போவது பற்றிய சிந்தனை இல்லாமல் இருந்தவர், குற்றால டூர் பற்றியும், அதில், அந்துமணியின் பங்கு பற்றியும் படித்து, வாசகர் குற்றால டூரில், தானும் குடும்பத்தோடு கலந்து கொள்ள வேண்டும் என்ற, தன் விருப்பத்தை, அந்துமணியிடம் சொல்லி, அனுமதி பெற்றார். தன் மனைவி ப்ளாரன்ஸ் மற்றும் நான்கு வயது பெண் குழந்தை ஷர்மிளா ரஞ்சனியுடன் கலந்து கொண்டார். வாசகர்களோடு கலந்துரையாடி, தானும் சந்தோஷப்பட்டு, வாசகர்களையும் சந்தோஷப்படுத்தினார்.அதன் பிறகு, ஜே.டி.ஆர்., பற்றிய செய்திகளை, அவரது கதைகள் மூலமாகவும்,அவ்வப்போது மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் விழா தொடர்பாக, பத்திரிகைகளில் வரும் படங்களில் மட்டுமே பார்க்க நேரிட்டது.இந்நிலையில், சில நாட்களுக்கு முன், அவர் தன் மகளின் திருமண ஆல்பத்தை காட்டிய போது, ஆச்சரியமாக இருந்தது. ஆம்... நான்கு வயது சிறுமியாக, ஜே.டி.ஆரின் கையில் தவழ்ந்த சிறுமி ஷர்மிளா ரஞ்சனி, வளர்ந்து மணப்பெண்ணாக, மாப்பிள்ளை நரேஷ் கையை பிடித்து, நடந்து கொண்டு இருந்தார்.தற்போது, சிங்கப்பூரில் இருக்கும் ஷர்மிளாவிடம், குற்றாலம் பற்றிய நினைவுகள் குறித்து கேட்ட போது, அவர் தந்த பதில், ஆச்சரியத்தை வரவழைத்தது.குற்றாலமும், லிங்கமும்...குற்றாலம் மெயினருவியில் குறைவாகவோ, நிறைவாகவோ தண்ணீர் விழுவதைத்தான் எல்லாரும் பார்த்து இருப்போம். தண்ணீரே விழாமல் இருப்பதை, பலர் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை.கடும் வறட்சி நிலவும் ஏப்ரல், மே மாதங்களில் கூட, இயற்கையருளால், மெயினருவியில் மட்டும் தண்ணீர் கொஞ்சம் போல விழுந்து கொண்டுதான் இருக்கும். இதையும் மீறி, எப்போதாவது வறண்டு போய், பாறை மட்டுமே தெரியக்கூடிய சந்தர்ப்பத்தில், பாறைகளின் மீது, அபூர்வ காட்சியை பார்க்கலாம்.அது என்ன அபூர்வ காட்சி என்கிறீர்களா? வாய்ப்பு கிடைப்பவர்கள், போய் பாருங்கள். அந்த பாறையின் பெரும்பாலான இடங்களில், ஈஸ்வரனின் வடிவமான, லிங்க உருவம் நிறைந்து காணப்படும். சிறிதும், பெரிதுமான லிங்கங்கள் மீது, விழும் தண்ணீர்தான் பிறகு மக்கள் மீது விழுகிறது. அப்படி விழும் தண்ணீரில் குளிக்கும் மக்கள், எவ்வளவு புனிதம் பெற்றவர்கள்.தண்ணீர் விழும்போது, இந்த லிங்கங்கள் எதுவும் தெரியாது என்பதால், மக்கள் அருவியின் பின்னணியில் உள்ள இந்த லிங்கங்கள் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை.இந்த அருவி நீர்தான், இப்போதும் குற்றால நாதரின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இப்போது தெரிகிறதா... மெயினருவி தண்ணீர் எவ்வளவு புனித மானது என்று! ஆகவே தான், அருவி தண்ணீரை அசுத்தம் செய்யாதீர்கள், அது புனிதமானது, மூலிகை குணம் மிகுந்தது என்று சொல்கின்றனர். — அருவி கொட்டும்.எல். முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !