பிரிக்க முடியாத பந்தம்!
'பொம்பளைப் புள்ளைய அடக்கம், ஒடுக்கமாக வளர்த்திருக்கணும். அதிக செல்லம் கொடுத்தால் இப்படித்தான். பெண், பெரிய படிப்பு படிக்கிறான்னு அப்பனுக்கும், ஆத்தாளுக்கும் பெருமை. இப்ப என்ன ஆச்சு...'டவுனுக்கு வேலைக்குப் போன இடத்தில், ஒருத்தனோடு பழக்கமாகி, ஊரை விட்டே ஓடிட்டா...' என்று, அந்த கிராமத்தினர். பசுபதியின் குடும்பத்தை வசைபாடினர். சீதாவின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தோடியது. உண்மை தான். ஒரே மகள் என்று, சகல சுதந்திரமும் கொடுத்து தான் வளர்த்தனர்.காதல் என்ற பெயரில் மகள், தங்களை விட்டுப் பிரிந்து விடுவாள் என்று, அவர்கள் நினைக்கவில்லை.''இங்கே பாரு, பசுபதி... இந்த அவமானம், உனக்கு மட்டுமில்லை, இந்த கிராமத்துக்கும் தான். அந்தப் பையனை பத்தி விசாரிச்சதுல, அப்பா - அம்மா யாருமில்லாத அனாதையாம்.''ஜாதி, குலம் கூட தெரியாது. அப்படிப்பட்டவனோடு, உன் மகள் போயிருக்கா... எல்லாம் படிச்ச திமிர்; வேறென்ன சொல்றது,'' என்றார், அந்த ஊர் பெரியவர்.குனிந்த தலை நிமிரவில்லை, பசுபதி. ''எங்கே இருக்கா, என்ன ஏதுன்னு ஏதாவது செய்தி வந்துச்சா?''''இல்லை... போனதிலிருந்து எந்தத் தகவலுமில்லை. மனசு கிடந்து தவிக்குது... நாலு நாளாச்சு, போலீசுக்கு தகவல் சொல்லலாம்ன்னு இருக்கோம்.''''சொல்லி, அவங்க கண்டுபிடிச்சு தந்ததும், 'இரண்டு பேரும் மேஜர்... கல்யாணம் பண்ணிக்கிற உரிமை இருக்கு... சேர்த்து வைங்க'ன்னு சொல்வாங்க... நீ, அவங்களை ஒண்ணு சேர்க்கப் போறியா?''மூலையில் உட்கார்ந்து, முந்தானையில் முகம் மூடி அழுதாள், சீதா.''போலீசுக்கெல்லாம் போக வேண்டாம். எப்ப இருந்தாலும், இந்த கிராமத்துக்கு ஒருநாள் வந்து தான் ஆகணும். அப்ப, உன் கையாலேயே அவங்களை கண்டதுண்டமாக வெட்டிப் போடு... இப்படிப்பட்ட ஓடுகாலிப் பெண் உனக்கு பிறக்கலைன்னு நினைச்சுக்க...''புருஷனும், பெண்டாட்டியும் போய் தலை முழுகிட்டு, ஆக வேண்டிய வேலையைப் பாருங்க,'' என்று சொல்லி, துண்டை உதறி தோளில் போட்டு கிளம்பினார், ஊர் பெரியவர். 'எவ்வளவு சுலபமாகச் சொல்லி விட்டார். பெற்று, வளர்த்து, ஆளாக்கி, பாசத்தைக் கொட்டி வளர்த்த மகளை, வெட்டிப் போடச் சொல்கிறாரே... அவள் செய்த பாவம் தான் என்ன... மனசுக்குப் பிடிச்சவனை விரும்பியதா...' சீதாவின் மனம் பேதலித்தது.''சீதா... உன் மகள் பத்தி ஏதாவது தகவல் வந்துச்சா... போய் ஒரு வருஷமாச்சே?''''இல்ல பெரியம்மா... எந்தத் தகவலும் இல்லை.''''எப்படி வரும்... திட்டம் போட்டு, உங்களை ஏமாத்திட்டு போயிருக்கா... ஜாடை மாடையா, சொன்னப்ப கேட்டியா... மகளை முழுசா நம்பினே... இப்ப பாரு, பெத்தவங்க தலைகுனியற மாதிரி காரியத்தை செஞ்சுட்டா... ''உனக்கு விஷயம் தெரியுமா...'' என, 'கிசுகிசு'ப்பான குரலில் கேட்க, என்ன என்பது போல் பார்த்தாள், சீதா.''