திண்ணை!
செப்., 5 - ஆசிரியர் தினம்சி.டி.சங்கரநாராயணன் எழுதிய, 'டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்' என்ற நுாலிலிருந்து: பலத்த போட்டிகளுக்கிடையே, கர்நாடக மாநிலம், மைசூர் பல்கலைக் கழகத்தில், கூடுதல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார், ராதாகிருஷ்ணன். அங்கு, தத்துவப் பேராசிரியராக, ராதாகிருஷ்ணனை நியமித்தவர், உலகப் புகழ்பெற்ற டாக்டர் எம்.விஸ்வேஸ்வரையா.சில ஆண்டுகளுக்கு பின், சென்னையில் பணிபுரிய விரும்பினார், ராதாகிருஷ்ணன். ஆனால், சந்தர்ப்பம் அமையவில்லை. இதற்கிடையே, கல்கத்தா பல்கலைக்கழக துணைவேந்தர் சர் அசுடோஷ் முகர்ஜி, சென்னைக்கு வந்தார். பிப்., 1921ல், மைசூர் பல்கலைக்கழகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன், கல்கத்தா பல்கலைக் கழகத்தில், முகர்ஜியால் புகழ்மிக்க பதவிக்கு நியமிக்கப்பட்டார். பிரிவு உபசார விழாவை கொண்டாட, மைசூரு பல்கலைக் கழக மாணவர்கள் முடிவு செய்தனர். ஆனால், ராதாகிருஷ்ணன் ஒப்புக்கொள்ளவில்லை.அப்படியும் மாணவர்கள், ரயில் நிலைய நடைமேடை முழுதும், மலர்களைத் துாவினர். பேராசிரியர் அமரும் ரயில் பெட்டி, மலர் அலங்காரம் செய்யப்பட்டது. கோச் வரை, குதிரை வண்டியில் பேராசிரியர் செல்வதாக ஏற்பாடு.வண்டியிலிருந்து குதிரைகள் அவிழ்க்கப்பட்டன. மாணவர்கள், வண்டியை இழுத்தனர். பேராசிரியருக்கு அளிக்கப்படும் பிரிவுபசார அணிவகுப்பைக் கண்டு வியந்தனர், பொதுமக்கள்.கண்ணீரை மாலையாக்கி, 'பேராசிரியர் ராதாகிருஷ்ணன் வாழ்க...' என்று அடித்தொண்டை வலிக்க, பிரியா விடை கொடுத்தனர், மாணவர்கள்.இந்தியத் துாதுவர் பதவி பெரும்பாலும் அரசியல்வாதிகளுக்கே வழங்கப்பட்டது.தத்துவப் பேராசிரியர் ராதாகிருஷ்ணன், நேரடி அரசியலில் ஈடுபடவில்லை. அச்சமயம், விஜயலட்சுமி பண்டிட், ரஷ்யாவில் துாதுவராக பணியாற்றி விட்டு, இந்தியா திரும்பினார்.அந்த பதவிக்கு, கல்விப்பணியில் ஈடுபட்டிருந்த ராதாகிருஷ்ணனை சோவியத் நாட்டுக்கு, இந்திய பிரதிநிதியாக, துாதராக நியமித்தார், பிரதமர், நேரு.அப்போது, 'இந்தியாவின் அடையாளமாக ராதாகிருஷ்ணன் சோவியத் நாட்டுக்கு செல்கிறார்...' என்று குறிப்பிட்டார், நேரு.இரு நாடுகளுக்கும் இடையே ஒற்றுமை ஏற்படுத்துதல், சோவியத் நாட்டின் கொள்கைகளை உணர்ந்து கொள்ளுதல், இந்தியாவின் கொள்கைகளை சோவியத் நாடு புரிந்துகொள்ளுமாறு விளக்குதல் ஆகியவை, பேராசிரியர் மேற்கொண்ட பணி.ஒரு துாதுவர், அயல் நாட்டில் எப்படி கண்ணியமாக நடக்க வேண்டுமோ அப்படியே பழகினார்.எளிதில் யாரையும் சந்திக்க மாட்டார், ரஷ்ய முன்னாள் அதிபர், ஸ்டாலின். ஆனால், ஸ்டாலினை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார், ராதாகிருஷ்ணன்.உரையாடல் அரைமணி நேரம் நடந்தது. இரு நாடுகளும் நட்புடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதில், விருப்பம் தெரிவித்தார், ஸ்டாலின்.'சண்டையிடத்தான் இருவர் தேவை. சண்டையை நிறுத்த ஒருவரால் முடியுமே...' என்று நகைச்சுவையுடன் ஸ்டாலினிடம் கூறினார், ராதாகிருஷ்ணன்.'புகழ், நேர்மை, செல்வாக்கு இவற்றின் காரணமாகவே ராதாகிருஷ்ணனுக்கு, ஸ்டாலினைக் காணும் வாய்ப்பு எளிதில் கிடைத்தது...' என்று, ரஷ்ய அதிகாரிகள் கூறினர்.நடுத்தெரு நாராயணன்