உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவிற்கு --நான், 23 வயதுப் பெண். படிப்பை முடித்து, வீட்டில் இருக்கிறேன். என் பெற்றோர் எனக்கு மாப்பிள்ளை பார்த்து வருகின்றனர். ஆனால், என்னால் திருமண ஏற்பாட்டிற்கு சம்மதம் தெரிவிக்க முடியவில்லை. ஏன், திருமணத்திற்கே நான் தகுதியானவளா என்று தெரியவில்லை.காரணம், சிறு வயது முதலே, சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையானது தான். இப்பழக்கம் என் பள்ளித் தோழி மூலம், எனக்கு பரிச்சியமானது. அந்த வயதில், இந்தப் பழக்கம் தவறானது என்று, என்னால் உணர முடியவில்லை. விளையாட்டாக ஏற்பட்ட பழக்கம், என்னுடைய எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விட்டது. இதனால், என்னுடைய திருமணப் பேச்சை வீட்டில் எடுத்தாலே, பயம் காரணமாக கோபமும், எரிச்சலும் ஏற்படுகிறது.காரணம், நான் திருமணம் செய்து கொண்டால், என்னால் என் வருங்காலக் கணவருக்கு தாம்பத்திய சுகத்தை முழுமையாக தர முடியாமல் போய் விடுமோ என்றும், குழந்தைகள் பிறக்காதோ என்ற பயமே. இதனால்,வீட்டில், திருமணப் பேச்சு எடுத்தாலே, தடை சொல்லி வருகிறேன்.என் பெற்றோரோ, 'உனக்கு அடுத்த சகோதரி, படிப்பு முடியும் நிலையில் உள்ளாள். உனக்கு, இப்பொழுது திருமணம் செய்தால்தானே இன்னும் ஓரிரு வருடங்களில் அவளுக்கும் திருமணம் செய்ய முடியும்...' என்கின்றனர்.என்னுடைய வேதனையை, மனக்குமுறலை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறேன். இது தவறான பழக்கம் என்று உணர்ந்தவுடன், படிப்படியாக இப்பழக்கத்தை விட்டு வருகிறேன். தனியாக வீட்டில் இருந்தால், உணர்ச்சிகளுக்கு அடிமையாகி, இப்பழக்கத்திற்கு ஆளாக நேரிடுகிறது.பெற்றோரிடமும், சகோதரியுடனும் பகிர்ந்து கொள்ள முடியாத என் நிலையை, உங்களிடம் மட்டுமே முதன் முதலாக பகிர்ந்து கொள்கிறேன். அம்மா, என் பிரச்னைக்கு மருத்துவரீதியான விளக்கத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.என் கேள்வியெல்லாம், திருமணம் செய்து கொண்டால் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியுமா? எனக்கு குழந்தை பிறக்குமா? என்பதுதான். தக்க பதிலைத் தாருங்கள்.-- இப்படிக்கு,உங்கள் மகள்.அன்பு மகளுக்கு --விளையாட்டாக ஏற்பட்ட பழக்கம், உனக்குள் எத்தகைய மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கு பார்த்தாயா? பொதுவாக பெண்களுக்கு, 13-14 வயதில், உடலில், சில ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். குரல் உடைவது, கை இடுக்கு மற்றும் பிறப்பு உறுப்பின் அருகில் முடி வளர்வது, மார்பகம் பெரிதாவது, இடுப்பு எலும்பு சற்று விரிவடைவது, முகத்தில் அங்கங்கு பருக்கள் வருவது... என்று, இயற்கை, அவள், 'பெரிய பெண்ணாக' மாறிக் கொண்டிருப்பதை உணர்த்தும். பிறப்பு உறுப்பில் ஏதோ இனம் தெரியாத உணர்வு... தொட்டால் சந்தோஷம் தருகிற மாதிரி உணர்வு வரும். சில பெண்களுக்கு பூப்படைவதற்கு முன்னரே இம்மாதிரியான உணர்வுகள் வரலாம். இவைகள் அனைத்தும், உடலில் ஏற்படக் கூடிய மிகச் சாதாரண விஷயங்கள்.பொதுவாக, பருவம் அடைந்த பெண்களில், 15-20 சதவீதம், ஏதாவது ஒரு வழியில், 'இப்பழக்கத்தை' ரெகுலராக கடைபிடிக்கின்றனர் என்கிறது மருத்துவ ஆய்வு. இந்த ஆய்வு, திருமணம் ஆகி, குழந்தை பெற்ற பெண்களையும் விட்டு வைப்பதில்லை என்றும் கூறுகிறது. இதை, 'செக்ஸ் பேன்டசி' என்று அழைப்பர். பெண்கள் மத்தியில், இது, மிக மிகச் சாதாரணமான செயல். எனவே, உனக்கு ஏற்பட்டிருக்கும், குற்ற உணர்வு தேவையில்லாதது.