உள்ளூர் செய்திகள்

திண்ணை

எஸ்.விஜயன் எழுதிய, 'எம்.ஜி.ஆர்., கதை' நுாலிலிருந்து:எம்.ஜி.ஆரது குடும்ப டாக்டர், பி.ஆர்.எஸ்., என்றழைக்கப்பட்ட, பி.ஆர்.சுப்பிரமணியம். எம்.ஜி.ஆருக்காகவே வாழ்ந்தவர் எனலாம். அவர் ஒரு பேட்டியில்:எம்.ஜி.ஆர்., எந்த நிலையிலும், மருத்துவமனை சென்று சிகிச்சை பெறுவதை விரும்பாதவர். அவர், முதல்வராவதற்கு முன் ஒரு சமயம், 'வலது கண் பார்வை மங்கலாக தெரிகிறது...' என்றார்.'காட்ராக்ட் (சதை) வளர்ந்திருக்கிறது...' என்று சொன்னேன்.ஒப்புக் கொள்ளவில்லை, எம்.ஜி.ஆர்., முந்தைய தேர்தல் பிரசாரத்தின் போது, வேனில் சென்றிருக்கிறார். ஓரிடத்தில், வீதியின் மேலே சென்ற ஒயர் கம்பி அவரது நெற்றியில் இடித்து நரம்பில் அடிபட்டிருந்தது. அதை நான் குணப்படுத்தி இருந்தேன்.அந்த நிகழ்ச்சியை அவர் நினைவுபடுத்தி, 'நீங்கள் சரியாக சிகிச்சை செய்யவில்லை. அதனால், தலையில் பாதிப்பு ஏற்பட்டு பார்வை மங்கியிருக்கலாம்...' என்று சொன்னார்.நான் அப்போதும், 'காட்ராக்ட் தான் உங்களுக்கு வந்திருக்கிறது. அது, உங்கள் தாயார் கொடுத்த சொத்து. பரம்பரையாக வருவதை எப்படி தடுக்க முடியும்... தவிர, நடிகர் என்ற முறையில் தலையில், 'டை' அடித்துக் கொள்கிறீர்கள். அதன் ரசாயன விளைவுகள், காட்ராக்ட்டை உருவாக்கும்...' என்று, அழுத்தம் திருத்தமாக சொன்னேன். அப்போதும், அவருக்கு நம்பிக்கை பிறக்கவில்லை.அப்புறம், அயல் நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார், எம்.ஜி.ஆர்., பிரான்ஸ் நாட்டில் ஒரு கண் டாக்டரிடம், பரிசோதித்திருக்கிறார். அதன் பின்னரே, தனக்கு, 'காட்ராக்ட்' இருப்பதை உறுதியாக அறிந்தார்.சென்னை திரும்பியதும் என்னிடம் அதுபற்றி கூறினார். 'இனியும் தாமதிக்காதீர்கள். அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள்...' என்றேன்.'எந்த சிகிச்சை நடைபெறுவதாக இருந்தாலும், தோட்டத்திலேயே நடைபெற வேண்டும். மருத்துவமனைக்கு எல்லாம் வரமாட்டேன்...' என்று கூறிவிட்டார், எம்.ஜி.ஆர்.,கண் மருத்துவரான ராமச்சந்திரனை (அப்போது, கச்சேரி சாலையில் கிளினிக் வைத்திருந்தவர்) தோட்டத்திற்கு அழைத்துச் சென்றேன். அவர் மூலம், எம்.ஜி.ஆருக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. வெளி உலகம் அறியாத நிகழ்ச்சி இது.ம.வெங்கடேசன் எழுதிய, 'அரசியல் ஆன்மிக எம்.ஜி.ஆர்.,' நுாலிலிருந்து:இன்று போல் என்றும் வாழ்க படத்தின் படப்பிடிப்பு, கர்நாடக மாநிலத்தில் நடந்தது. அந்த சமயத்தில், கொல்லுாரில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்கு முதன் முதலில், எம்.ஜி.ஆரை அழைத்துச் சென்றார், இயக்குனர் சங்கர்.கோவிலுக்கு பின்புறம், சங்கர பீடம் இருக்கிறது. அங்கே தான் ஆதிசங்கரர் தவம் செய்து, பின்னர், மூகாம்பிகையை பிரதிஷ்டை செய்தார். சிறப்பு அனுமதி பெற்று, சங்கர பீடத்தின் உள்ளே எம்.ஜி.ஆர்., தனிமையில் தியானம் செய்ய ஏற்பாடு செய்தார், இயக்குனர் சங்கர். ஒரு மணி நேரத்திற்கு பின் வெளியே வந்த எம்.ஜி.ஆர்., 'நிம்மதியாக இருந்த இந்தத் தருணத்தை வாழ்க்கையில் மறக்கவே முடியாது...' என்று கூறினார்.தொடர்ந்து மூகாம்பிகை கோவிலுக்கு பலமுறை சென்றிருக்கிறார், எம்.ஜி.ஆர்.,நாடோடி மன்னன் படத்தில் நடித்தபோது, கிடைத்த வாளை, மூகாம்பிகை கோவிலுக்கு தானமாக வழங்கினார். இன்றும் அந்த வாளை, அக்கோவிலில் காணலாம்.'மூகாம்பிகை வடிவில் என் தாயை பார்க்கிறேன்...' என்றும் கூறியிருக்கிறார், எம்.ஜி.ஆர்., - நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !