நினைவுகள்!
நாற்பது ஆண்டுகள் கழித்து, நான் படித்த, பள்ளிக்கூடத்தின், வகுப்பறையின் முன், நின்று எட்டிப் பார்த்தேன். ஏதோ விசேஷம் காரணமாக, அன்று, பள்ளிக்கு விடுமுறை. வகுப்பறைகள், பூட்டப்பட்டிருந்தாலும், எட்டிப் பார்க்கும் அளவுக்கு, மார்பளவு உயரத்திற்கு மேல், மூங்கில் தட்டி தான், இன்னும் இருந்தது. நான், வழக்கமாக அமரும், 'பெஞ்ச்' இன்னும், அப்படியே இருப்பதாகத் தான் தோன்றியது. இடைப்பட்ட, இந்த நீண்ட இடைவெளியில், எத்தனை மாற்றங்கள் எனக்குள்ளும், என்னைச் சுற்றிலும். மனம் கனத்துப் போய், எதனாலோ கண்கள் பனித்தன. 'பழைய நினைவுகளாலேயோ, திரைப்படம் பார்த்தோ அழத் தோன்றினால், 'வயதாகி விட்டதாக அர்த்தம்...' என்று, என் சகோதரி சொல்வாள். உண்மை தான்; வயதாகித் தான் போனது.''யார் சார் நீங்க, என்ன வேணும்?'' என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன். வாட்ச் மேன் நின்றிருந்தார். ''ஒன்றுமில்லை, இது, நான் படித்த பள்ளிக்கூடம். பார்த்துட்டுப் போக வந்தேன்.''''நல்லா பாருங்க சார். ஞாபகமா வந்திருக்கீங்க. ஆனா, பழைய ஆளுங்க யாரும், இப்ப இல்லை சார்,'' என்றபடி, அவர் நகர்ந்து போனார்.கமுதியில் இருந்து, 5 கி.மீ., தூரத்தில் இருக்கும், அழகிய கிராமம், மண்டல மாணிக்கம். மொத்தமே, நான்கைந்து தெருக்களும், அழகான, ஏகாந்தமான, ஒரு கிருஷ்ணன் கோவில் மட்டுமே உண்டு என்றாலும், இங்கு ஒரு, உயர்நிலைப் பள்ளிக் கூடமும் இருந்தது.எல்லாருக்கும் பிடித்தவர், கணக்கு வாத்தியார் நெட்டை கிருஷ்ணன். இரண்டு கிருஷ்ணன்கள் இருந்ததால், அவர்களை இனங்கண்டு கொள்ள, நாங்களாக, வைத்த பெயர் தான், நெட்டை கிருஷ்ணன். பூகோள வாத்தியாரு குட்டை கிருஷ்ணன்.சலவை செய்த வெள்ளை வேட்டி, வெள்ளைச் முழுக்கை சட்டையில், நல்ல நிறத்துடன், உயரமான மெலிந்த தேகத்துடன் காட்சியளிக்கும் நெட்டை கிருஷ்ணன் வாத்தியார், தன் பெரிய நெற்றியில் பளிச்சென்று திருநீறு பூசி, பச்சை நிற ராலீஸ் சைக்கிளிலிருந்து இறங்கும் அழகே தனி. அவரது, சைக்கிளை தள்ளி சென்று, 'ஸ்டாண்டில்' வைக்கும் வேலை ரமேஷுடையது.நாங்கள், 10 ஆம் வகுப்பு தேறி, 11 ஆம் வகுப்பிற்கு சென்ற முதல் நாள், கணக்கு வாத்தியார் நெட்டை கிருஷ்ணன், வகுப்பிற்குள் நுழைந்தார். அவர்தான் எங்களுக்கு வகுப்பு ஆசிரியர்.'எத்தனை பேர்டா, கணக்கு புஸ்தகமும், கணக்கு நோட்டும் வாங்கியிருக்கீங்க?' என்று கேட்டார். பாதி வகுப்பு, எழுந்து நின்றது. 'சரி, மீதிப்பேர் எழுந்திருங்க. உங்களிடம் புஸ்தகம், நோட்டு இல்லையா?''இல்லை சார். நாங்க போன வருஷம் படிச்சவங்ககிட்டேயிருந்து புத்தகம் வாங்கியிருக்கோம். போன வருஷம் எழுதாத பக்கத்தை, நோட்டாக தச்சு வச்சுருக்கோம் சார்.'புதிதாக புத்தகமும், நோட்டும் வாங்கி வந்திருக்கும் பசங்களை, எழுந்திருக்கச் சொல்லி, கைதட்டச் சொன்னார். பழைய புத்தகமும், தைத்த நோட்டும் வைத்திருந்த எனக்கு, எதனால் என்று புரியாத அளவுக்கு, அவர் மேல் மதிப்பும், பிரியமும் வந்தது.'சரி, இது எதுவுமே இல்லாத யாராவது இருக்கீங்களா? இருவர் எழுந்தனர். 'நீங்க, நாளை காலைல, என்கிட்ட இருந்து புத்தகமும், தைச்ச நோட்டும் வாங்கிக்கிங்க...' என்றார்.நெட்டை கிருஷ்ணன் வாத்தியார் திருமணமே செய்து கொள்ளவில்லை.புது வகுப்பு துவங்கி, 10 நாட்களுக்கு மேல் ஆயிற்று. அவருக்கு, தினமும், காலையும், மாலையும் காபி வாங்கி வரும் வேலை என்னுடையது. காலையில், இரண்டு பீரியடுகள் முடிந்து, 10.30க்கு இடைவேளை விட்டதும், நான் சிறுநீர் கழிக்கவோ, தண்ணீர் குடிக்கவோ செல்வதில்லை. ஆசிரியர்கள் ஓய்வு அறையில், அவரது நாற்காலியின் பக்கத்தில், ஒரு சில்வர் டம்ளர் வைக்கப்பட்டிருக்கும். அதை எடுத்து கழுவி, பள்ளிக்கூடத் தெருவின் கோடியில் இருக்கும், டீ கடைக்கு வேகமாக ஓடுவேன். வரும் போது, கையில் காபி டம்ளர் இருக்கும். ஆதலால், ஓடி வர முடியாது. எனவே, அதை, 'அட்ஜஸ்ட்' செய்ய, போகும் போது, எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ, அவ்வளவு விரைவில் போவேன். அது சர்க்கரை தட்டுப்பாடு இருந்த காலம். எனவே, மூன்று வகையில் காபி கிடைக்கும். கருப்பட்டி பாகில் போடும் காபி, 5 பைசா, வெல்லப் பாகானால், 7 பைசா, சார்க்கரை காபி, 10 பைசா. நெட்டை கிருஷ்ணன் வாத்தியாருக்கு எப்பொழுதுமே வெல்லபாகு காபிதான்.அவரது வீடும், எங்களது வீடும் ஒரே தெருவில் தான் இருந்தது. அவருக்கு, நிறைய உதவிகள் செய்து தர வேண்டுமென்று எனக்குத் தோன்றும். ஆனால், தெருவிலோ, வேறு எங்காவதோ அவரைப் பார்க்கையில், 'வணக்கம் சார்'ன்னு சொன்னால், பதிலுக்கு, சிரித்து, 'வணக்கம்,' சொல்வதைத் தவிர, திரும்பிக் கூட பார்க்க மாட்டார்.அளவான, மெல்லிய குரலில், போர்டில் கணக்குப் போட்டு, அவர் சொல்லித் தரும், அழகே அழகு. ஒருமுறை, சீனியின் அப்பா வகுப்பறைக்கு வந்து, 'சார், நான் சீனியின் அப்பா. அவன், எல்லா பாடத்திலும் நல்லாதான் மார்க் வாங்குறான். கணக்கு மட்டும் சரியா வரமாட்டேங்குது. அவனுக்கு, நீங்க, 'டியூஷன்' எடுத்திங்கன்னா நல்லா இருக்கும்...' என்று சொன்னார். 'நான் எப்பவும், யாருக்கும், 'டியூஷன்' எடுக்கிறதில்லை; அதற்கு, அவசியமும் இல்லை. இன்னும், ஒரு மாதம் கழித்து, சீனியின் மார்க்கை பார்த்து, பிறகு வந்து சொல்லுங்க...' என்றார். உண்மை தான்; கணக்கில் நாங்கள் யாருமே பெயிலாகவில்லை. அதுவரை, கணக்குப் பாடத்தில், பாஸ் மார்க் மட்டுமே வாங்கி வந்த நானும் கூட, பள்ளி இறுதி வகுப்பில், 92 மார்க் வாங்கினேன். அப்பொழுதெல்லாம், இது, மிக நல்ல மதிப்பெண்.நெட்டைக் கிருஷ்ணன் வாத்தியார், யாரையும் அடித்ததே இல்லை. கணக்கை தவறாகச் செய்தாலோ, வீட்டுக் கணக்கை போடாமல் வந்தாலோ. அவர்களை அருகில் வரவழைத்து, குனியச் சொல்லித் தலையில் குட்டுவார். மெலிதான, எலும்பால் மட்டுமே ஆன தேகமானதால், அவர் குட்டுவது வலிக்கும்.பள்ளி இறுதித் தேர்வுக்கு, தேர்வுக் கட்டணம் செலுத்த, நாள் நெருங்கிக் கொண்டு இருந்தது. 11 ரூபாய் என்பது, அப்பொழுது பெரிய தொகை. வீட்டில் இன்று, நாளை என்று, தவணை சொல்லிக் கொண்டு இருந்தனர்.அப்பொழுதெல்லாம், மாணவர்கள், சினிமாவுக்குச் செல்வது தவறாகக் கருதப்பட்டது. இதில், பக்திப் படங்கள் மட்டுமே விதி விலக்கு. சினிமாவின் மீது, ஈர்ப்பு எதுவும் எனக்கு இல்லை என்றாலும், எங்கள் ஊர் தியேட்டரில், 'காவியத் தலைவி' படம் திரையிடப்பட்டபோது, என் சகோதரிக்கு, துணையாக நானும் தியேட்டருக்குச் செல்ல நேர்ந்தது.மாணவர்கள், தியேட்டருக்கு வருகின்றனரா என்று கண்காணிக்க, தலைமை ஆசிரியர், கிளார்க் சங்கரலிங்கத்தை ஏற்பாடு செய்திருந்தார். மாலை காட்சிகளில், 'திடீர்' என்று, உள்ளே வந்து, இருட்டில், ஏதோ ஒரு மூலையில் அமர்ந்து, இடைவேளையின் போது, லைட் போட்டதும், எழுந்து, தியேட்டர் முழுவதையும் நோட்டமிட்டு, மாணவர்கள் யாராவது அங்கிருந்தால், அவர்கள் பெயரை ஒரு பேப்பரில் குறித்து, காலையில், தலைமை ஆசிரியரிடம் கொடுத்து விடுவார்.அடுத்த நாள் காலையில், அசெம்பிளியின் போது, எல்லார் முன்னிலையிலும், பெயர்களைப் படித்து, கைகளை நீட்டச் சொல்லி, பிரம்பால் விளாசுவார், தலைமை ஆசிரியர். இதற்கு பயந்து, மாணவர்கள், தியேட்டருக்குச் செல்வதில்லை. ஆனால், இந்த, 'செக்கிங்' தினப்படி நடப்பதில்லை. எப்போதாவது தான்.என் துரதிருஷ்டம், 'காவியத் தலைவி' படத்தை, நான் பார்த்த அன்று, சங்கரலிங்கம் என்னைப் பார்த்து விட்டார். மறுநாள், காலையில், இரண்டு கைகளிலும், தலைமை ஆசிரியரிடம் அடி வாங்கினேன்.வகுப்புக்கு வந்த பின், நெட்டை கிருஷ்ணன் வாத்தியார் என்னைக் கூப்பிட்டு... 'ஏண்டா தேர்வுக் கட்டணம் கட்ட பணம் இல்லை. “காவியத் தலைவி' பார்க்க காசு இருக்கோ...' எனக் கேட்டு, அடி பின்னி எடுத்து விட்டார். அவரது மூர்க்கத்தனமான கோபத்தையோ, அவர் பிரம்பை எடுத்ததையோ, யாரும் பார்த்ததில்லை. தலைமை ஆசிரியரிடம் அடி வாங்கியது ஒன்றுமே இல்லை என்று எண்ணும் அளவுக்கு வெளுத்து வாங்கி விட்டார். மாலையில், எங்களுடன் சேர்ந்து பேட்மிண்டன் விளையாடுவார்; உயரமாக இருந்ததால், அவர் சென்டரிங் பண்ணுவார். அவரது ராக்கெட் தொடும் தூரத்தில், நான், பிரன்ட்டில் ஆடுவேன். 'நெட்'டை ஒட்டி வரும் பந்தை, நான் எடுக்கத் தவறினால், என் பிட்டத்தில் அடி விழும். திரும்பிப் பார்த்தால், அவரது முகத்தில், சிரிப்பு இருக்கும். அவர் உரிமையோடு, என்னை அடிப்பது, எனக்குப் பெருமையாக இருக்கும்.பள்ளி இறுதி வகுப்பு முடிந்து, பரிட்சையும் முடிந்து, மார்க் ஷீட் வாங்கப் போயிருந்த போது, ஆசிரியர்கள் ஓய்வு அறைக்குப் போய் அவரைப் பார்த்தேன். ' பரவாயில்லடா, 400க்கும் மேல் (600மார்க்கு) வாங்கி இருக்க. கணக்கில் 92 மார்க். ம்...' என்று சிரித்தார். அவரை விட்டுப் பிரியும், அந்தத் தருணம், எனக்கு, அப்போது, உறைக்கவில்லை. 'நல்லா படிடா...' என்றபடி, அடுத்த வகுப்புக்குச் சென்ற போது, பார்த்தது தான், நான், அவரைப் கடைசியாக பார்த்தது. ஐந்து வருடங்களுக்கு முன், சென்னை வந்திருந்த என் நண்பன் ஒருவன், நெட்டை கிருஷ்ணன் வாத்தியார் காலமாகி விட்டதாகச் சொன்னான். அப்போது தான், நான், அவரை, இதுவரை சென்று பார்க்கவில்லையே என்ற குற்ற உணர்ச்சி, என்னுள் வியாபித்தது.அவர் குடியிருந்த வீட்டிற்குப் போனேன். வீட்டில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. அவருக்கென்று குடும்பம் எதுவும் இல்லாததால், தன் தம்பியின் குடும்பத்தோடு தான், வசித்து வந்தார். அவரது அறையைப் பார்க்க வேண்டும் என்று சொன்னேன். அவரது, 'ஈசிசேரும்', மேஜையும் அப்படியே தான் இருந்தன. பக்கத்தில், மிகப் பழையதாகிப் போன பச்சை நிற, 'ராலீஸ்' சைக்கிள். ஓ! அது என்ன...மேஜையின் மீது, கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த, சில்வர் டம்ளர்! டம்ளரையே நான் பார்ப்பதை கவனித்த அவரின் தம்பி மனைவி, ''ரிடையர் ஆகிவரும் போது, பள்ளியில் இருந்து இந்த டம்ளரை மட்டும் தான், எடுத்து வந்தார். அவர் நினைவாக, நாங்கள் அதை அப்படியே வைத்து விட்டோம்,'' என்றாள்.டம்ளரை எடுத்துக் கொண்டு, டீ கடைக்கு, வேகமாக ஓட வேண்டும் போல் எனக்குத் தோன்றியதுசார்ங்கம்