உள்ளூர் செய்திகள்

திண்ணை!

ஜூலை 15 -காமராஜர் பிறந்த தினம்'வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை வரலாறு' நுாலிலிருந்து:காமராஜர், முதல்வராக இருந்தபோது, மருத்துவ கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கான ஒதுக்கீட்டில், முதல்வருக்கான கோட்டாவில், 10 இடங்களை ஒதுக்கி இருந்தனர். அதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டு, அதிலிருந்து, 10 பேரை முதல்வர் தேர்ந்தெடுப்பதற்காக, காமராஜரின் மேஜையில் அனைத்து விண்ணப்பங்களையும் அடுக்கி வைத்தார், அவரது உதவியாளர்.'இவர், எந்த அடிப்படையில் மாணவர்களை தேர்ந்தெடுக்கிறார்... கட்சிக்காரர்களின் பிள்ளைகளுக்கா, ஊர்க்காரர்களின் பிள்ளைகளுக்கா, தன் ஜாதி அடிப்படையிலான மாணவர்களுக்கா என்று பார்ப்போம். அப்போது, இவரின் எண்ணம் புரிந்து விடும்...' என்றும் எண்ணினார்.சில நிமிடங்களில் அவற்றை பரிசீலித்த, காமராஜர், கடகடவென, 10 விண்ணப்பங்களையும் எடுத்து கொடுத்து, சென்று விட்டார். அவற்றை பார்த்த உதவியாளருக்கு, மிகவும் வியப்பாக இருந்தது. ஏனெனில், அவர் எண்ணிய அடிப்படையில், காமராஜர் தேர்ந்தெடுத்த விண்ணப்பங்களில் ஒருவர் கூட இல்லை.காமராஜரிடம் சென்ற உதவியாளர், 'நீங்கள் தேர்ந்தெடுத்த மாணவர்கள், உங்கள் ஊர், ஜாதி, நண்பர்கள் அல்லது கட்சிக்காரர்கள் என்று, எந்த அடிப்படையிலும் வரவில்லையே... எப்படி இவர்களை தேர்வு செய்தீர்கள் என்று, நான் அறிந்து கொள்ளலாமா...' என்று கேட்டார்.சிரித்துக்கொண்டே, 'நீங்கள் கொடுத்த விண்ணப்பங்களை எல்லாம் பார்த்தேன். அவற்றில் பெற்றோர் கையொப்பம் என்ற இடத்தில், கையெழுத்துக்கு பதிலாக, எதிலெல்லாம் கைநாட்டு (கை ரேகை) வைக்கப்பட்டிருந்ததோ, அவற்றையே நான் தேர்ந்தெடுத்தேன். 'எந்த குடும்பத்தில் எல்லாம் கல்லாமை எனும் இருள் இருக்கிறதோ, அவர்கள் வீட்டுக்கு தான், நாம் முதலில் அறிவு விளக்கேற்ற வேண்டும்...' என்றார். காமராஜரின் பதிலை கேட்ட உதவியாளர், 'உண்மையிலேயே இவர் படிக்காத மேதை தான்...' என்று வியந்தார்.அறந்தை நாராயணன் எழுதிய, 'மேடையில் பேசலாம் வாருங்கள்' நுாலிலிருந்து:'மானத்தோடு வாழ்வோம்' என்ற தலைப்பில், அக்., 2, 1965, காந்தி ஜெயந்தி அன்று, காமராஜர் ஆற்றிய சொற்பொழிவை, தனி பிரசுரமாகவே வெளியிட்டது, அன்றைய தமிழக காங்கிரஸ் கமிட்டி. அதில்:நம்முடைய மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், சொந்த காலிலேயே நாம் நிற்க வேண்டும். அது தான் நமக்கு பலம். அந்த பலம் ஒன்று தான், உலகில் நமக்கு மரியாதையை தேடிக் கொடுக்கும். அந்த பலம் இல்லையென்றால், உலகில் மரியாதை இல்லை; ஒன்றும் இல்லை. அப்படி நடந்து கொள்வது தான், இப்போது நம்முடைய பொறுப்பு. இதைத்தான், 40 - 50 ஆண்டுகளாக நமக்கு உபதேசம் செய்திருக்கிறார், காந்திஜி.பல்வேறு மொழி, ஜாதி, மத, இன வேறுபாடுகளால் சிதறிக் கிடந்த ஒரு நாட்டை, ஒன்றுபடுத்தினார், காந்திஜி. நாம் அனைவரும் ஒரே தேசிய இனம் என்ற உணர்ச்சியை உண்டாக்கினார். சுதந்திரமாக வாழவும், தகுதியாக்கி தந்திருக்கிறார்.சுதந்திர போராட்டம் நடத்திய காலத்தில், தெளிவாக தீர்க்கதரிசியாக சொல்லிக் கொண்டே வந்தார், காந்திஜி.'