ஆனாலும் மகளே... ஒன்றைப் புரிந்து கொள். எந்த வழிமுறைகளைக் கையாள்கிறாய் என்பதை பொறுத்துத்தான் பிற்காலத்தில் திருமணமாகி, கணவருடன், தாம்பத்ய உறவில் ஈடுபடுவது மற்றும் நல்ல முறையில் குழந்தையைப் பெற்றுக் கொள்வது எல்லாம் இருக்கிறது.நகரங்களில் வாழும் ஒரு சில இளம் பெண்களும், குறிப்பாக கல்வி பயிலும் மாணவிகள், குடும்ப பளு காரணமாக பணிக்குச் செல்லும் பெண்கள் என, இப்படி பலர், 'பலான' பத்திரிகைகளைப் படித்தோ அல்லது பலான திரைப்படங்களை பார்த்தோ, மிகத் தவறான விவரங்களை, எண்ணங்களை வைத்துள்ளனர்.இன்னும் சில பெண்கள், உடன் இருக்கும், தோழிகளின் வற்புறுத்தலின் பேரில், சில தேவையற்ற காரியங்களை செய்யும்போது, பெண்களின் பிறப்பு உறுப்பு சேதம் அடைய வாய்ப்புகள் அதிகம்.இவைகள் தான், பிற்காலத்தில், உடல்ரீதியான பிரச்னைகளை உருவாக்கும். பெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து கர்ப்பப்பையும், 'பெலோப்பியன் டியூப்' மற்றும் 'ஓவரி' எல்லாம் சற்று தள்ளியே உள்ளே அமைந்திருப்பதால், சுய இன்பப் பழக்கத்திற்கும், குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் எந்த சம்பந்தமும் இருக்க வாய்ப்பில்லை. எனவே, கவலை கொள்ள வேண்டாம்.திருமணத்திற்கு பின், ஆண்-பெண் செக்ஸ் உறவு கிடைத்த பிறகு, இந்த சுய இன்பப் பழக்கத்தை விட்டு விடும் வாய்ப்புகள் அதிகம்.பல்வேறு குடும்ப பிரச்னையால், சரியான வயதில் திருமணமாகாத பெண்கள், இளம் வயதிலேயே கணவனை இழந்து, மறுமணம் செய்யாமல் விதவையாக வாழும் பெண்கள், கணவன் இருந்தும், அவர் ஏதோ காரணத்தால் உடல் உறவிற்கு வாய்ப்புகளே இல்லாமல் போகும் சூழல்... இது போன்ற நிலைகளில் பெண்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு வடிகால்தான், சுய இன்பம்!இனி, எந்த, ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும், நமக்கு, 'செக்ஸ்' கிடைக்கப் போவது கிடையாது என்ற நிலை வரும் போது, உடலிலும், மனதிலும் அதிகமாக பாதிப்பு ஏற்படும். அதை சமாளிக்க, இயற்கை கொடுத்த வழிமுறையே சுயஇன்ப முறைகள்.தனிமையில் இருந்தால் இந்த நினைப்பு வருகிறது என்று கூறியிருப்பதால், நீ தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தை தவிர்க்க பார்ப்பது நல்லது.வயது 23, படித்திருக்கிறாய். 'சுய இன்பத்தை' மறந்து சுயமாக சிந்தித்து, சுயமாக சம்பாதிக்கும் வழிமுறைகளை கடைபிடிக்க ஏன் நீ முயலக் கூடாது.திருமணம் ஆக இருப்பதால், குழந்தை வளர்ப்பது, மற்றவர்களிடம் சுமூகமான உறவை வளர்த்து கொள்வது, ஆளுமை பண்புகளை வளர்த்துக் கொள்வது போன்றவைகளைப் பற்றிய புத்தகங்களை படித்து, வாழ்க்கையில் வெற்றி பெற முயற்சிக்கலாம்.கண்களை மூடி, நன்றாக மூச்சை இழுத்து, உள் மனதிற்கு, 'நான் குற்றமற்றவள்... மற்ற பெண்களைப் போல, நானும் அந்த மாதிரியான காரியத்தை செய்திருக்கிறேன்... இந்த பழக்கத்திலிருந்து என்னால் நிச்சயமாய் விடுபட முடியும்... இந்த செயல்கள் என் அன்றாட வாழ்க்கையை பாதிக்காது...' என்று, அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தால், உன்னுடைய குற்ற உணர்வுகளிடமிருந்து விடுதலை பெறலாம்.உன் பிரச்னை எல்லாம் சூரிய ஒளி பட்ட பனிக்கட்டி போல கரைந்து, உன் கணவருடன் இனிதே திருமண வாழ்க்கை அமையவும், நீ பாரதி கண்ட புதுமை பெண்ணாக மலரவும் என் ஆசிகள், வாழ்த்துகள்.-- அன்புடன்சகுந்தலா கோபிநாத்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !