ஓடுகாலி!
மாலை, கதிரவன் அஸ்தமிக்கும் வேளை; வேலைக்கு சென்றவர்கள், அவரவர் வீட்டிற்கு, திரும்பியபடி இருந்தனர். மணி, 7:30 ஆகியும், வேலைக்கு சென்ற மகள் சரண்யா, இன்னும் வரவில்லையே என்று, கணவனிடம் புலம்பினாள் யசோதா.''விடுபுள்ள... அவ என்ன சின்னப்புள்ளயா...'' என்றார் ராமசாமி.கணவரிடம் இருந்து இப்படி ஒரு பதில் வருமென்று, அவள் எதிர்பார்க்கவே இல்லை. அவளது மன உளைச்சலையும், சுமைகளையும் பங்கிட, அவர் தயாராக இல்லை என்பது போல் தோன்றியது.''இல்லீங்க... கரெக்ட்டா, 6:30 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துடுவா... இன்னைக்கு இன்னும் வரக் காணோமே...''என்றாள்.யசோதாவிற்கு மூன்று பெண் பிள்ளைகள்; பெரியவள் சரண்யா, எக்ஸ்போர்ட் கம்பெனியில் வரவேற்பாளராகவும், சின்னவள் ரம்யா வேறொரு கம்பெனியிலும் வேலை செய்கின்றனர். கடைசிப் பெண் எட்டாம் வகுப்பு படிக்கிறாள்.ரம்யாவும் அலுவலகத்திலிருந்து வந்து விட்டாள். வீட்டிற்குள் நுழைந்ததும், ''திங்க என்னம்மா இருக்கு?'' என்றாள்.''போடி... இவ ஒருத்தி... நானே இன்னும் உங்க அக்காள காணோமேன்னு கவலையில இருக்கேன்,'' என்றாள் சோகம் அப்பிய முகத்துடன்!''இன்னைக்கு வியாழக் கிழமை; சந்தையில ஏதாச்சும், வீட்டுக்கு காய்கறி வாங்கிட்டு வர போயிருப்பா...'' என்றாள் ரம்யா.அதைக் காது கொடுத்து கேட்காமல், மகள் வரும் பாதையையே, பார்த்தபடி அமர்ந்தாள் யசோதா.இரவு, 8:00 மணியை தாண்டியதும், அவளுள் பதற்றம் தொற்றிக் கொள்ள, ''என்னங்க... நீங்க ஒரு எட்டுப் போய் அவ ஆபீசுல பாத்துட்டு வாங்களேன்; எனக்கென்னமோ பயமா இருக்கு.''''சரி சரி... கவலைப்படாத... நான் போய் பாத்துட்டு வரேன்,'' என, சைக்கிளில் கிளம்பினார் ராமசாமி.அவர் வாகனமும், அவரைப் போலவே ஏழ்மையாக இருந்தது. தேய்ந்த டயர், துருப்பிடித்த பெடல். பெல் இல்லை. அதற்குபதில், அவர் சைக்கிளை எடுத்து மிதிக்க ஆரம்பித்தால், அரசு பேருந்து மாதிரி, கர்ணகடூரமாக சத்தம் செய்து, எதிரில் வருவோரையும் பயந்து ஒதுங்கச் செய்யும்!மகள் வேலை செய்யும் கம்பெனிக்கு சென்றவர், வாட்ச்மேனிடம், ''சார்... சரண்யான்னு ஒரு பொண்ணு உங்க கம்பெனியில வேலை செய்யுதே... அந்தப் பெண்ணு வீட்டுக்கு போயிருச்சா?''''அவங்க அப்பாவுக்கு உடம்புக்கு முடியலன்னு சீக்கிரமே கிளம்பி போயிட்டாங்களே... ஆமாம் நீங்க யாரு?'' என்று கேட்டான் வாட்ச்மேன்.''நான் அவங்க பக்கத்து வீடு... வீட்டுக்குத் தான் போறேன். அதான் இருந்தா, அப்படியே கூட்டிட்டு போயிடலாம்ன்னு கேட்டேன்.''''போன் பண்ணி பாருங்க; எங்காவது பிரெண்ட்ஸ் கூட போயிருக்கும்,'' வாட்ச்மேன் தன் பங்குக்கு பேசி முடித்தான்.இறுகிய முகத்துடன், இடத்தைக் காலி செய்தார் ராமசாமி. மனித தலைகள் மட்டுமே தெரிந்த கடை வீதியின் ஊடே, உடைந்த சைக்கிளை மெல்ல மிதித்து, இருபுறமும் விழிகளை உருட்டி, பார்வையை வீசி தேடினார். யாரோ ஒரு பெண்ணைப் பார்த்து, 'தன் மகளா இருக்கக் கூடாதா...' என்று நினைத்து, வேகமாக சைக்கிளை மிதித்தார். ஆனால், அவள், தன் மகள் இல்லை என்பதை உணர்ந்தவுடன், அமைதியானார். ஆனாலும் போற வழியில் எப்படியும் கிடைத்து விடுவாள் என திடமாய் எண்ணியபடி, அடுத்த இடம் நோக்கி பயணிக்கலானார்.யசோதாவுக்கு போன் செய்து, ''சரண்யா வந்துட்டாளா?'' என்று கேட்டார்.''என்னங்க பேசுறீங்க... அவ வந்தா, நானே உங்களுக்கு போன் செய்து சொல்லியிருக்க மாட்டேனா...'' மகள் மேல் உள்ள அக்கறையில், கணவனிடம் சற்று கோபமாக பேசினாள்.''அவ பிரெண்ட்சுகளுக்கு போன் போட்டு கேட்டியா?''''கேட்டுட்டேன்; யாருமே தெரியலங்கிறாங்க,'' என்றாள் இயலாமையுடன்!உடன் பிறந்த அண்ணன், தம்பிகள் வசதியாக இருந்தும், யசோதாவிற்கு உதவிக்கு யாருமில்லை. அதனால், கணவரும், பிள்ளைகளும் தான், அவளின் உலகமாகிப் போனது. ''நான் வீட்டுக்கு வர்றேன்; அப்புறம் பேசிக்கலாம்.''ராமசாமிக்கு மனதில் பயம் தொற்றியது.ஒரு காலத்தில், கார்பென்டர் வேலையில், நன்றாக சம்பாதித்தவர் தான் ராமசாமி. உடன் வேலை செய்த நண்பர்களின் சதி, நம்பிக்கை துரோகத்தால், அந்தத் தொழிலையே விட்டுட்டு, மனைவியுடன் சேர்ந்து, தள்ளுவண்டி கடை நடத்துகிறார்.நேரம் ஆக ஆக, யசோதாவின் நெஞ்சில் பயம் ஊடுருவியது. எதிர்வீட்டு இளைஞனை அழைத்து, விஷயத்தை மெதுவாகச் சொன்னாள்.''தம்பி... சரண்யா இன்னும் வீட்டுக்கு வரல; நீங்க கொஞ்சம் கம்பெனி வரைக்கும் போய் என்னாச்சுன்னு பாத்துட்டு வர்றீங்களா... வேணும்ன்னா நானும் கூட வர்றேன்.''''என்னக்கா சொல்றீங்க... அண்ணன் எங்க?''''அவரும் தேடித்தான் போயிருக்காரு...''''அப்படியா... வாங்க போகலாம்; ஒண்ணும் பயப்படாதீங்க; சரண்யா கிடைச்சுடுவா.''ஒற்றுமையாய் வாழும் அந்த குடும்பத்திற்கு, நம்மால் முடிந்த உதவியை செய்வோமே என்று, பைக்கை ஸ்டார்ட் செய்தான் ராஜு. அவனுடன் யசோதா புறப்பட, எதிரே வந்தார் ராமசாமி.''என்னங்க சரண்யாவ பாத்தீங்களா?''''பாத்தா கூட்டிட்டு வந்திருக்க மாட்டேனா...''''காலையில கோபமா ஏதாச்சும் திட்டுனீங்களாக்கா?'' ஒரு வாரத்திற்கு முன், மறைவான இடத்தில், ஒரு பையனுடன் சரண்யா பேசிக் கொண்டிருந்ததை பார்த்திருந்தான் ராஜு.''இல்லப்பா.''''அண்ணே... கம்பெனியில கேட்டுப் பாத்தீங்களா?''''சீக்கிரமாவே புறப்பட்டு போயிட்டான்னு வாட்ச்மேன் சொல்றாரு,'' என்றார் ராமசாமி. இதைக் கேட்டதும், யசோதாவுக்கு அழுகை வந்தது.அரை மனதோடு வலிந்து உருவாக்கிய நம்பிக்கையோடு, மனைவியின் கையைப் பிடித்து ஏக்கத்தோடு பார்த்தார் ராமசாமி. பாவம்... அந்த அப்பாவி மனிதருக்கு யார் தான் ஆறுதல் சொல்வர்!புரிந்து கொண்ட யசோதா, ''அய்யோ... என் பொண்ண நானே தொலைச்சுட்டேனே...'' கண்களில் நீர் கசிய, அழ ஆரம்பித்தாள்.''இதோ பாரு யசோதா... ரோட்டுல நின்னு அழாதே... வா வீட்டுக்கு போகலாம். காலை வரைக்கும் பாத்துட்டு, அப்புறமா போலீஸ்ல புகார் கொடுக்கலாம்.''முந்தானையால் கண்களை துடைத்து, ராமசாமியுடன் நடக்க ஆரம்பித்தாள்.'அடடா... இப்படி ஒரு பிரச்னை வரும்ன்னு தெரிஞ்சிருந்தா, அன்னைக்கு நான் பாத்ததை சொல்லியிருக்கலாமே...' என ராஜுவின் நெஞ்சம் கனத்தது.இரவு முழுவதும் வீட்டில் யாரும் தூங்கவில்லை. அழுதழுது எல்லாருடைய கண்களும் கலங்கியிருந்தன.பொழுது விடிந்தது; காலிங்பெல் அழுத்தும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்த ரம்யா, ''வாங்க மாமா...'' என்றாள்.தன் அண்ணனைப் பார்த்ததும், குபீரென்று அழ ஆரம்பித்தாள் யசோதா.''என்னம்மா என்ன நடந்துச்சு... ஏன் அழற?''''என்னத்தண்ணே சொல்ல... நேத்து ராத்திரியிலிருந்து, சரண்யா வீட்டுக்கே வரல...'' என்றவளின் கண்களில் இருந்து, கண்ணீர் வழிந்தோடியது.''என்னம்மா சொல்ற நீ... சரண்யாவ ஏதும் திட்டினியா...'' என்று கேட்டவன், ''சரி அழாதே... நாம போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்திடலாம்.''''வேணாம்ண்ணே... குடும்ப மானம் போயிடும்.''''அப்ப என்னதாம்மா செய்றது...''''பெத்து, இவ்ளோ நாளா வளர்த்ததற்கு, அவ இப்படியா செய்துட்டு போகணும்...''தம்பிக்கும், தன் மனைவிக்கும் போன் போட்டு விஷயத்தை சொன்னான், யசோதாவின் அண்ணன். அன்று, ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஒரு மணி நேரத்தில் எல்லாரும் யசோதாவின் வீட்டிற்கு வந்து விட்டனர்.விஷயம் அக்கம் பக்கத்திற்கு பரவியது.''என்னத்த சொல்றது... இந்தக் காலத்து பசங்கள...'' பெருசு ஒன்று, பெருமூச்சு விட்டது.''மதினி... நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க. ஏன் இந்த சிறுக்கி மவ, இப்படி செய்தா... போனா போகட்டும் விடுங்க. இனி, அவ இந்த வீட்டுப் பக்கம் வந்தாக் கூட சேர்க்காதீங்க.''''ஏய்... நீ பாட்டுக்கு ஏதாச்சும் உளறாத... அவளே பொண்ண காணலன்னு அழுதுட்டு இருக்கா. நீ வேற கடுப்பேத்திக்கிட்டு...'' மனைவியை திட்டினான் யசோதாவின் அண்ணன்.இருபத்து எட்டு வயதை தொட்டு விட்ட சரண்யாவிற்கு சடங்கு சுத்தக் கூட தாய்மாமன் வரவில்லை. சீர் செய்ய விடவில்லை அவன் மனைவி. பூர்வீக சொத்தில் கூட யசோதாவிற்கு பங்கு தர அனுமதிக்கவில்லை.யசோதாவிற்கு கல்யாண வயதில் இரு பெண்கள் இருந்தும், வசதியில்லை என்பதற்காக, தன் இரு மகன்களுக்கும் வெளியில் இருந்து தான் பெண் எடுத்தான் யசோதாவின் அண்ணன். இப்போது சரண்யாவை வசைபாடுகின்றனர்.சரண்யா வீட்டை விட்டு சென்று மூன்று நாட்களாகி விட்டது. ரம்யா வேலைக்கும், சின்னவள் ஸ்கூலுக்கும் சென்று விட்டனர். மொபைல் சத்தம் ஒலிக்க, ஆன் செய்து, ''ஹலோ...'' என்றாள் யசோதா. அப்போது, வீட்டிற்குள் நுழைந்த யசோதாவின் அண்ணி, ''யார் போன்ல... அந்த ஓடுகாலி ஏதாச்சும் போன் பண்ணினாளா?'' என்று கேட்டாள்.''இல்ல அண்ணி...'' என்றவள், மொபைலை, 'ஆப்' செய்யாமல், அப்படியே கீழே வைத்தாள்.''இந்தா பாருங்க அண்ணி... நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க. அந்த ஓடுகாலிய நினச்சு உடம்ப கெடுத்துக்காதீங்க. இன்னும் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க; அதுகள கரையேத்தணும்ல... போய் கடைய திறந்து பொழப்ப பாக்கிற வழியைப் பாருங்க,'' என்றவள், வாசலில் யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு வெளியே சென்றாள்.உடனே மொபைலை எடுத்து காதில் வைத்து, அழ ஆரம்பித்த யசோதா, ''சரண்யா எப்படிம்மா இருக்கே... மூணு பொட்டப் புள்ளைங்கள பெத்த என்னால உனக்கு கல்யாணம் செய்து வைக்க முடியல. அதனாலத்தான் நீ, விரும்பின பையனோட போறதுக்கு சம்மதிச்சேன். கடைசியில என்னால நீ, ஓடுகாலின்னு பேர் வாங்கிட்டியே...''எதிர்முனையில், ''அழாதீங்கம்மா... இந்த விஷயம் நம்மோட இருக்கட்டும். தங்கச்சிக ரெண்டு பேருக்கும் தெரிய வேணாம். நான் இங்க நல்லாயிருக்கேன். அவரு என்னை நல்லா பாத்துக்கிறார். திரும்ப நம்ம ஊருக்கே அவரோட வந்துடுவேன். அப்ப உங்களயும், தங்கச்சிகளையும் நல்லாப் பாத்துப்பேன்; கவலைப்படாதீங்க. நம்ம கஷ்டத்த நாம தான் பங்கு போட்டுக்கணும். அத்தை பேசினதையெல்லாம் காதுல வாங்காதீங்க...'' என்றாள் சரண்யா.''சரிம்மா; பத்திரமா இரு.''தன்மானமா, தன் மகளின் வாழ்க்கையா என்ற கேள்வி எழுந்த போது, தன் மகளின் வாழ்க்கை தான் முக்கியம் என்று உணர ஆரம்பித்த யசோதாவின் கண்கள், பனித்தபடியே இருந்தன. தனக்குள் இருந்த சுமைகளில் கொஞ்சத்தை இறக்கி வைத்த நிம்மதியோடு, தள்ளுவண்டியை நகர்த்தியபடி சாலையை நோக்கி நடந்தாள், யசோதா!பெருமாள் நல்லமுத்து