திண்ணை!
'சுயராஜ்யமே வேண்டும்...' என்று பாலகங்காதர திலகர் பெருங்கிளர்ச்சி செய்து வருகையில், அன்னி பெசன்ட் அம்மையார், தமிழகத்தில் அதே கிளர்ச்சியை செய்து வந்தார். அப்போது, அரசியல் கூட்டங்களில் எல்லாம் ஆங்கிலத்திலேயே பேசுவது வழக்கம். ஆங்கிலம் அறியாத மக்களுக்கு, அரசியல் கிளர்ச்சி புரிய வேண்டுமே... அதற்காக தமிழ் நாடெங்கும் சென்று, தமிழில் பேசி வர டாக்டர் வரதராஜுலு நாயுடு சித்த மானார். மதுரையிலே அரிய சொற்பொழிவு நிகழ்த் தினார். அதனால், பாமர மக்களிடமும் விழிப் பும், துடிப்பும், உணர்ச்சியும், உற்சாகமும் ஏற்பட்டது.அதிகார வர்க்கத்தார் அது கண்டு அஞ்சினர். மக்களின் கண்ணைத் திறந்து விடும் நாயுடுவை முடக்கிப் போட விரும்பி, பிரிட்டீஷ் அரசர் மீது துவேஷம் உண்டாகும்படி பேசியதாக அவர் மீது வழக்கு தொடுத்தனர். இதை எதிர்த்து, எதிர் வழக்காட வேண்டுமென்று ஜனங்களுக்கு துணிவு பிறந்தது. பலரும், பண உதவி செய்தனர்.ராஜாஜியே தர்ம வழக்கறிஞராகி, கட்டணம் வாங்காமல் வாதாடத் துவங்கினார். அந்நாளில், சர்க்காருக்கு எதிராக வழக்காடுதல் எளிதன்று. அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரும். மனத் துணிவு உள்ளவரே முன்வர வேண்டும். மதுரையிலே மாஜிஸ்திரேட்டின் முன், விசாரணை நடந்தது. சர்க்கார் தரப்பு சாட்சிகளை எல்லாம் குறுக்கு விசாரணை செய்ய எழுந்தார் ராஜாஜி.அந்நாளில் அதிகாரிகளின் பேச்சுக்கு எதிர் பேச்சு இருக்கக் கூடாது என்ற ஆணவம் தாண்டவமாடியது. எனவே, குறுக்கு விசாரணை செய்ய ராஜாஜி எழுந்த போதெல்லாம், 'உட்காரும்... உட்காரும்...' என்று மாஜிஸ்திரேட் மமதையுடன் சொல்லி வந்தார். முதல் இரண்டு நாள் பேசாமல் உட்கார்ந்து விட்டார் ராஜாஜி.மூன்றாவது நாளும், 'உட்காரும்...' என்று நீதிபதி சொன்னதுதான் தாமதம். ராஜாஜி உடனே, 'ராஜத் துவேஷம் என்பது மாபெரும் குற்றம். அத்தகைய வழக்கை நீதிபதி விசாரிப்பது இதுவே முதல் தடவை. சர்க்கார் வக்கீலுக்கும் அத்தகைய வழக்கில் இதுவே முதல் அனுபவம்; எனக்கும் அப்படித்தான். எதிரிக்கும் இதுவே முதல் விசாரணை. இத்தகைய கடின நிலையில் நான் என் கடமையை ஆற்ற வேண்டும். எனவே, நீதிபதி என் குறுக்கு விசாரணைக்கு அனுமதி அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்காமல் குறுக்கிடுவது நீதியன்று. 'உட்காரும்... உட்காரும்...' என்று கூறுவதும் நேர்மையல்ல. பள்ளிக் கூட மாணவனைப் போல, என்னை நடத்துவதும் நீதிமன்றத்தின் மதிப்புக்கு ஏற்றதல்ல....' என்றார்.ராஜாஜியின் மனோ திடத்தையும், சொல் வன்மையையும் அங்கிருந்தோர் உணர்ந்தனர். நீதிபதியும், தன் பிழையை உணர்ந்து தவறுக்கு, 'வருத்தம்' தெரிவித்தார்.— 'நமது ராஜாஜி' நூலில் எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர்.உரையாடல் மூலம் நம்மை உயர்த்திக் கொள்ள சில வழிமுறைகள்:*எல்லாருடைய மனநிலைகள், உணர்வுகள் ஆகியவற்றைப் பற்றிக் குறிப்புணர்ந்து நடத்தல்.*நடுநிலையோடு எத்தகைய உரையாடலின் உள்ளடகத்தையும் அளந்தறிதல்.*உரையாடும் போது உணர்ச்சிப்பூர்வமான ஈடுபாடுகளைத் தவிர்த்தல்.*பல்வேறு குழுக்களுக்கிடையில் உறவுப் பாலமாகச் செயல்படுதல்.* உறவுத் தொடர்புக்கான பணி செய்தல்.*விவாதம், வாய்ச் சண்டை, குழு மனப்பான்மை, ஒத்துப் போகாமை ஆகியவற்றைத் தவிர்த்தல்.*மறப்பதிலும், மன்னிப்பதிலும் முந்திக் கொள்ளும் அளவுக்கு பரந்த மனம் உடையவராக இருத்தல்.* பேச்சைக் குறைத்துக் கொள்ளுதல்.* கூட்டு விவாதங்களில் பங்கு பெறுதல்.— ' அர்த்தமுள்ள வாழ்க்கை' நூலிலிருந்து...பைத்தியம் பிடித்தவனை, 'கேனைக் கிறுக்கன்' என்றும், விவரம் இல்லாதவனை, 'கேனப் பயல்' என்றும் சொல்கின்றனர். அது எப்படி வந்தது?உபநிஷத்துகளில், 'கேனோப நிஷத்' என்பது ஒன்று; அதைக் கேனம் என்பர். 'கெட்டதைக் கேனத்தில் தேடு...' என்று ஒரு பழமொழி உண்டு. அதில் வரும் திருஷ்டாந்தங்கள் எளிதில் விளங்குவதில்லை. அறிவு நுட்பம் இல்லாதவர்களுக்கு, அதைப் படித்தால் தலை சுற்றும்.தலை சுற்றும் நிலையில் உள்ளவனை, 'என்னப்பா... கேனம் படித்தவன் மாதிரி இருக்கிறாய்?' என்று கேட்டனர். கேனம் படித்தவன் என்பது, நாளடைவில் கேனம் பிடித்தவன் என்று மாறிற்று.— ஒரு உபன்யாசத்தில் கேட்டது.நடுத்தெரு நாராயணன்