உள்ளூர் செய்திகள்

பாங்காங் ஏரி!

இரு நாடுகளுக்கு இடையே எல்லையாக இருக்கிறது, பாங்காங் என்ற ஏரி. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின், 'லே' மாவட்டத்தில், லே பகுதியிலிருந்து, ஒரு மணி நேரத்தில், இந்த ஏரியை அடைந்து விடலாம். இதன், 50 சதவீத பகுதி, இந்தியாவிலும், மீதி, 50 சதவீதம், சீன - திபெத் பகுதியிலும் உள்ளது.கடந்த, 1962ல் நடந்த, இந்திய - சீன யுத்தத்தின் முடிவில், ஏரியின் சில பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டது, சீனா. இந்தியா உரிமை கொண்டாடியும், இதுவரை திருப்பித் தரவில்லை.ஏரியின் மொத்த நீளம், 134 கி.மீ., அகலம், 5 கி.மீ., ஆழம், 100 மீட்டர்.இது, உப்பு ஏரி; இந்த ஏரியை சுற்றிப் பார்க்க, 'லே' சுற்றுலா அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். கூடவே, வழிகாட்டி ஒருவர் வருவார். சீனா, அடிக்கடி எல்லை மீறும் பகுதி என்பதால், ஏரியில் படகு ஓட்ட அனுமதி இல்லை.உப்பு ஏரி என்பதால், இதில் மீன்கள் வளர்வதில்லை; தாவரங்கள் அபூர்வம். ஆனால், ஏரியை சுற்றியுள்ள சதுப்பு நிலத்தில், ஏராளமான தாவரங்கள் மற்றும் புதர்களை காணலாம்.இனப் பெருக்கத்திற்காக, வலசை வரும் பறவைகள், இந்த ஏரிக்கு வருகின்றன. இவற்றில், வாத்து, சைபீரிய கொக்கு, நீர் கோழி போன்றவையும், மார்மோத் மற்றும் இயாங்க் போன்ற விலங்குகளையும் காணலாம்.தினமும், வானத்தின் நிறத்திற்கு ஏற்ப, ஏரியின் நீர், வண்ணம் மாறி காட்சி தருவது கண்கொள்ளா காட்சி.ஜனவரி முதல் செப்டம்பர் வரை இந்த ஏரியை சுற்றிப் பார்க்கலாம்; குளிர் காலத்தில், முழு ஏரியும், பனியால் உறைந்து விடும். தமிழில், 2011ல் வெளியான, வெடி படத்தில் வரும் ஒரு பாடல் காட்சி, இங்கு படமாக்கப்பட்டது.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !