அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மாவிற்கு —நான், 32 வயது பெண்; கணவர் வயது, 37; 22 வயதில் திருமணம் ஆனது. 10 மற்றும் 7 வயதுகளில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். என்னை காதலிப்பதாகவும், நான் இல்லையென்றால், செத்து விடுவதாக கூறி என்னை மணம் முடித்தார் என் அத்தை மகன். இதில், என் பெற்றோருக்கு விருப்பம் இல்லை என்றாலும், என்னால் அவர் இறந்து விடுவார் என்று நான் கூறியதால், திருமணம் செய்து வைத்தனர்.எனக்கு திருமணம் ஆகி, அவர்கள் வீட்டிற்கு சென்ற பின்தான், அவர் குடிகாரர் என்பதும், குடித்து விட்டு, வீட்டில் உள்ள பொருட்களை உடைப்பதும், பெற்றோரை அடிப்பதும், நடு இரவில் மரக்கிளையில் ஏறுவது என, ஒரு, 'சைக்கோ' மாதிரி நடந்து கொள்ளும் விஷயத்தை கூறினார் என் அத்தை. ஆனால், என்னை பெண் கேட்க வரும்போது, 'அவர் குடிப்பாரா...' என என் அத்தையிடம் கேட்ட போது, 'உன்னை நினைத்து தான் குடிக்கிறான்; நீ அவனை கல்யாணம் செய்தால் எல்லாம் சரியாகி விடுவான்...' என்றார்; நானும் அதை நம்பினேன்.ஆனால், திருமணம் ஆன ஒரு வாரத்திலேயே குடித்து விட்டு வந்தார். அத்துடன், தன் சந்தோஷத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பதையும் தெரிந்து கொண்டேன். இருப்பினும், திருந்தி விடுவார் என்று காத்திருந்தேன். ஆனால், என் வாழ்க்கை நரகமானது தான் மிச்சம்.நான், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். அவரும் தனியார் வங்கியில் பணிபுரிகிறார். என் மூத்த மகள், அப்பாவைக் கண்டாலே நடுங்குவாள். தினமும் அடிப்பதுடன், தகாத வார்த்தைகள் கூறி, பிற ஆண்களுடன் என்னை இணைத்துப் பேசி, துன்புறுத்துகிறார்.என் பெற்றோர் எதிர்த்துக் கேட்டால், அவர்களை அவமானப்படுத்தும் விதமாக பேசுகிறார்.அவர் அம்மாவிடம் சொன்னால், 'அவன் குடித்து விட்டு வந்தால், நீ பேசாமல் சாப்பாடு கொடுத்து விடு; அவன் ஒன்றும் தொந்தரவு செய்ய மாட்டான். அவன் அசிங்கமாக திட்டினால், நீ எதுவும் திருப்பி பேசாதே; அவன் சிறிது நேரத்தில் உறங்கி விடுவான்...' என்கிறார்.நீங்களே சொல்லுங்கள் அம்மா... அநாகரிகமாக பேசினால், எந்த பெண் தான் பொறுத்துக் கொள்வாள்! அவருடைய அண்ணன்களிடம் சொன்னால், 'நாங்கள் ஏதாவது திட்டினால், அவன் இறந்து விடுவான்...' என்கின்றனர்.வீட்டிற்கு பணம் கொடுக்க மாட்டார். என் சம்பளத்தை வைத்துத் தான் குடும்பச் செலவு, குழந்தைகளின் படிப்பு எல்லாத்தையும் பார்த்துக் கொள்கிறேன். ஒரு நாள் சாப்பாடு செய்யவில்லை என்றால் கூட, உடனே, அவரின் அம்மா, அண்ணன்களுக்கு போன் செய்து, 'என்னை பட்டினி போட்டு கொல்கிறாள்...' என்று பேசுகிறார். அவர்களும், 'சம்பளம் கொடுக்காமல், அவள் எவ்வாறு சமைப்பாள்...' என்று கேட்காமல், 'புருஷனுக்கு ஒருவாய் சோறு கூட போடாமல் கொடுமைப்படுத்துறாயே...' என்று என்னை திட்டுகின்றனர்.