திண்ணை!
'தமிழ் சினிமா வளர்ந்த கதை' நூலில், தியோடர் பாஸ்கரன்: 'சென்னை அசோசியேட் பிலிம்ஸ்' தயாரித்த படங்களை இயக்கியதுடன், அவற்றில் நடிக்கவும் செய்தார், ராஜா சாண்டோ. மேலும், மும்பை சென்று, இந்திப் படங்களிலும் நடித்தார். உடற்பயிற்சி மூலம் உடலை கட்டுமஸ்தாக வைத்திருந்த இவர், மல்யுத்தப் போட்டிகளில் கலந்து, 'சாண்டோ' என்ற பட்டத்தைப் பெற்றார்.புராணப் படங்களையே தயாரித்து வந்த காலத்தில், சம காலத்திய கதைகளை, அதாவது, சமூகப் படங்களை உருவாக்கத் துணிந்ததுடன், அத்தகைய படங்களில் நடிக்கவும் செய்தார். 1929ல், அனாதைப் பெண் மற்றும் 1930ல், பேயும் பெண்ணும் போன்ற படங்களை உருவாக்கினார். நல்லதங்காள் கதையை, ராஜேஸ்வரி எனும் சமூகப் படமாக, 1931ல் தயாரித்தார்.தான் காதலித்த வாலிபனை மணக்க விரும்பிய பெண், தந்தையால் அடித்து விரட்டப்பட்டு, பல இன்னல்களுக்குப் பின், தான் நேசித்தவனிடமே சேருவது தான், அனாதைப் பெண் படத்தின் கதை. இதுதான், நம் முதல் காதல் சினிமா. ஆனால், ராஜா சாண்டோ படங்களில், ஒன்று கூட இப்போது, நம்மிடம் இல்லை.மார்ச், 21, 1964ல் 'காஞ்சி' இதழில் அண்ணாதுரை எழுதியது: காங்கிரசின் தேர்தல் சின்னம் மாடு என்பதற்காக, ஒரு மாட்டை அடித்துக் கொன்று விட்டனர், கழகத்தார் என்று ஏதேதோ வீண் பழிகளை நம் மீது சுமத்துகின்றனர்.'இது நடைபெறவே இல்லை; அபாண்டம்...' என்று அறிக்கை வெளியிட்டிருந்தார், கருணாநிதி. இதை, 'மெயில்' இதழ் வெளியிட்டு, 'அப்படியே யாரோ சிலர், அதுபோலச் செய்திருந்தால் கூட, அது கண்டிக்கத்தக்கதே! அதற்காக கழகத்தை அதற்குப் பொறுப்பாக்கலாமா...' என்றும் எழுதியிருந்தது.'இன்று பத்திரிகையில் பார்த்தீர்களா... அமெரிக்காவிலே, ஒரு அரசியல் கட்சி, எதிர்க்கட்சியின் தேர்தல் சின்னமான யானையை மனதில் வைத்து, கட்சி விழா விருந்தில், யானைக் கறி சமைக்கப் போவதாக ஒரு செய்தி வந்துள்ளது. ஆப்ரிக்காவில் வேட்டையாடி கொன்று, யானைக் கறியைப் பதப்படுத்தி, அமெரிக்காவுக்கு கொண்டு வர ஏற்பாடாம். இது பற்றி கண்டன தலையங்கம் எழுதக் காணோம். நடக்காத ஒன்றை வைத்து, நம் கழகத்தைக் கண்டிக்கின்றனர்.... ' என்று நண்பர்கள் பேசிக் கொண்டனர்.'உழைப்பாளர் கட்சியின் சின்னம், கோழி; தேர்தலில் உழைப்பாளர் கட்சி தோற்ற போது, காங்கிரசார் நடத்திய வெற்றி ஊர்வலத்தில், கோழியை அறுத்து, தூக்கிக் கொண்டு போயினர்...' என்று, கூறினேன்.வ.ரா.,எழுதிய, 'மகாகவி பாரதியார்' நூலிலிருந்து: மரம், செடி, கொடிகளுள்ள தோட்டத்தை காணுவதிலும், அதில் வசிப்பதிலும் பாரதியாருக்கு அளவில்லாத ஆனந்தம். 'வளர்ச்சியில் சுரணையில்லாதவர்களுடைய முகங்களை பார்ப்பதைக் காட்டிலும், வளரும் செடி கொடிகளை பார்த்து ஆனந்தமடையலாம்...' என்று அடிக்கடி சொல்வார் பாரதியார். 'ரோஷமில்லாத முகத்தை எப்படி ஓய் பார்த்துக் கொண்டேயிருப்பது...' என்று, நொந்து கொள்வார்.இம்மாதிரி வெறி பிடித்தாற் போல பேசும் காலத்தில், அவர் வீட்டுக்குள் இருக்க இசைவதில்லை. யாரையேனும் அழைத்துக் கொண்டு, கிருஷ்ணசாமி செட்டியாரின் தோட்டத்துக்கு போய் விடுவார் அல்லது புதுச்சேரியை அடுத்த வில்லியனூருக்கு போவார்.தோட்டத்தில் மரம், செடி, குளம் மற்றும் சின்னஞ்சிறு குருவிகளை பார்த்தவுடனே, பாரதியாரின் அலுப்பு, சலிப்பு எல்லாம் மாயமாய் மறைந்து விடும். ரசிகத்தன்மை படைத்த உயிருள்ள தோழர்களுக்கு நடுவே இருப்பதாக எண்ணிக் கொள்வாரோ என்னவோ!ஸ ரி க ம ப த நீ என்று அவர் வாய்க்குள் சொல்லிக் கொண்டால், புதிய பாட்டுக்கு ஒத்திகை பார்க்கிறார் என்று, பக்கத்திலிருப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம். மரத்தை வெறித்துப் பார்ப்பார்; குளத்தை உற்றுப் பார்ப்பார். ஆகாயத்தை முட்டுகிறார் போல மார்பை வெளியே தள்ளி, உயர்த்திப் பார்ப்பார்.ஸஸ்ஸ - ஸஸ்ஸ - ஸஸ்ஸ என்று மூச்சு விடாமல், உரக்கக் கத்துவார். வலது காலால் தாளம் போடுவார். தவறிப் போனால், இடது காலால் பூமியை உதைப்பார். ஒரு நிமிஷம் மவுனம். 'சொல் ஆழி வெண் சங்கே...' என்ற கூக்குரல் எழும். மீண்டும் ஒருமுறை ஸரிகமபதநீ!குழந்தையை பெற்றெடுக்கும் பிரசவ வேதனை தான். உற்சாகமும், சோர்வும் ஒன்றையொன்று பின்னி வெளி வருவதை பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். அப்போது அவருக்கு மனித உலகத்தோடு உறவே கிடையாது. புதுப்பாட்டு உருவாகிற நேரத்தில், அது அவருடைய நெஞ்சுக் கூட்டையே முறித்து விடுமோ என்று தோன்றும். பாரதியாரின் கீதங்களில் ஜீவ களை இருக்கிறது என்று சொல்வதில், பொய்யே கிடையாது.நடுத்தெரு நாராயணன்