உள்ளூர் செய்திகள்

திண்ணை!

சுரா புக்ஸ் வெளியீடு, 'அரசியல் சம்பவங்கள்' நுாலிலிருந்து: ராஜாஜி, முதல்வராக இருந்தபோது, மதுரைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கே, ராஜாஜிக்கு கருப்பு கொடி காட்ட ஏற்பாடு செய்திருந்தனர், ஒரு கட்சியினர். தாம் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சிக்கு காரில், புறப்பட்டு செல்லும்போது, காரோட்டியிடம், 'இங்கே, கருப்புக் கொடி காட்டுவதாக சொன்னார்களே... எங்கே அவர்களை காணோம்...' என்று கேட்டார், ராஜாஜி.'அந்த வழியாக போக வேண்டாம் என்று தான், வேறு வழியாக போகிறோம்...' என்றார், காரோட்டி.உடனே, காரோட்டியிடம், 'வண்டியை திருப்புங்கள். அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்க கூடாது...' என்று சொல்லி, கருப்பு கொடி பிடிக்கும் இடத்திற்கு சென்று, அவர்களின் கண்டன குரலை ஏற்றபடி சென்றார், ராஜாஜி.'பாரதியார் கட்டுரைகள்' நூலிலிருந்து: பாரதியார் எழுதுகிறார்... திருநெல்வேலியில், ராஜ நிந்தனை வழக்கில், விசாரணை செய்யப்பட்டு வரும், சுப்பிரமணிய சிவாவுக்கு, வயது, 26. இவர், ஆறு ஆண்டுகளுக்கு முன், சிறு வயதிலேயே, சிவகாசி சப் - டிவிஷன் ஆபீசிலே வேலை பார்த்து வந்தார். ஆனால், உடல் நலன் போதாதென்று அவரை, அந்த வேலையிலிருந்து விலக்கி விட்டனர். இந்த விஷயத்தை, திருநெல்வேலி போலீஸ் உத்தியோகஸ்தர் பலர், சாட்சி கூறும் சமயத்தில், மிக இகழ்ச்சியோடு குறிப்பிட்டனர். போலீஸ்காரர் சிவன், துாத்துக்குடியில், சிதம்பரம் பிள்ளையோடு ஒரே வீட்டில் வாசம் செய்து கொண்டிருந்தார் என்றும், இது, வர்ணாசிரம தர்மத்துக்கு விரோதம் என்றும், இதன் பொருட்டு, சிவன், ஜாதியிலிருந்து நீக்கப்படுவதற்கு தகுதியுடையவர் என்றும் சொல்லியிருக்கிறார்.ஒரு போலீஸ்காரருக்கு, மனு தர்ம சாஸ்திரத்திலே இவ்வளவு துாரம் ஆழமான ஞானம் இருப்பது பற்றி சந்தோஷம். சந்நியாச நிலை பெற்றவர்களுக்கு வர்ணாசிரம பேதம் கிடையாது என்ற விஷயம், 'போலீஸ் மனு நீதி'யில் சொல்லப்படவில்லை என்று தோன்றுகிறது. பிராமண ஜன்மம் எடுத்து, போலீஸ் உடை தரித்து, ஓர் மிலேச்ச (அந்நிய தேச) அதிகாரியின் கீழே கை கட்டி நின்று, காவல் வேலை செய்வது, சாஸ்திர தர்மம்... இதை, வேங்கட வரதாச்சாரி என்ற போலீஸ்காரர், தான் படித்திருக்கும், மனு தர்ம சாஸ்திரத்திலே என்ன சொல்லியிருக்கிறது என்பதை கூறினால் நல்லது, என்று எழுதியுள்ளார்.பிரபல பத்திரிகையாளர், குல்தீப் நய்யார், 'பிட்வீன் த லைன்ஸ்' என்ற சர்ச்சைக்குரிய நுாலை வெளியிட்டார். அந்த நுாலை, டில்லியை அடுத்த சிறிய ஊரான குர்கானை சேர்ந்த ஒரு சாதாரண, பெயர் தெரியாத, டீக்கடைக்காரருக்கு அர்ப்பணித்துள்ளார். காரணம், நம் நாட்டு பெரிய பெரிய அரசியல் தலைவர்களுக்கு உள்ளதை விட, அதிக புத்தி கூர்மையும், அரசியல் ஞானமும், அந்த டீக்கடைக்காரருக்கு இருப்பதாக கூறினார், குல்தீப்.நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !