திண்ணை!
சஜோ எழுதிய, '100 தலைவர்கள், 100 தகவல்கள்' நுாலிலிருந்து: 'நாம் தமிழர்' இயக்கத்தின் மூலம், தனி தமிழ் ஆட்சியை வலியுறுத்தி வந்தார், தமிழர் தலைவர் ஆதித்தனார். அந்த சமயம், காங்கிரஸ் அமைச்சர் ஒருவர், 'தமிழகம், அளவில் மிகச் சிறிய பகுதி. இங்கே தனி ஆட்சி என்பது, குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவது போலிருக்கும்...' என்று பேசினார்.உடனே, 'தமிழகத்தை விட, அளவிலும், மக்கள் தொகையிலும் மிகக்குறைந்த, 91 நாடுகள், தனி ஆட்சி புரிவதோடு, ஐக்கிய நாடுகள் சபையிலும் அங்கம் வகிக்கின்றன.'தமிழகத்தின் பரப்பளவுக்கு, அதை குண்டுசட்டி என்று குறிப்பிட்டால், 91 நாடுகளையும், கோப்பைகள், குவளைகள் என்று தான் குறிப்பிட வேண்டும்.'எனவே, கோப்பைக்குள்ளேயே குதிரை ஓட்டுபவர்கள் இருக்கும்போது, நாம், குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டக் கூடாதா...' என்று, ஒரு போடு போட்டார், ஆதித்தனார்.தன் அறையில், ஒரு தங்க சங்கிலியை மாடியிலிருந்து, கீழ் தளம் வரை தொங்க விட்டிருந்தார், முகலாய மன்னர், ஜஹாங்கீர்.இரவிலும், ஏதாவது முறையிட வேண்டுமானால், அந்த சங்கிலியை இழுத்தால், மன்னரின் அறையில் மணி ஒலிக்கும். உடனே, அவர், ஜன்னலின் அருகில் வந்து, விசாரித்து, தீர்வு சொல்வார்.ஒருநாள் இரவு, தங்க சங்கிலியை, தன் முதுகால் தேய்த்தது, ஒரு குதிரை.மணி சத்தம் கேட்டவுடன், ஜன்னல் அருகே வந்து பார்த்தார், ஜஹாங்கீர்.அந்த குதிரையின் முதுகில், ஆழமான காயம்பட்ட இடத்திலிருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. காவலர்களை அனுப்பி, குதிரையின் சொந்தக்காரரை அழைத்து வரச்சொன்னார்.குதிரையின் முதுகில் இருக்கும் அதேபோன்ற காயம், அதன் சொந்தக்காரர் முதுகிலும் ஏற்படும் அளவு தண்டனை தரச்சொல்லி, தீர்ப்பு கூறினார்.இப்படி, விலங்குகளின் மீதும் கருணை காட்டும் மன்னர்களும், அந்நாளில் இருந்திருக்கின்றனர் என்பது மகிழ்ச்சியான விஷயம்.மாலை நேரங்களில், விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருப்பான், ஒரு சிறுவன், கால்பந்தாட்டம் என்றால் அவனுக்கு கொள்ளை பிரியம்.அவனுடைய புத்தக பை, அந்த மைதானத்தின் ஒரு மூலையில், தின்பண்டங்கள் விற்றுக்கொண்டிருந்த கிழவியின் பாதுகாப்பில் இருக்கும். இது, தினசரி வாடிக்கை.காலம் உருண்டது. 10 - 15 ஆண்டுகளுக்கு பிறகும், அதே மரத்தடியில் உட்கார்ந்து தின்பண்டம் விற்றுக் கொண்டிருந்தாள், கிழவி.படை வீரர்கள் ஏராளமானோர், அந்த இடத்தில் குழுமினர். மன்னர் அங்கு வருகிறார் என்ற சேதியை கேட்டதும், பயந்தாள், கிழவி.'பாட்டி... சில ஆண்டுகளுக்கு முன், ஒரு சிறுவனின் புத்தக பையை, தினமும் நீ பத்திரமாக வைத்திருக்க... தெம்போடு விளையாடுவானே, அவனை நினைவிருக்கிறதா...' என்று கேட்டார், மன்னர்.புரியாமல் விழித்தாள், கிழவி.'அந்த சிறுவன், நான் தான். இளமைக்கால நினைவுகள் என் மனதிலிருந்து இன்னும் பட்டு போகவில்லை. உன்னிடம் என் நன்றியை தெரிவிக்கவே இங்கு வந்தேன்...' என்றார், மன்னர்.கிழவியின் கண்ணில் ஆனந்த கண்ணீர் வழிந்தது.பழமையை மறக்காத அந்த மன்னர், பிரான்ஸ் நாட்டின் மாவீரன் நெப்போலியன்!நடுத்தெரு நாராயணன்