திண்ணை!
சபீதா ஜோசப் எழுதிய, 100 தலைவர்கள், 100 தகவல்கள் நுாலிலிருந்து: அண்ணாதுரையின், 'திராவிட நாடு' இதழில், பள்ளியில் படித்த காலத்திலேயே ஒரு கட்டுரை எழுதினார், கருணாநிதி. அதன் தலைப்பு: இளமைப் பலி!அக்கட்டுரையை படித்த அண்ணாதுரை, கட்டுரையாளர் வயதானவராக இருக்கலாம் என, எண்ணினார். ஒரு சமயம், திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு பேச வந்த அண்ணாதுரைக்கு, 'இளமைப் பலி' கட்டுரையாளர், மு.கருணாநிதியின் நினைவு வரவே, அவரை பார்க்க விரும்பினார். 'அண்ணா துரை அழைக்கிறார்...' என்றதும், கருணாநிதிக்கு அளவிட முடியாத சந்தோஷம். காரணம், யாரைக் காண்பதற்கும், ஆசை தீர பேசுவதற்கும் பல நாட்களாக, காத்துக் கிடந்தாரோ, அவரே, தன்னை அழைப்பதை கேட்டதும், சந்தோஷத்தில் பூரிப்படைந்தார்.உடனே, அண்ணாதுரையை பார்க்க கிளம்பினார். அவரைக் கண்டதும், கருணாநிதிக்கு கை கட்டி நிற்க தோன்றியதே தவிர, பேச வாய் வரவில்லை. 'கருணாநிதியை அழைத்து வா என்றால், யாரோ ஒரு சிறுவனை அழைத்து வந்திருக்கிறீர்களே... யார் இந்த சிறுவன்...' என்பது போல் பார்த்தார், அண்ணாதுரை.'இவர் தான் நீங்க பார்க்க விரும்பிய கருணாநிதி...' என்றனர், அழைத்து வந்தவர்கள். அண்ணாதுரைக்கு ஒரே வியப்பு... 'இந்த சிறுவனா அந்த கட்டுரையை அத்தனை சிறப்பாக எழுதினான்...' என்று ஆச்சரியமடைந்தவர், கருணாநிதியை கட்டி தழுவி, பள்ளி மாணவனாகிய கருணாநிதிக்குள் இருக்கும் எழுத்தாற்றலை பாராட்டினார்.அத்துடன், 'இது, கல்வி கற்கும் வயது: கட்டுரை எழுதுவதிலேயே கவனத்தை செலுத்தாமல் நன்றாக படி...' என்றார்.மேஜர்தாசன் எழுதிய, 'திரைச்சுவைகள்' நுாலிலிருந்து: கருணாநிதி அளித்த பேட்டி:நீங்கள் எழுதிய திரைப்பட வசனங்களில், 'அடடே இது அபாரம்...' என்று நீங்களே வியந்த வசனம் எது?மனசாட்சி உறங்கும்போது, மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது.பலமுறை பார்த்து பரவசப்பட்ட திரைப்படம் எது?தில்லானா மோகனாம்பாள்.உங்கள் கவிதை வரிகளில், உங்களையே பிரமிக்க வைத்த வரி எது?மானம்... அவன் கேட்ட தாலாட்டு;மரணம்... அவன் ஆடிய விளையாட்டு.நாடகத்தில் நடித்த உங்களுக்கு, சினிமாவில் நடிக்க ஆசை வரவில்லையா?என்னை நடிக்க வைக்க யாருக்கும் ஆசை வரவில்லை.சினிமா உலகிலிருந்து சிலர் அரசியலுக்கு வருவதை எந்த நோக்கில் ஏற்பீர்கள்?வழக்கறிஞர்கள், டாக்டர்கள் போன்ற பல்வேறு துறைகளை சேர்ந்தோர் அரசியலுக்கு வரும்போது, கலையுலகத்தினர் அரசியலுக்கு வருவதில் தடை என்ன இருக்க முடியும்... யாராக இருந்தாலும் அவர்கள் ஆற்றக்கூடிய பொதுத் தொண்டு, நிலையான நெஞ்சுறுதியும், அலைபாயாத கொள்கை பற்றும், தியாக உணர்வும் தான் காலப்போக்கில் அரசியலில் நுழைவதற்கான அளவுகோல்களாக கொள்ளப்படும்.திரைப்பட நடிகர், நடிகையரை நட்சத்திரங்கள் என்று சொல்கிறோமே... ஏன்?விண்ணில் உள்ள நட்சத்திரங்கள் விழுந்தால், அவை எங்கே விழுந்தன என்று கண்டுபிடிப்பது கஷ்டம்; திரைப்பட நட்சத்திரங்களின் நிலையும் அதுவே!தங்களின் மனம் கவர்ந்த நடிகை யார்?மறைந்த நடிகை அங்கமுத்து என்று சொன்னால் நம்பப் போகிறீர்களா... பராசக்தியில் அவர் நடிப்பை பார்த்ததில்லையா?கலை உலக சாதனை...கலையுலகில், மூன்று, நான்கு, ஐந்து தலைமுறையினரை தொடர்புபடுத்தும் இழையாக இருந்திருக்கிறேன். அன்றைய கலைஞர்கள் முதல் இன்றைய கலைஞர்கள் வரை எனக்கு பழக்கம் உண்டு. அவர்களுக்கும் மற்றும் கால நிலைக்கு ஏற்றார் போல் என் கருத்துகளை மாற்றிக் கொள்ளவில்லை. அந்த கருத்துகளை சொல்வதற்கான எழுத்து, நடையை மாற்றி எழுதியிருக்கிறேன், எழுதி வருகிறேன். நடுத்தெரு நாராயணன்