திண்ணை!
ராஜராஜன் பதிப்பகம், எம்.சரவணன் எழுதிய,'ஏவி.எம். 60 சினிமா' நுாலிலிருந்து: பாரதிராஜா இயக்கி, ஏவி.எம்., எடுத்த படம், புதுமைப்பெண். அருமையான படம். ஆனால், வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை. இது, பாரதிராஜாவுக்கு கூடுதல் வருத்தத்தை தந்தது.ஏற்கனவே, முதல்வர் எம்.ஜி.ஆர்., படத்தை பார்த்து, பாராட்டியிருந்தார். அதனால், முதல்வரை சந்திக்க ஆசை வந்தது, பாரதிராஜாவுக்கு. இதுகுறித்து, ஏவி.எம்.சரவணனிடம் கூறினார். அவரும், முதல்வரிடம் அனுமதி கேட்டார். அவர்களை தோட்டத்திற்கு வரச்சொன்னார், எம்.ஜி.ஆர்., பாரதிராஜாவும், சரவணனும், புதுமைப்பெண் படத்தின் வர்த்தக ரீதியான தோல்வி குறித்து, எம்.ஜி.ஆரிடம் பேசினர்.உடனே, இன்டர்காமில், அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனை தொடர்பு கொண்டு, 'புதுமைப்பெண் படத்திற்கு, வரி விலக்கு தரணும்; உடனே செய்யணும். ஒரு வாரத்திற்குள் ஏற்பாடு செய்யுங்கள்...' என கூறி, வைத்து விட்டார்.'உடனே நடவடிக்கை எடுத்தார், அமைச்சர், ஆர்.எம்.வீரப்பன். இதனால், முன்பு, ஐந்து ரூபாயாக இருந்த டிக்கெட், வரி விலக்கு சலுகைக்கு பின், மூன்று ரூபாயாக குறைக்கப்பட்டது. உண்மையில், படத்தை துாக்கி நிறுத்தியது, வரி விலக்கு.'தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. எட்டு ரூபாய் கொடுத்து, படத்தை, 'ப்ளாக்'கில் பார்த்தவர்கள் ஏராளம். டிக்கெட் விலை, ஐந்து ரூபாய் இருந்தபோது பார்க்காதவர்கள், வரி விலக்குக்கு பின், டிக்கெட் கிடைக்காததால், 'ப்ளாக்'கில், எட்டு ரூபாய் கொடுத்து பார்த்ததும் வினோதம். இப்படி வேறெந்த தமிழ் படத்திற்காவது இருந்திருக்குமா என்பதும் சந்தேகம் தான்.'எனக்கு தெரிந்து, வெளியாகி, சுமாரானது என்று பேசப்பட்ட ஒரு படம், அரசின் வரிவிலக்குக்கு பின், 'பிக் - அப்' ஆகி, 'ப்ளாக்'கில் டிக்கெட் வாங்கி, மக்கள் பார்த்து ரசித்தனர் என்றால், அது, புதுமைப்பெண் படம் தான்...' என்கிறார், ஏவி.எம்.சரவணன்.கிழக்கு பதிப்பகம், 'மிஸ்டர் பாப்புலர்' நுாலிலிருந்து: எழுத்தாளர் ஜெயகாந்தன், 6வது வரை மட்டுமே படித்தவர். மதுரை சென்ட்ரல் தியேட்டர் முன், சில காலம் பாட்டுப் புத்தகம் விற்ற அனுபவம் அவருக்கு உண்டு. தஞ்சாவூரில் உள்ள ஒரு லாட்ஜில், 'ரூம் பாய்' ஆகவும் இருந்துள்ளார். இருந்தும், கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் நட்பு ஏற்பட்ட பின், தன்னை எழுத்தில் ஈடுபடுத்தி, பெரும் வெற்றி பெற்றார்* பிரபல ஆங்கில பட இயக்குனர், ஸ்பீல்பெர்க், உண்மையில், ஆங்கில இலக்கியம் படித்தவர். அப்போதே சினிமா ஆர்வத்தில், குறும்படங்களை தயாரித்து வந்தார்* சுகிசிவம், சட்டம் பயின்றவர். ஆனால், தமிழில் சிறந்த பேச்சாளரானார்.சீர்காழி கோவிந்தராஜன் கச்சேரி, சாதாரணமாக மூன்று மணி நேரம் நடக்கும். முதல் ஒரு மணி நேரம் சாஸ்திரிய சங்கீதம். இது, சாம்பார் சாதம் போன்றது. சாம்பாரில் சேர்ந்த பருப்பு, காய்கறிகள், வெங்காயம், பூண்டு மற்றும் வாசனை பொருட்கள் இணைந்து மிகுந்த சுவையூட்டுவது போல், இது, பல்சுவை பகுதி.இரண்டாவது ஒரு மணி நேரம். பக்திப் பாடல்கள். இது, ரசம் சாதம் போன்று, பக்திரசம் நிரம்பியது.மூன்றாவது ஒரு மணி நேரம், திரைப்பட இசை. இது, மோர் சாதம் போன்றது. 'ஒன்ஸ்மோர்' கேட்கும் பகுதி என, தன் கச்சேரியை வர்ணிப்பார், சீர்காழி கோவிந்தராஜன்.நடுத்தெரு நாராயணன்