திண்ணை!
மறைந்த, ரா.கி.ரங்கராஜன் எழுதிய, 'நீங்களும் முதல்வராகலாம்' நூலில் இருந்து: துணிச்சல்காரனுக்கு எப்போதும் வெற்றி உண்டு; ஊர் பேர் தெரியாத சாதாரண ஆள் ஒருவன், எல்லாருக்கும் தெரிந்த பெரிய மனிதனுடன் மோதினால், அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பான்.ரோமாபுரியில், பீட்ரோ என்ற கூலித் தொழிலாளிக்கு, கவிஞனாக புகழ் பெற ஆசை. அப்போது, பத்தாவது லியோ, போப்பாண்டவராக இருந்தார். அவருக்கு, யானை ஒன்றை பரிசாக அனுப்பி வைத்தார் போர்த்துக்கீசிய மன்னர். அதுவரை ரோமில், யாருமே யானையை பார்த்ததில்லை; போப்புக்கு, அதன்மீது பிரியம் அதிகரித்தது. 'ஹன்னா' என்று அதற்கு பெயர் சூட்டி, அதனுடன் விளையாடி, பொழுது போக்கினார்.ஆனால், திடீரென, நோய் கண்டு, இறந்து போனது ஹன்னா. போப்பாண்டவருக்கு, தாங்க முடியாத வருத்தம். அதற்கு சமாதி எழுப்பி, விழா எடுத்தார். மக்கள் இதை கேலி பேசினர்.இதுதான் சந்தர்ப்பம் என்று, ஒரு கேலி கவிதை எழுதி, ஊரெங்கும் வினியோகித்தான், பீட்ரோ.'ஹன்னாவின் உயில்' என்று தலைப்பிட்டு, காதுகள், கால்கள் மற்றும் தன் உறுப்புகள் ஒவ்வொன்றையும் யார் யாருக்கு தர வேண்டும் என்று ஹன்னா கூறுவது போல், ஊரில் உள்ள பெரிய மனிதர்களை எல்லாம், கிண்டல் செய்து எழுதினான்.மக்கள் ரசித்து படித்து, சிரித்தனர். பீட்ரோ, தன் பெயரை போட்டுக் கொள்ளாததால், யார் எழுதியது என்று தெரியாமல் திகைத்தனர். தொடர்ந்து, பல பெரிய மனிதர்கள் பற்றி, கேலி - கவிதைகள் வந்து கொண்டேயிருந்தன. போப்பாண்டவரே, அந்த கவிதைகளை படித்து சிரித்தார். கடைசியில், பீட்ரோ தான் அதை எழுதினான் என்று கண்டுபிடித்து, நேரில் கூப்பிட்டு பாராட்டி, அவனுக்கு ஒரு வேலையும் போட்டு கொடுத்தார்.பொதுமக்களின் மனதில் என்ன இருக்கிறதோ, அதை, தைரியமாக எடுத்து சொல்லும் துணிவு இருந்தால் போதும்; சாதாரண ஆளும், பெரிய ஆள் ஆகி விடுவான் என்று எழுதியுள்ளார், ரா.கி.ரங்கராஜன்.'மணிக்கொடி' (1950) இலக்கிய இதழில், கு. ஸ்ரீநிவாசன் எழுதியது: பாரதியைப் பற்றி பேசும் போது, அடிக்கடி ஒரு நிகழ்ச்சியை நினைவூட்டுவார் வ.ரா., என அழைப்படும் வ.ராமசாமி. அது:குடியானவன் வீட்டுக் கொல்லையில், பூசணி காய்த்திருந்தது. ஒரு நாள் இரவு, நன்றாக முற்றிய சாம்பல் பூத்த காய்களைப் பறித்துக் கொண்டிருந்தான் திருடன் ஒருவன். சத்தம் கேட்டு எழுந்து வந்தான் குடியானவன். இருட்டில் ஒரு உருவம் தென்பட்டது. பூசணியின் சாம்பலில் திருடனின் முகம், தலை மற்றும் உடம்பு முழுவதும் வெண்மையாகத் தோற்றமளித்தன. 'யாரங்கே?' என்று அதட்டினான் குடியானவன்.திருடன் புத்திசாலி; கம்பீரமான குரலில், 'பக்தா... இது பூலோகமா?' என்று பதிலுக்குக் கேட்டான். குடியானவனுக்கு விதிர் விதிர்த்து விட்டது. கயிலையிலிருந்து சிவபெருமானே வந்து விட்டதாக நடுங்கி, 'கயிலை நாதரே... காப்பாற்ற வேண்டும்...' என்று காலில் விழுந்தான் குடியானவன்.'இது தானா பூலோகம்?''ஆம் ஸ்வாமி!''நீங்கள் தான் மனுஷர்களா?''ஆம் ஸ்வாமி!''இக்காய்கள் நல்ல ருசியுள்ளவையா?''கயிலையில் இவை கிடையாதோ?''இல்லை!''அப்படியானால், இவற்றை நீங்கள் எடுத்துப் போக வேண்டும்...' என்றான் குடியானவன்.'நல்லது... இப்போது நான் அந்தர்த்யானம் ஆக வேண்டும்; நீ குடிசைக்குப் போ...' என்றான், திருடன்.தன் பக்தி பாக்கியத்தை வியத்தவாறு உள்ளே போனான் குடியானவன்; 'சிவபெருமான்' பூசணிக் காய்களுடன் வெளியே போனார்.அதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த பாரதி, 'பார்த்தாயா... தமிழனின் பக்தியை...' என்றார். நடுத்தெரு நாராயணன்