பெரிய மாமனார், நேத்து, உன் புருஷனைக் கூப்பிட்டு, உனக்கு மானம், ரோஷம் இருக்கா; சோத்தில் உப்பு போட்டு திங்கறியா; ஜாதி, குலம் தெரியாதவன் பின்னால் ஓடிப் போயிருக்கா... எனக்கென்னன்னு மூணு வேளையும் சாப்பிட்டு நிம்மதியா இருக்கே. நாலா பக்கமும் ஆள விட்டு தேடச் சொல்லு...''எந்த ஜில்லாவில் இருந்தாலும், இரண்டு பேரையும் தலைமுடியை பிடிச்சு இழுத்துட்டு வரச் சொல்லு... ஓடுகாலி செருக்கியை நாக்கைப் புடுங்கற மாதிரி நாலு கேள்வி கேட்போம். உன்னைத் தலைகுனிய வச்சவ வாழக்கூடாதுன்னு சொல்லியிருக்கார்.''உன் புருஷன், உன்கிட்ட எதுவும் சொல்லலையா... கிராமத்தில், உன் மகளால் பெரிய பிரச்னை வரப்போவது நிச்சயம்,'' என்றார், பெரியம்மா.கண்ணீருடன் கணவன் அருகில் உட்கார்ந்திருந்த சீதாவிடம், ''நம்ம சந்தோஷம், நிம்மதி எல்லாமே போச்சு... மகள் மேலே எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தோம். இப்ப ஊருக்கே பகையாளி ஆயிட்டாளே...''ஊர் ஜனமே வசை பாடுது... பெத்து வளர்த்த கையால் அவளை வெட்டிப் போட சொல்றாங்க... என்னால் முடியாது,'' என்றார், பசுபதி.''ஐயோ... இப்படி பண்ணிட்டீங்களே...'' என, வயிற்றிலும் வாயிலும் அடித்து, சீதா அழ, கிராமமே அவர்கள் வீட்டு முன் கூடியது.'மானஸ்தன். அதான், மகள் செய்த காரியத்தைப் பொறுக்க முடியாமல் துாக்கில் தொங்கிட்டான்... அப்பன் உயிரைக் குடிச்சவள், நல்ல வாழ்க்கையா வாழப் போறா... நிற்கதியாக தான் நிற்பாள்... இனி, இந்த ஊரில் காலடி எடுத்து வச்சா... கல்லால் அடிச்சே கொன்று விடுவோம். அவள் சாவு நிச்சயம்...' என, ஊர் ஜனம் பேசியது. அழக்கூடத் தெம்பில்லாமல் மயங்கிக் கிடந்தாள், சீதா.இரவு, 11:00 மணி, மொபைல்போன் அடித்தது. மனம் வெதும்பி அழுது கொண்டிருந்த, சீதா போனை எடுத்து, ''ஹலோ... யாரு?'' என்றாள்.''ஐயோ, என்னை மன்னிச்சிடும்மா... இப்படி நடக்கும்ன்னு கனவிலும் நினைக்கலை. அப்பா போயிட்டாரே... எல்லாம் என்னால் தான்,'' கதறினாள், மகள் ரேவதி. ''ரேவதி, எங்கேயிருந்து பேசறே...''''திருச்சியில் இருக்கேன்மா... அவர் நல்லவர்மா... அனாதைங்கிறதாலே, ஜாதியை காரணம் காட்டி, எங்க காதலை ஏத்துக்க மாட்டிங்கன்னு, தப்பா முடிவு செஞ்சு, வெளியூர் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.''பத்து நாள் கழிச்சு வந்து, உங்க இரண்டு பேர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கலாம்ன்னு நினைச்சிருந்தோம். அதுக்குள்ள அப்பா... ஐயோ, எனக்கு மன்னிப்பே கிடையாது. இப்ப தான் எனக்கு விஷயம் தெரிஞ்சுது, நாளைக்கே புறப்பட்டு வரேன்மா...'' என்றாள்.''வேண்டாம் ரேவதி... வராதே... நான் சொல்றதைக் கேளு,'' என்றாள்.பசுபதியின், 16ம் நாள் காரியம் முடிந்தது. வழக்கம் போல, ஊர் ஜனம் ரேவதியை வசைபாடியது. ''இவ்வளவு நாள், அப்பா இறந்து போன விஷயம் தெரியாமலா இருக்கும். இந்தப் பக்கம் வரலையே... இவளையெல்லாம் மகள்ன்னு சொல்றதே வெட்கக் கேடு. மானஸ்தன், போய் சேர்ந்துட்டாரு...''இங்கே பாரு, சீதா... புருஷனுக்கு இருந்த கோபமும், வெறுப்பும் உனக்கும் இருக்கணும். செத்தாலும் அவள் முகத்தில் விழிக்காதே... ஊர் பக்கம் வரட்டும், நானே அவளை வெட்டிட்டு ஜெயிலுக்குப் போறேன்,'' என்றார், பெரிய மாமனார்.வீட்டைப் பூட்டி பெட்டியுடன் கிளம்பினாள், சீதா.'எங்கே போறே சீதா... உனக்கு யாருமில்லைன்னு நினைக்காதே... ஊர் ஜனம் உனக்கு துணையா இருப்போம்...' என்றனர், கிராமத்தினர்.''தேவையில்லை... உங்க யாருடைய தயவும் எனக்கு தேவையில்லை. எங்க வீட்டு பிரச்னையை, ஊர் பிரச்னையாக்கி, என் புருஷன் போய் சேர்ந்துட்டாரு. இப்ப என்னையும் நிம்மதியில்லாமல் செய்துடாதீங்க,'' என்றாள்.'என்ன சொல்ற சீதா... உனக்கு ஆதரவாதானே நாங்க இருந்தோம்...' என்றனர்.''எது ஆதரவு... மகள் வீட்டை வீட்டுப் போன துக்கத்தில் இருந்த எங்களுக்கு, ஆறுதலா சொன்னீங்க... இல்லையே... ஏதோ மகாபாதகம் செய்தது போல, அவளைக் கரிச்சுக் கொட்டினீங்க... அன்பான இரண்டு உள்ளங்கள், ஒருத்தரையொருத்தர் விரும்பினது தப்பான செயலா...''யாருமில்லாத அனாதையை காதலிப்பதால், பெத்தவங்க சம்மதிப்பாளாங்கிற பயத்தில், கல்யாணம் பண்ணிட்டு வந்து ஆசீர்வாதம் வாங்குவோம்ன்னு நினைச்சவளை... கொலை செய்யற அளவு எங்களைத் துாண்டி விட்டது, நீங்க தானே...''மகள் திரும்பி வந்தால், மன்னிச்சு ஏத்துக்கிற மனநிலையில் நாங்க இருந்திருந்தாலும்... ஜாதி பெயரைச் சொல்லி, அவள் வாழ்க்கையை நிர்மூலமாக்கி இருப்பீங்க... இதற்குப் பெயர் ஆதரவு இல்லை...''மகளுக்கு எதிராக செயல்பட துணிவில்லாமல், என் புருஷன் உயிரை மாய்ச்சுக்கிட்டாரு... இப்ப என்னையும் பலிகடா ஆக்கிடாதீங்க... உங்க எல்லாரையும் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கிறேன்...''இரண்டு உள்ளங்கள் மனசார விரும்பினால், உங்களால் முடிஞ்சா, அவங்களைச் சேர்த்து வைங்க... இல்லை, எங்கேயாவது கண்காணாமல் வாழ்ந்துட்டுப் போகட்டும்ன்னு, அவங்களை ஒதுக்கி வச்சுருங்க... அதை விட்டுட்டு, வெட்டு, பழி, கொலைன்னு பகையை வளர்க்காதீங்க... எனக்கு இந்த ஊரே வேண்டாம்... நான் வரேன்,'' என்று பெட்டியுடன் திரும்பிப் பார்க்காமல் சென்றாள்.சீதாவை தடுத்து நிறுத்த முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தது, ஊர் ஜனம்.அவளுக்காக, கண்ணீருடன் காத்திருக்கும் மகளைக் காண, வேகமாக நடக்க ஆரம்பித்தாள், சீதா. பரிமளா ராஜேந்திரன்