என் அம்மா வீட்டருகில், தனிக்குடித்தனம் தான் இருக்கிறோம். குழந்தைகளை, என் பெற்றோரிடம் விட்டு விட்டு வேலைக்குச் செல்கிறேன். அவருக்கு குழந்தைகளிடம் கூட பாசம் கிடையாது. என் குழந்தைகள் அவருக்கு பயந்து, எந்தவித சேட்டையும் செய்ய மாட்டார்கள். அவர் வீட்டுக்குள் நுழைந்தால், ஒரு மோசமான மிலிட்டரி ஆபீசர் மாதிரி தான், பிள்ளைகளை நடத்துவார். என் வீட்டில், சமையல் அறை மற்றும் ஹால் என இரு அறைகளே உள்ளன. பிள்ளைகள் படிக்கும் போது, 'டிவி'யை ஆன் செய்வார். ஆனால், குழந்தைகள் இம்மி அளவு, 'டிவி'யை பார்த்தாலும், 'மூஞ்சிலேயே மிதித்து விடுவேன்...' என்று காலை தூக்கி, அவர்களின் முகத்தருகே கொண்டு செல்வார்.பள்ளிக்கு நான் அல்லது என் அப்பா தான், பிள்ளைகளை அழைத்துச் சென்று, கூட்டி வருவோம். பிள்ளைகள் என்னிடம், 'எப்பம்மா அப்பா எங்களோட, 'பிரண்டா' இருப்பாங்க; எங்க பிரண்ட்சுக அப்பாக்கள் எல்லாம் பாசமாக நடந்துக்கிறாங்க. எங்க அப்பா மட்டும் ஏன்ம்மா இப்படி இருக்கிறாங்க...' என்று என்னிடம் கேட்கும் போது, என் நெஞ்சே வெடித்துவிடும் போலுள்ளது. நான், ஏதாவது பேசினால், 'நான் உன் ஆபீசுக்கு வந்து உன்னை கேவலபடுத்தவா...' என்கிறார். நானும், 'பரவாயில்ல; வந்து தான் பாருங்களேன். அடுத்து, மகளிர் காவல் நிலையத்துக்குத் தான் செல்வேன்...' என்றால், 'நீ, அங்க எவன் சப்போர்ட்டில் பேசுகிறாய்...' என்கிறார்.அம்மா... சத்தியமாகச் சொல்கிறேன். நான் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று தான் வாழ்கிறேன். என் நடவடிக்கைகளில் எந்த ஒழுங்கின்மையும் கிடையாது. நான் செய்த தவறு, என்னால் இவர் இறந்து விடக் கூடாது என்று திருமணத்திற்கு சம்மதித்தது தான். பட்ட பின் தான் புத்தி வருகிறது. இனி, நான் இவரை மறுபடியும் திருத்த முயற்சிப்பதா அல்லது இந்த வாழ்க்கை போதும் என்று இவரை விவாகரத்து செய்வதா?இவர், திருந்துவதற்கும், பொண்டாட்டியும் ஒரு உயிர் தான் என்று நினைக்கும் அளவிற்கு, நல்ல பதிலைத் தாருங்கள். இரு ஆண்டுகளுக்கு முன் குடித்து விட்டு கீழே விழுந்து, கால் எலும்பு முறிந்து, 'இனி மேல் குடிக்கவே மாட்டேன்...' என்று சொன்னதால், மருத்துவமனையில் காண்பித்து ஆபரேஷன் செய்து, அவரது கழிவுகளை அள்ளிப் போட்டு அவ்வளவும் பார்த்தாகி விட்டது; அப்போதும் திருந்தியபாடில்லை.ஒரு மாதத்திற்கு முன் நரம்புத் தளர்ச்சியால், கை, கால்கள் செயல்பட முடியாமல் போய் அதற்கும் மருத்துவம் பார்த்தாகி விட்டது. மறுபடியும், குடியையும், பேச்சையும் நிறுத்தியபாடில்லை; நான் வெறுத்தே விட்டேன். எனக்கு நல்வழி காட்டுங்கள்.— இப்படிக்கு,உங்கள் மகள்.அன்பு மகளுக்கு —வீட்டுக்கு ஒரு மிக்சி, மின்விசிறி தருவது போல, வீட்டுக்கு ஒரு குடிநோயாளியை பரிசளித்துள்ளது அரசு. மருத்துவர்கள் குடிப்பழக்கம் உள்ளவர்களை, நாகரிகமாய், 'குடிநோயாளி' என அழைக்கின்றனர். உண்மையில், குடிநோயாளிகள், குடிமிருகங்களாகவே மாறி விட்டனர். இவர்கள், மனைவி, குழந்தைகளை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சிக்கின்றனர்; அடிக்கின்றனர், சந்தேகிக்கின்றனர், கொலை செய்யவும் துணிகின்றனர். நிறைய இளைஞர்கள், திருமணத்திற்கு முன் குடிக்கின்றனர்; திருமணத்திற்கு பின், குடியை வெகுவாய் குறைத்துக் கொள்கின்றனர். ஆனால், உன் கணவன் குடி பழக்கத்திலிருந்து மீளாமல் அதற்கு அடிமையாகி விட்டான்.குடிநோயாளியின் மீது, அவனது பெற்றோருக்கும், உடன்பிறப்புகளுக்கும் கோபமும், வெறுப்பும் இருக்கத் தான் செய்யும். ஆனால், அதை குடிநோயாளியின் மனைவியின் முன் வெளிப்படுத்த மாட்டார்கள். அப்படி வெளிப்படுத்தினால் குடிநோயாளி கடித்துக் குதறி விடுவான் என பயப்படுவர். இக்காரணங்களினாலேயே, உன் மாமியாரும், உன் கணவனின் அண்ணன்களும் உன்னிடம் நொண்டி சமாதானம் கூறுகின்றனர்.எனக்கு தெரிந்த பெண் ஒருவரின் கணவன், தினமும் குடித்துவிட்டு, மனைவி, மகள், மகனை அடித்து துன்புறுத்தி வந்தார். ஒருநாள் சாலை விபத்தில் இறந்து போனார். அவர் குடும்பத்தினர் முகத்தில் அப்படியொரு நிம்மதி. எவருக்குமே அந்த குடிகாரனின் மறைவில் துளி கூட துக்கமில்லை. அப்படித்தான் உன் கணவனும் இருக்கிறான்.இனி நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா?ஒன்று, குடிகார கணவன் அகால மரணமடைவதற்கு காத்திருத்தல் அல்லது அவனை சட்டப்படி விவாகரத்து செய்வது!என்னடாது, நம் கணவன் அகால மரணமடையும் வரை காத்திருக்கச் சொல்கிறாளே... நல் ஆலோசனை தருவாள் என நினைத்தால், இப்படி அமங்கலமாக கூறுகிறாளே என நினைக்கிறாயா... மகளே... பெரும் குடிகாரர்கள் நீண்ட நாள் வாழ்வதில்லை; இயற்கையாக மரணத்தை தழுவுவதில்லை. நீ விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், குடிகாரர்களின் வாழ்வு இப்படித் தான் முடிந்துள்ளது.நீ, பிள்ளைகளின் படிப்பை கவனி; அவர்களை, நல்லபடியாக வளர்த்து, ஆளாக்கி திருமணமும் செய்து வை. நல்ல பணியில் இருப்பதால், பொருளாதார சுதந்திரத்துடன் செயல்படலாம். குடிகார கணவன் இருக்கும்போது எது எது மறுக்கப்பட்டதோ, அதை எல்லாம் நெஞ்சார, மனசார அனுபவிக்கலாம். கொடூரனின் வெஞ்சிறையில் இருந்து விடுபட்டு, சுதந்திர வானில் பறக்கலாம்.குடிகார கணவனை வைத்து ஆயுளுக்கும் அல்லல்படும் பெண்ணினமே விழித்துக் கொள். முதுகில் தொற்றிக் கொண்ட வேதாளத்தை வெட்டி அகற்று. பார்த்தீனிய பண்ணை வேண்டாம்; பூண்டோடு அழித்தொழி.-— என்றென்றும் தாய்மையுடன்சகுந்தலா கோபிநாத்.