இந்த நாடு, சுய தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். உணவு, உடை முதல், தேவையான எல்லாவற்றையும் நாமே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். பிறரை எதிர்பார்க்காதீர். பிறரை எதிர்பார்த்தால், அது, சுதந்திரம் அல்ல...' என்று, சொல்லி வந்தார், காந்திஜி.அன்று சொன்னதை நாம் கேட்கவில்லை. அதை சரியாக கேட்டிருந்தோமானால், இன்னும் மரியாதை உயர்ந்திருக்கும். போனதெல்லாம் போகட்டும். இனிமேலாவது ஒழுங்காக நடக்க வேண்டுமா, இல்லையா...முக்கியமாக, சாப்பாட்டுக்கு இன்னொரு நாட்டை எதிர்பார்ப்பதா, நம் நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். இல்லையேல், பட்டினியாக கிடக்க வேண்டும். அப்படிதான் முடிவு செய்ய வேண்டும்அப்படியே நம் சர்க்காரும், இனிமேல், உணவு இறக்குமதியே கிடையாது என்று முடிவு செய்ய வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அமெரிக்காவிலிருந்து வருமா, ஆஸ்திரேலியாவிலிருந்து வருமா, அவன் கொடுப்பானா, இவன் கொடுப்பானா என்று, எதிர்பார்க்க வேண்டியிருக்கும்.நம் நாட்டிலேயே உள்ள சிலர் என்ன செய்கின்றனர்... அவர்கள், சாதாரண மக்கள் அல்ல, அரசியல்வாதிகள். பிரசிடென்ட் ஜான்சன் என்ன செய்யப் போகிறார், பி.எல்.480ல் கையெழுத்து போடுவாரா, ஒப்பந்தம் எப்போது வரப்போகிறது என்றெல்லாம் எட்டி எட்டி பார்க்கின்றனர்.அவர்கள் கையெழுத்து போட்டால் என்ன, போடா விட்டால் என்ன... நம் நாட்டிற்கு வேண்டிய உணவை நாமே உற்பத்தி செய்து கொள்வோம் என்ற முடிவில் இருந்தால், தானாக கையெழுத்து போடுவார், ஜான்சன்.நாளையே நம் மீது, சீனா படையெடுத்தால், போர் கருவி வேண்டாமா... கொடுக்க யார் இருக்கின்றனர் என்று சிலர் கவலைப்படுகின்றனர். ஒருவரும் இல்லை என்பதற்காக, மேற்கு வல்லரசுகள் காலில் விழுந்து, நமஸ்காரம் செய்ய வேண்டுமா...எதற்காக அப்படி நமஸ்காரம் செய்ய வேண்டும்; மானத்தோடு வாழ்வதற்காக தானே சண்டைக்கு போகிறோம். ஒரு பக்கம் மானத்தை காத்துக்கொள்ள, மறுபக்கம் மானத்தை விற்பதா... அவன் காலில் விழாதே; இவன் காலில் விழு என்பதா உபதேசம்...மானத்தோடு வாழ முடியவில்லை என்றால், செத்துப் போவோமே... வாழ்க்கை என்ன பெரிசு. வாழ்ந்தால் மானத்தோடு வாழ்வோம்; இல்லாவிட்டால் போராடி சாவோம். இதுதானே வாழ்க்கை.- இவ்வாறு பேசியுள்ளார்.அதேசமயம், எளிமையாய், சாதாரண பாமரனும் புரிந்துகொள்ளும் வகையில் பேசுவார், காமராஜர். அதற்கு இது உதாரணம்:முன் வரிசையில் உட்கார்ந்திருந்த சிறுவர்களை பார்த்தபடியே, 'சுதந்திரம் வாங்கி, 20 ஆண்டுகளுக்கு மேலாச்சு. அதோ அந்த சிறுவன் தலையில் எண்ணெய் இல்லே. பின்னே என்ன சுதந்திரம்... 'காங்கிரஸ்காரங்க நாலு பேர் மந்திரியா இருக்கவா, கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கினோம்... ஏழைங்க முன்னேற ஏதாவது செய்ய வேண்டாமா... செய்யலேன்னா, தெருவிலே மடக்கி உதைப்பான்...' என்று பேசினார்.- காமராஜர் என்றால், பாமரனிடமும் நல்ல மதிப்பு இருந்தது ஏன் என்று, இப்போது புரிந்திருக்குமே! நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !