ஒன் மேன் ஆர்மி ஜஸ்வந்த் சிங்!
இந்தியா - சீனாவிற்கு இடையே மூண்ட போர், நவம்பர், 15, 1962ல், முடியும் தருணம். எல்லையில் உள்ளவர்களை, இந்திய ராணுவ உயர் அதிகாரிகள், திரும்ப வரச்சொல்லினர். கர்வால் ரைபல்ஸ் படை பிரிவை சேர்ந்த, ஜஸ்வந்த் சிங், திரிலோக் சிங் மற்றும் கோபால் சிங் ஆகிய மூவரும், தோல்வியுடன், திரும்ப மனமில்லாமல், வேறு ஒரு முடிவை எடுத்தனர். சீன முகாம்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த நவீன ரக இயந்திர துப்பாக்கிகளை, எதிரிகள் அயர்ந்த நேரத்தில், திரிலோக் சிங் மற்றும் கோபால் சிங், அள்ளி வருவது என்றும், அவற்றை ஜஸ்வந்த் சிங், பத்திரப்படுத்துவது என்றும் முடிவானது.அதன்படியே இருவரும், எதிரி முகாமிலிருந்து, இயந்திர துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளை எடுத்து வந்தனர். கடைசியாக, இன்னும் கொஞ்சம் ஆயுதங்களை எடுத்து வரலாம் என, சீன எல்லைக்குள் நுழைந்தவர்கள், ராணுவத்தினர் கண்ணில் பட்டு விட்டனர்; இருவரையும் சுட்டு கொன்றனர்.இக்காட்சியை, மறைவிலிருந்து பார்த்து, கொதித்து போனார், ஜஸ்வந்த் சிங். 'விடிந்ததும், இந்திய எல்லைக்குள் நுழைய வேண்டியது தான்...' என, நினைத்தனர், சீன வீரர்கள்.இதற்காகவே காத்திருந்த, ஜஸ்வந்த் சிங், சீன ராணுவம், இந்திய எல்லையில் கால் வைத்ததுமே, குண்டுகளை மழையாக பொழிந்தார்.இதை கொஞ்சமும் எதிர்பாராத, சீன ராணுவத்தினர், கொத்து கொத்தாக செத்து விழுந்தனர். உயிர் பிழைத்தோர், வேறு வழியாக, குண்டு வந்த திசையை நோக்கி ஓடினர்.மற்றொரு இடத்திலிருந்து, இயந்திர துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும், மேலும் பல எதிரிகளை கொன்று குவித்தார், ஜஸ்வந்த் சிங்.இப்படி, தன் இருப்பிடத்தை மாற்றி மாற்றி, எதிரிகளை பந்தாடிய, ஜஸ்வந்த் சிங்கின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், சீன வீரர்கள் பின்வாங்கினர். 72 மணி நேரம் நடந்த, இந்த போரில், ஜஸ்வந்த் சிங், தனி ஒருவனாக செயல்பட்டு, 300க்கும் மேற்பட்ட, சீன ராணுவ வீரர்களை கொன்றார்.கடைசியில், இத்தனையும் செய்தது, தனி ஒரு ஆள் என தெரிய வந்ததும், ஜஸ்வந்த் சிங்கை, சீன ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். இன்னும் சில நொடிகளில், தன்னை சிறைப்படுத்தி, எதிரி நாட்டில் அழைத்து போய் சித்திரவதை செய்வர் என்பதை உணர்ந்து, தன்னைத் தானே சுட்டு, இறந்து போனார். நாட்டுக்காக, ஜஸ்வந்த் சிங் தன் உயிரை அர்ப்பணித்த போது, அவருக்கு வயது, 21.ஜஸ்வந்த் சிங்கின் இறந்த உடல் மீது சரமாரியாக சுட்ட எதிரிகள், அப்போதும், ஆத்திரம் தணியாமல், அவரின் தலையை வெட்டி எடுத்துச் சென்றனர்.போர் ஒப்பந்தங்கள் எல்லாம் கையெழுத்தான பின், என்ன நடந்தது என்பதை, சீன ராணுவ உயர் அதிகாரி விசாரித்து அறிந்தார். கோழையை போல, ஜஸ்வந்த் சிங் தலையை கொய்து வந்ததை கண்டித்து, அவரின் வீரத்தை புகழ்ந்து, மார்பளவு வெண்கல சிலையை தயார் செய்து, ராணுவ மரியாதையுடன் கொடுத்தனுப்பினார்.அருணாசல பிரதேசத்தில் உள்ள, தவாங் என்ற இடத்தில், ஜஸ்வந்த் சிங்கின் சிலையும், அவர் காவல் காத்த இடமும், 'ஜஸ்வந்த் கர்' என்ற பெயருடன், நினைவாலயமாக, கம்பீரமாக காட்சியளிக்கிறது.திரிலோக் சிங் மற்றும் கோபால் சிங்கிற்கு, 'வீர் சக்ரா' விருதும், ஜஸ்வந்த் சிங்கிற்கு, 'மகாவீர்' சக்ரா விருதும் வழங்கி, கவுரவித்தது, மத்திய அரசு. எல்.எம். ராஜ்