உள்ளூர் செய்திகள்

திண்ணை!

பார்த்திபன்எழுதிய, 'சென்னையின் கதை' நுாலிலிருந்து:சென்னை மாநகரில், நிறைய தெருக்கள் இன்றும், ஆங்கிலேய பெயர்களை தாங்கி நிற்கின்றன. அந்த வரிசையில், திருவல்லிக்கேணியிலிருந்து அண்ணாசாலை வரை நீளும் சாலைக்கு, எல்லீஸ் என்பவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. யார் இந்த எல்லீஸ்? கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றுவதற்காக, இங்கிலாந்திலிருந்து வந்தவர், ப்ரான்சிஸ் வைட் எல்லீஸ். 1796ல் இந்தியா வந்தவர், பல்வேறு பொறுப்புகளை வகித்து, படிப்படியாக முன்னேறி, 1810ல், மெட்ராஸ் மாகாணத்தின் ஆளுனர் ஆனார்.ஆங்கிலம் பேசிப் பழகிய எல்லீசுக்கு, தமிழ் மொழி மீது பற்று வந்தது. ராமச்சந்திர கவிராயர் என்பவரிடம், தமிழ் டியூஷன் படிக்க ஆரம்பித்தார். விருப்பம் இருந்ததால், வெகு விரைவில் தமிழ் கற்ற எல்லீஸ், செய்யுள் இயற்றும் அளவுக்கு புலமை பெற்றார்.தமிழ் கற்ற காலத்தில், திருவள்ளுவரின் தீவிர ரசிகராகி விட்டார், எல்லீஸ். இரண்டே இரண்டு வரிகளில் இந்த மனிதர் எவ்வளவு அரிய பெரிய கருத்துகளை எல்லாம் சொல்லி விட்டார் என்று அதிசயித்தார்.இதை ஆங்கிலேயர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில், திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். 1812ல் வெளியான அவரின் ஆங்கிலேய அறத்துப்பால் தான், திருக்குறளின் முதல் ஆங்கில மொழி பெயர்ப்பு. இது போதாதென்று பல திருக்குறளுக்கு எளிமையான விளக்கவுரையையும் எழுதினார்.அதேசமயம், மக்கள் பணியிலும் கவனம் செலுத்த தவறவில்லை, எல்லீஸ். 1818ல், பெரும் தண்ணீர் பஞ்சம் வந்தபோது, சென்னையில், 27 கிணறுகளை வெட்டினார், எல்லீஸ்.எங்கேயோ பிறந்து வளர்ந்த இந்த ஆங்கிலேயர், பிழைக்க வந்த நாட்டில் தமிழால் ஈர்க்கப்பட்டு, தன் இறுதி நாட்களில் தமிழராகவே மாறி விட்டார் என்பதே உண்மை.***பறந்து பறந்து வேலை செய்வது என்று, பேச்சு வழக்கில் சொல்வதுண்டு. ஆனால், 100 ஆண்டுகளுக்கு முன்பே, மெட்ராசில் ஒரு டாக்டர் உண்மையிலேயே பறந்து பறந்து மருத்துவம் பார்த்திருக்கிறார். இதனால் அவரை, மெட்ராஸ்வாசிகள், 'பறக்கும் டாக்டர்' என்றே அழைத்திருக்கின்றனர்.பறக்கும் டாக்டர் என பெயரெடுத்த ரங்காச்சாரி, 1882ல் பிறந்தார். மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லுாரியில் படித்துக் கொண்டிருந்த ரங்காச்சாரியை, மருத்துவம் படிக்கும்படி ஊக்கப்படுத்தினர், இரண்டு ஐரோப்பிய அறுவை சிகிச்சை நிபுணர்கள். அவர்கள் அளித்த உற்சாகத்தால், மெட்ராஸ் மருத்துவ கல்லுாரியில் சேர்ந்த ரங்காச்சாரி, 1904ல், மருத்துவ படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.திறமையான மருத்துவர் என பெயரெடுத்த ரங்காச்சாரி, எழும்பூரில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளராக, 1917ல் நியமிக்கப்பட்டார். இதன் மூலம், இந்த பதவியை அடைந்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.சிறந்த மருத்துவராக திகழ்ந்த ரங்காச்சாரி, மிகச்சிறந்த மனிதராகவும் இருந்தார். ஒரு நாளில், 18 மணி நேரம் மருத்துவம் பார்ப்பார். அதிகாலை, 4:00 மணிக்கு துவங்கி, 11:00 மணி வரை அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வார். அதன்பின், தன் கிளினிக்கிற்கு வந்திருக்கும் நோயாளிகளை கவனிப்பார். இதனிடையே, நடக்க முடியாத நோயாளிகளின் வீட்டிற்கும் சென்று மருத்துவம் பார்ப்பார்.ஆரம்ப நாட்களில் ஒரு சைக்கிள் வைத்திருந்தார், ரங்காச்சாரி. அதில் தான் மருத்துவமனைக்கு சென்று வருவார். பின்னர், மோட்டார் பைக்கிற்கு மாறியவர், 1920களின் பிற்பகுதியில், அந்த காலத்திலேயே 52 ஆயிரம் ரூபாய் கொடுத்து, ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் வாங்கினார்.இப்படி மாய்ந்து மாய்ந்து மருத்துவம் பார்த்தும், ரங்காச்சாரிக்கு மனத்திருப்தி ஏற்படவில்லை. இன்னும் நிறைய பேருக்கு மருத்துவம் பார்க்க, ஒரு சிறிய விமானத்தை விலைக்கு வாங்கினார். பறந்து விரிந்திருந்த சென்னை மாகாணம் முழுவதும் பறந்து சென்று மருத்துவம் பார்க்க, இது அவருக்கு பெரிதும் உதவியது. இப்படித்தான் சென்னைக்கு ஒரு பறக்கும் டாக்டர் கிடைத்தார்.- நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !