உள்ளூர் செய்திகள்

திண்ணை!

நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு, கல்லூரிப் பாட நூல்கள் கசந்தன; விவேகானந்தரின் நூல்கள் கவர்ந்தன. அல்லும், பகலும் அதிலேயே தோய்ந்தார். அதுபோல், தனக்கொரு ஞான குருவை நாடி, கால் நடையாகப் புறப்பட்டார். இமயமலைச் சாரலில், அவர் அலைந்து திரியாத இடம் இல்லை. அங்கு, பல துறவிகளையும், யோகிகளையும் சந்தித்துப் பேசினார். அவர்களுள் எவரிடத்தும், உள்ளத்தில் உண்மையொளி தென்படவில்லை. போலித் துறவும், புற வேடமுமே காணப்பட்டன. கஞ்சாவைப் புகைத்து, அறிவு மயங்கிக் கிடப்பதையே கடவுள் காட்சியாகக் கருதும், அந்த போலித் துறவிகளின் கயமை, சுபாஷ் சந்திர போசின் உள்ளத்தைக் கலங்கச் செய்தது. உண்மையை நாடிச் சென்றவருக்கு, எங்கும் பொய்மைக் கோலமே புலப்பட்டதால், மனம் வெறுத்து ஊர் திரும்பி விட்டார். சரியான ஞான குரு அவருக்குக் கிடைத்திருந்தால், அவர் அரசியலுக்கு வராமல், ஆன்மிகத்திலேயே சென்றிருப்பார்.—'சுபாஷ் சந்திர போஸ்' நூலில், வித்துவான் ம.வி.ராகவன்.***கடந்த 1977 தேர்தலுக்குப் பிறகு, தோற்றுப் போன இந்திராவை, எப்படியும் பார்லிமென்ட் உறுப்பினராகக் கொண்டு வரவும், எதிர்க்கட்சித் தலைவராக ஆக்கிடவும் கர்நாடக மாநிலத்தில் சிக்மகளூர் பார்லிமென்ட் தேர்தலில் அவரை போட்டியிட வைத்து, வெற்றி பெறச் செய்தனர். ஆனால், அவரை பார்லிமென்ட்டில் இருந்து வெளியேற்ற, அரசு தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. உரிமைக் குழுவின் அறிக்கை அடிப்படையில், அவரை பார்லிமென்ட்டிலிருந்து வெளியேற்றுவது என்ற முடிவை அமைச்சரவை எடுத்தது. அந்த முடிவிற்கு வடிவம் தர, அண்ணா தி.மு.க.,வின் ஒத்துழைப்பு தேவை என்று, சென்னையிலே இருந்த என்னோடு, மொரார்ஜி தேசாய் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். 'உன் கட்சியின் ஆதரவு, இந்திராவை பார்லிமென்ட்டில் இருந்து வெளியேற்றுவதற்குத் தேவை...' என்றார். 'முதல்வர் ஊரிலே இல்லை...' என்றேன். 'கேட்டுச் சொல்!' என்றார். எம்.ஜி.ஆர்., அப்போது மதுரையில் இருந்தார். தொடர்பு கொண்டு கேட்டேன். 'ஒப்புக் கொள்ள வேண்டாம்...' என்றார். முதல்வரின் கருத்தை மொரார்ஜிக்கு சொன்னேன். கூடவே என் கருத்தாக, 'அம்மையார், இப்போது தான் சிக்மகளூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். உங்களுக்கு இருக்கிற பெரும்பான் மையைப் பயன்படுத்தி, அவரை வெளியேற்றினால், தேர்ந்தெடுத்த அந்த மக்களை அவமானப்படுத்துவது போல் ஆகும். பல்லாண்டு காலமாக பிரதமராக இருந்து அனு பவம் பெற்ற இந்திரா, எதிர்க்கட்சித் தலைவராக வருவது, உங்களுக்கு உதவியாக இருக்கும். ஜனநாயகப் பாரம் பரியத்தைப் பாதுகாக்கவும் உதவும்...' என்று கூறி, 'ஆக, நாங்கள் உதவுவதற்கு இல்லை...' என்றேன். அவருக்கே உரிய பாணியில், 'அப்படியானால், இன்றோடு நம் உறவு முறிகிறது...' என்றார். அடுத்து நான் டில்லி செல்வதற் குள்ளாகவே, இந்திரா வெளியேற்றப் பட்டார். மொரார்ஜியை சந்தித்தேன். 'இது ஒரு கடுமையான சிகிச்சை...' என்றேன். பதில் சொல்லாமல், அமைதியாக இருந்தார்; 'பதிலில்லையே...' என்றேன்.'முடிந்து போன காரியம்...' என்று, அந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.— நாஞ்சில் மனோகரன் எழுதிய, 'மேடும், பள்ளமும்' நூலிலிருந்து...***- நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !