திண்ணை!
'சாமி நாயக்கர் வரலாறு' எனும் நுாலிலிருந்து: இந்தியாவில் முதல் உச்சநீதிமன்றம், சென்னையில் தான் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்தவர் - ராபர்ட் கிளைவ்.சென்னையில், 1723ல், முதல், மாநகர தலைமை நீதிமன்றம் - 'மேயர் கோர்ட்' என்ற பெயரில் இருந்ததை தான், செப்., 4, 1801ல், ஒரு தலைமை நீதிபதி மற்றும் இரண்டு துணை நீதிபதிகளுடன், உச்சநீதிமன்றமாக ஆக்கினார், கிளைவ்.'மேயர் கோர்ட்'டில், மாநகர தலைமை - மேயர் மற்றும் 10 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்கள், சிவப்பு அங்கியை அணிந்து, குற்றவியல் வழக்குகளை விசாரித்தனர்.இதுவே பின்னாளில், உச்சநீதிமன்றமாக வளர்ச்சி அடைந்து, பின், சென்னை உயர்நீதிமன்றமானது. இப்போது உள்ள, சென்னை உயர்நீதிமன்றம், 1892ல், இந்திய - இஸ்லாமிய கட்டட கலையை பின்பற்றி கட்டப்பட்டது!'படிக்காத மேதை காமராஜர்' எனும் நுாலிலிருந்து:முதல்வர் ஆன பிறகும் கூட, தாயார் சிவகாமியம்மாளை, விருதுநகரிலேயே தங்க வைத்திருந்தார், காமராஜர்.ஒருமுறை அவரை பார்ப்பதற்காக, காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர், விருதுநகருக்கு சென்றிருந்தார். அவரிடம், சிவகாமியம்மாள் மிகவும் வருத்தப்பட்டு, 'என்னை எதுக்காக இங்கேயே விட்டு வைச்சிருக்கான்னே தெரியலே... என்னையும் மெட்ராசுக்கு அழைச்சுகிட்டா, நான் ஒரு மூலையில் ஒண்டிக்கப் போறேன்...' என்று சொன்னார்.இந்த விஷயத்தை, சென்னைக்கு வந்த பின், காமராஜரிடம் கூறினார், அந்த பிரமுகர். அதற்கு, காமராஜர் சொன்ன பதில்:அம்மாவை, நான் இங்கே கூட்டிட்டு வராததற்கு காரணம் இருக்கு... அப்படியே அவங்க இங்கே வந்தாலும், அவங்க மட்டும் தனியாவா வருவாங்க... அவங்க கூட, நாலு பேரு வருவான்... அப்புறம் அம்மாவை பார்க்க, ஆத்தாவை பார்க்கணும்ன்னு, 10 பேர் வருவான், இங்கேயே, 'டேரா' போடுவான்... இங்கே இருக்கிற தொலைபேசியை உபயோகப்படுத்துவான்... 'முதல்வர் வீட்டிலேர்ந்து பேசறேன்'ன்னு சொல்லி, அதிகாரிகளை மிரட்டுவான்... எதுக்கு வம்புன்னு தான், அவங்களை, விருதுநகரிலேயே விட்டு வைச்சிருக்கேன், என்றார்.ப.சிவனடி எழுதிய, 'இந்திய சரித்திர களஞ்சியம்' எனும் நுாலிலிருந்து: ராமேஸ்வரத்தில் உள்ள ராமலிங்க சுவாமியை வழிபடுவதற்கு, பாரத தேசமெங்கிலும் இருந்து வருகிற பக்தர்களை பாதுகாக்கும் பொறுப்பை, சேதுபதி மன்னர்கள் ஏற்றனர்.பயணியரை, திருடர்கள் துன்புறுத்தாமல் காத்து நின்றதுடன், அவர்களின் யாத்திரை எளிதாக நிறைவேறவும், துணை நின்றனர், சேதுபதிகள். அக்காலத்தில், சேது சீமையை ஆண்டு வந்த, திருவுடையார் தேவர் என்ற விஜயரகுநாத சேதுபதிக்கு, இரண்டு பெண்கள் இருந்தனர்.அவர்கள் இருவரையும் மணந்த மருமகனை, பாம்பனில் ஆளுனராக நியமித்தார், சேதுபதி. மருமகனோ, ராமேஸ்வரத்திற்கு வரும் யாத்ரிகர்களிடம், வரி என்ற பெயரில் பணம் பிடுங்கினார். விஷயம், சேதுபதிக்கு எட்டியது. மருமகன் என்றும் பாராமல், அவருக்கு, மரண தண்டனை விதித்தார். அவருடைய மனைவியரான, சேதுபதியின் புதல்விகளான இருவரும், கணவருடன் உடன்கட்டை ஏறினர்.இப்பெண்களின் நினைவாக, இரண்டு சத்திரங்களை கட்டினார், சேதுபதி. அதையொட்டி இரண்டு ஊர்கள் உருவாயின. அவையே, அக்கா மடம், தங்கச்சி மடம் என்று, இன்றும் அழைக்கப்படுகிறது.நடுத்தெரு நாராயணன்