உள்ளூர் செய்திகள்

திண்ணை

எஸ்.விஜயன் எழுதிய, 'எம்.ஜி.ஆர்., கதை' நுாலிலிருந்து: எம்.ஜி.ஆர்., தன்னை பகைவனாக கருதியவரையும், நண்பனாக மாற்றி, நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தார் என்பதற்கு எடுத்துக்காட்டாக, அவர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு இது:திரைப்பட துறையில், எம்.ஜி.ஆர்., கொடிகட்டி பறந்தபோது, அவரை, கதாநாயகனாக வைத்து, பல வெற்றி படங்களை தயாரித்த, தேவர் பிலிம்ஸ், சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவரை, யாரும் மறக்க முடியாது. தேவருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே உள்ள நட்பு, பட உலகில் உள்ள அனைவராலும் இன்றைக்கும் பேசப்படும் அளவுக்கு நெருக்கமானது.இத்தனை நட்புடன் விளங்கிய, எம்.ஜி.ஆரும், தேவரும், சில ஆண்டுகள், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் விரோதம் கொண்டிருந்தது, சினிமா உலகில் பலரும் அறிந்திராத தகவல்.அரசிளங்குமரி படம் முடியும் தருவாயில், 'கிளைமாக்சில்' சண்டை காட்சி ஒன்று இடம்பெற வேண்டும் என்று விரும்பினார், எம்.ஜி.ஆர்., அதில், தன்னோடு மோதி நடிப்பதற்கு, சின்னப்ப தேவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்று எண்ணினார். அதனால், தயாரிப்பாளரான ஜுபிடர் அதிபர், சோமசுந்தரத்தின் மகன் காசியை, தேவரிடம் அனுப்பினார். தேவரிடம் விஷயத்தை சொன்னதும், அவர், கடுங்கோபத்துடன், 'என்ன தைரியம் இருந்தா என்னிடம் கேட்க சொல்லியிருப்பார்...' என்று, எம்.ஜி.ஆரை வாய்க்கு வந்தபடி திட்டினார். நடந்ததை, எம்.ஜி.ஆரிடம் வந்து சொன்னார், தயாரிப்பாளர். சிரித்தபடியே, 'ஆமா, தேவர் என்ன சொல்றது... நீங்க என்ன கேட்கறது... தேவர், உங்க கம்பெனியில் வளர்ந்தவர். நீங்க வந்து நடின்னா, நடிக்க வேண்டியது தானே அவர் வேலை. விடாதீங்க...' என்று அவரை துாண்டி விட்டார், எம்.ஜி.ஆர்., 'நாளைக்கு நீங்க, தேவரை பார்த்து பேசும்போது, எனக்கு போன் பண்ணுங்க. நான் காத்திருக்கிறேன்...' என்றார்.அதன்படி, தயாரிப்பாளர், மறுநாள் தேவரை சந்தித்து, எம்.ஜி.ஆர்., மீண்டும் கேட்க சொன்னதை பற்றி கூறவும், தேவர் மேலும் கோபத்துடன், 'அவர், என்னை பற்றி என்ன நினைச்சுகிட்டிருக்கார்... அவரை சும்மா விடமாட்டேன்...' என்றார்.தயாரிப்பாளர், எம்.ஜி.ஆரிடம் போனில் பேச, அவர், போனை தேவரிடம் கொடுக்க சொல்ல, ரிசீவரை வாங்கிய தேவர், எம்.ஜி.ஆருடன் பேசாமல் கோபத்துடன் வைத்து விட்டார். தேவரால் கோபத்தை அடக்க முடியவில்லை. 'இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு பார்த்துடறேன்...' என்று புறப்பட்டார்.ஸ்டுடியோவில், தேவரின் கார் நுழைந்ததுமே, அவரை எதிர்பார்த்து காத்திருந்தது போல், எம்.ஜி.ஆர்., கைகளை விரித்தபடி, 'முருகா... முருகா...' என்று ஓடி வந்து, காரை விட்டு அவர் இறங்கும் முன்பே, கட்டிப்பிடித்து அமுக்கி விட்டார்.தேவரால் திமிற முடியவில்லை.தேவரை கட்டிப்பிடித்தபடியே, கீழே இறக்கி, அருகில் உள்ள அலுவலகத்திற்குள் தள்ளி சென்று விட்டார். தயாரிப்பாளருக்கோ ஒரே பதைப்பு. உள்ளே என்ன நடக்குமோ என்று... மற்றவர்களுக்கு எதுவும் புரியவில்லை. நேரம் போய்க்கொண்டே இருந்தது.அரை மணி நேரத்திற்கு பின், கதவு திறந்தது. வேட்டியை மடித்து கட்டிய நிலையில் வந்தார், தேவர். தேவர் வெளியே வந்த சில நொடிகளில், எம்.ஜி.ஆரும் கைகளை பின்புறம் கட்டியபடி, வெளியே வந்தார். மறுநாள் காலை, 10:00 மணிக்கு, ஸ்டுடியோவுக்கு வந்தார், தேவர். எம்.ஜி.ஆர்., தேவருடன் மோதும் சண்டை காட்சி படமாக்கப்பட்டது.ஏதோ கொலை செய்து விடுபவர் போல் புறப்பட்ட தேவர், எம்.ஜி.ஆரிடம் அடங்கிப்போன மர்மம், யாருக்கும் விளங்கவில்லை.இந்த சம்பவத்திற்கு பின், வரிசையாக தேவரின் ஆறு படங்களில் நடிக்க, ஒப்பந்தம் செய்யப்பட்டார், எம்.ஜி.ஆர்., பிரிந்திருந்த உறவு முன்பை விட வலுவாகியது. நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !