திண்ணை!
கண்ணதாசனின், 'சினிமா வரலாறு' நுாலிலிருந்து: 'இல்லை... இந்த பாடல் வரியை அனுமதிக்க முடியாது...' என, கோபத்தில் கொந்தளித்தனர், திரைப்பட தணிக்கைத் துறை அதிகாரிகள்.'ஏன்...''கண்ணதாசன் எழுதிய அந்த வரி தவறு...''எப்படி...''அது என்ன, மதங்களை படைத்தான் என்று, அவர் எழுதியிருக்கிறார். அதை, மாற்றித் தரச்சொல்லுங்கள்; இல்லாவிட்டால் இந்த பாடலை அனுமதிக்க முடியாது...' என்றனர்.கண்ணதாசனிடம் கூறினார், தயாரிப்பாளர்.பாவ மன்னிப்பு படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளில் தான் பிரச்னை செய்தனர், தணிக்கைத் துறை குழுவினர்.'பறவையை கண்டான் விமானம் படைத்தான்; பாயும் மீன்களில் படகினை கண்டான்; எதிரொலி கேட்டான், வானொலி படைத்தான்; எதனைக் கண்டான், மதங்களை படைத்தான்...'தணிக்கைத் துறையினர் கண்டித்து அனுப்பிய பாடலை வாசித்த, கண்ணதாசன், 'நான், சரியாகதானே எழுதியிருக்கிறேன். அவர்களிடம் போய் சொல்லுங்கள்...' என்றார்.'இல்லை... மதங்களை கடவுள் உருவாக்கினார். மனிதன் அல்ல...' என, தணிக்கைத் துறை மறுத்தது.சிரித்தபடியே, 'இது என்ன வேடிக்கை... சிவனோ, விஷ்ணுவோ வந்து, ஹிந்து மதத்தை உண்டாக்கினரா அல்லது அல்லாஹ் வந்து இஸ்லாம் மதத்தை உருவாக்கினாரா... இல்லையென்றால் பரமபிதா வந்து கிறிஸ்தவ மதத்தை படைத்தாரா...'கடவுள் பெயரை சொல்லி, மனிதர்கள் உருவாக்கியதுதானே அத்தனை மதங்களும்... அதைதானே நான் எழுதியிருக்கிறேன்...' என்றார், கவிஞர்.தணிக்கைத் துறை திகைத்தது; ஆனாலும், 'ஈகோ' தடுத்தது.'இல்லை... இல்லை... ஏற்றுக்கொள்ள முடியாது. மாற்றத்தான் வேண்டும்...' என்றனர்.தலையில் அடித்துக் கொண்டு, 'எதனை கண்டான், பணம்தனை படைத்தான்...' என, மாற்றிக் கொடுத்தார், கண்ணதாசன்.படத்தில் தான், சிவாஜி, இப்படி பாடுவார். ஆனால், ஒரிஜினல் இசைத் தட்டில், 'மதங்களை படைத்தான்' என்ற வார்த்தை தான் இருக்கிறது.'பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது; பஞ்சணையில் காற்று வரும் துாக்கம் வராது...' என்று, அடுத்த பாடலிலும் அதே பிரச்னை வந்தது. 'அய்யய்யோ அபச்சாரம்... என்ன இது, கண்ணதாசன் இப்படியெல்லாம் எழுத ஆரம்பித்து விட்டார்...' என, சீறியது, தணிக்கைத் துறை.அப்படி என்ன எழுதியிருந்தார், கண்ணதாசன்.'காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே, கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே; வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே, அது வேதம் செய்த குருவை கூட விடுவதில்லையே...'இதில், கடைசி வரியை, நீக்க வேண்டும் என்றனர், தணிக்கைத் துறை அதிகாரிகள்.'என்னய்யா இது... மந்திரங்களில் சிறந்தது, காயத்ரி மந்திரம். அதை எழுதிய விசுவாமித்திரரையே காதல் விடவில்லையே... அதை தானே நான் எழுதியிருக்கிறேன். என்ன ஆனாலும் சரி, எவர் சொன்னாலும் சரி, இதை நான் மாற்ற மாட்டேன்...' என, பதிலுக்கு, சீறினார், கண்ணதாசன்.'நீங்கள் சொல்வது சரிதான் கவிஞரே... ஆனால், படம் வெளிவர வேண்டுமே...' என, கெஞ்சினார், தயாரிப்பாளர்.வேறு வழியின்றி, 'வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே, அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே...' என, வேத வரிகள் மாறின.பாவ மன்னிப்பு படம் வெளியாகி, பாடல்களும், 'ஹிட்' ஆனது. ஆனால், தணிக்கைத் துறையின் கண்களில் மண்ணை துாவி, பாவ மன்னிப்பு பட பாடலில், இந்த ஒரு வரியை மட்டும் மாற்றாமல், அப்படியே விட்டு விட்டார், கண்ணதாசன்.'மனிதன் மாறி விட்டான், மதத்தில் ஏறி விட்டான்...'இப்படி அனுபவங்கள் அடிக்கடி ஏற்பட்டதால் தானோ என்னவோ, ஒருமுறை இப்படி எழுதியிருந்தார், அவர்:நான் இறந்த பிற்பாடு, என்னையே நான் விமர்சனம் செய்து கொண்டால், இப்படித்தான் சொல்வேன்... முட்டாள்களிடையே வாழ்ந்து கொண்டிருந்த கெட்டிக்காரன் ஒருவன், அவர்களோடு பழகத் துவங்கி, முட்டாளாக செத்துப் போனான்.- கண்ணதாசன்நடுத்தெரு நாராயணன்