உள்ளூர் செய்திகள்

திண்ணை!

நடிகர் ஸ்ரீகாந்த் எழுதுகிறார்:ஆனந்த விகடனில் ஜெயகாந்தனின் 'யாருக்காக அழுதான்?' நாவலை படித்த போது, கண்டிப்பாக இவரை சந்தித்தே தீர வேண்டுமென்று நான் முடிவெடுத்து விட்டேன்.ஒரு நாள் மதியம் கவிஞர் வாலியுடனும் (அப்போது அவர் சினிமா கவிஞர் வாலி அல்ல) ஸ்ரீரங்கம் ரங்கராஜன் மற்றும் பிற நண்பர்களான மேஜர் சுந்தரராஜன், மணவாளன் ஆகியோருடன் ஜெயகாந்தன் குடியிருந்த எழும்பூர் வீட்டிற்கு சென்றேன்.ஆஜானுபாகுவாக, ஒரு பயில் வானைப் போன்று, தலை நிறைய சுருள் சுருளான முடியுடன் கதர் சட்டை, கதர் வேட்டியுடன், 'யாரப்பா?' என்ற கேள்வியுடனும், ஒரு கம்பீர பார்வையுடனும் அவர் தரிசனம் தந்தார்.'வாருங்கள், திண்ணையிலே உட் கார்ந்து பேசுவோம்...' என்ற வாறு, தெரு வாசற்படிக்கு அருகே இருந்த அந்த ஒற்றையடிப் பாதை போன்ற திண்ணையில், அவரைப் பின் தொடர்ந்து போய் உட்கார்ந்தோம்.'உங்களது, 'யாருக்காக அழுதான்' கதை ரொம்ப நல்லாயிருக்கு. இதை நீங்கள் நாடகமாக்கி தர வேண்டும்...' என்று நான் சொல்லவும், நண்பர்கள் என்னைத் தொடர்ந்து கோரஸ் பாடினர்.'காபி சாப்பிட்டுக் கொண்டே பேசலாமே...' என்றவாறு அவர் எழுந்து, எதிர் சாரியில் இருந்த ஓட்டலை நோக்கி நடக்க, நாங்களும் பின்தொடர்ந்து ஓட்டலுக்குள் நுழைந்தோம்.காபி சாப்பிட்டு முடித்து விட்டோம். எங்களை பார்த்து நட்புடன், 'நீங்கள் இருக்கிற இடத்தை சொல்லுங்கள். நான் அங்கேயே வந்து நாடகமாக்கி, தருகிறேன். எனக்கென்னமோ, நாடகமெல்லாம் என்னால் எழுத சரிப்படாது என்று தான் தோன்றுகிறது...' என்றார்.மறுநாள் நாங்கள் எதிர்பாராத வகையில், எங்கள் அறைக்கு வந்தார். எங்களுக்கு மகிழ்ச்சி தாள முடியவில்லை. பேப்பர் பேனாவை கொடுத்தோம்.'உங்க சவுகர்யம் போல் இருந்து எழுதி விட்டு, போகும் போது பூட்டி விட்டு போங்கள்...' என்று சாவியை அவரிடம் கொடுத்துவிட்டு, நாங்கள் எங்கள் அலுவலகத்திற்கு புறப்பட்டு போனோம். அக்காலத்தில், நாங்கள் முற்றிலும் தொழில் நடிகர்களாக மாறியிருக்கவில்லை.தினமும் நாங்கள் மாலையில் வெகு ஆர்வத்துடன் அவர் எழுதியதை படிக்கலாம் என்று அறைக்கு திரும்புவோம். அறை பூட்டி இருக்கும். அறையின் மூலையில், கிழித்துப் போட்ட காகிதங்கள் பந்து போல் சுருட்டிப் போடப்பட்டு குவியலாய் இருக்கும்.இவ்விதம் மூன்று நாட்கள் சென்றன. நான்காவது நாள் மாலை, நாங்கள் அறைக்கு திரும்பும் போது, அவரே அங்கு இருந்தார். எங்களுக்கு ஒரே குஷி... எழுதியிருப்பார் என்று.எங்களைப் பார்த்ததும், ஒரு புன்முறுவலுடன் மீசையை நீவியவாறு, 'எல்லாரும் இப்படி உட்காருங்கள்...' என்றார். நாங்கள் வட்டமாக கூடி அமர்ந்தோம். எங்கள் கண்கள் அறையைச் சுற்றி நோட்டமிட்டன. எங்களது, 'ஸ்கிரிப்ட்' தென்படுகிறதா என்று!அவர் சொன்னார்: இத்தனை நாட்களாக நன்றாக காபி, டிபன் சாப்பிட்டேன். சாப்பாடும் சாப்பிட்டேன், தூங்கினேன். நல்ல, 'ரெஸ்ட்டுப்பா!' ஏம்ப்பா, உங்களுக்கு நெசமாலும் நாடகம் தேவைதானா? அதுவும் என் நாடகம் தேவைதானா? என் கதையை படிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் என் மீது காட்டும் அன்புக்கு மிக்க நன்றி. வரட்டுமா. என் மேல் வருத்தப்படாதீர்கள்... என்று எழுந்து விட்டார்.நாங்கள் ஒன்றும் பேசவில்லை. மவுனமாக வாசல் வரை வந்து அவரை வழியனுப்பி வைத்தோம்.***இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ். தன் 18வது வயதில், கிழக்கு இந்திய கம்பெனியின் ஊழியராக கோல்கட்டா வந்தார். 1772ல் வங்காளத்தின் கவர்னராக, 40-வது வயதில் நியமிக்கப்பட்டார். முகலாய நவாபுகளை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்தார். இவர் மிரட்டலுக்கு பணியாமல், இவர் மீது மேலிடத்திற்கு புகார் கொடுத்தவர்களில், மகாராஜா நந்தகுமாரும் ஒருவர். அவர் மீது பொய் கையெழுத்திட்டதாக, 1775ம் ஆண்டு ஹேஸ்டிங்ஸ் வழக்கு தொடர்ந்தார். விசாரணை ஜூன் மாதம் தான் துவங்கியது. ஆனால், மே மாதம் 18ம் தேதி வாரன் ஹேஸ்டிங்ஸ் இவருக்கு மரண தண்டனை கிடைக்குமென்று கூறினார். இதன்படி, கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதி, நந்தகுமாருக்கு ஜூன் மாதம் மரண தண்டனை விதித்தார். நந்தகுமார் நடுரோட்டில் தூக்கிலிடப் பட்டார். பொய் கையெழுத்திற்கு மரண தண்டனை விதிக்கும், 1728ம் வருடத்திய ஆங்கிலேயச் சட்டம், அப்போது இந்தியாவில் நடை முறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.— 'உலக மகா கொடுங்கோலர்கள்' நூலிலிருந்து...***நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !