அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மாவிற்கு —என் வயது, 35; என் கணவரின் வயது, 40; நான், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். எனக்கு, 18 வயதில் திருமணம் நடந்தது; 11 வயதில் ஒரு பெண் குழந்தையும், மூன்று வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.திருமணமான நாள் முதல், எங்களுக்குள் மனதளவில் கூட எந்த பிரச்னையும் இல்லாமல், மிக பொருத்தமான ஜோடி என்று எல்லாரும் போற்றும்படி, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம்.ஆனால், கடந்த, ஐந்து ஆண்டுகளாக, என் கணவர் என்னை, இரவில் கவர்ச்சியாக உடை அணியச் சொல்லி வற்புறுத்துகிறார். காரணம் கேட்ட போது, 'என் மனம், கவர்ச்சியான பெண்களை நாடுகிறது; ஆனால், அப்படிப்பட்ட பெண்களிடம் போக, மனம் இடம் கொடுக்கவில்லை அதை, உன்னிடமே அனுபவிக்க நினைக்கிறேன். இதற்கு நீ மறுத்தால், சபலத்தில் இத்தகைய பெண் யாரிடமாவது தொடர்பு ஏற்பட்டு, அப்படியே போய் விடுவேனோ என்று பயமாக இருக்கிறது; அதற்காக தான், உன்னை கெஞ்சுகிறேன்...' என்று, தினமும் சொல்வார்.இதை எல்லாம், விளையாட்டாக சொல்கிறார் என்று கண்டுகொள்ளாமல் இருந்தேன்; ஆனால், அவர் சொன்னது உண்மை தான் என்று, இப்போது புரிகிறது. அவர், முன்பு போல், என்னிடம் அன்பாக பேசுவது இல்லை; அடிக்கடி, சண்டை போடுகிறார். 'தேவை இல்லாமல், ஏன் சண்டை போடுகிறீர்கள்...' என்று கேட்டால், 'எல்லாமே உன்னால் தான்...' என்று, என்னை அடிக்க வருகிறார். அவரிடம், நிறைய மாற்றங்கள் தெரிகிறது.முன்பெல்லாம், கடையில் இருந்து, வீட்டிற்கு வந்ததும், என்னிடமும், பிள்ளைகளிடமும் மகிழ்ச்சியாக பேசுவார். ஆனால், இப்போது, எப்போது பார்த்தாலும், கவலையான முகத்துடன் இருக்கிறார். கடை வியாபாரத்தையும், நன்றாக கவனிப்பதில்லை என்று, கடைப் பையன் சொல்கிறான். அத்துடன், தினமும் மது அருந்துவதுடன், தூங்கும் போது, உளறுகிறார். இதை எல்லாம் பார்க்கும் போது, பயமாக இருக்கிறது. 'என்னால் தான் இப்படி ஆகி விட்டாரோ...' என்று, மனம் வேதனைப்படுகிறது.எங்கள் வாழ்வில், முன் போல், மகிழ்ச்சி ஏற்பட நீங்கள் தான் எனக்கு வழிகாட்ட வேண்டும்.— இப்படிக்கு,உங்கள் அன்பு மகள்.அன்பு மகளுக்கு —நிஜத்தில், கட்டுப்பெட்டியான பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் ஆண்கள், கற்பனையில் த்ரிஷா, நயன்தாரா மற்றும் தமன்னா போன்றோருடன் குடும்பம் நடத்த விரும்புகின்றனர். திரையில், சன்னி லியோன் ஆடும் குத்தாட்டத்தை, வீட்டில் மனைவி ஆட வேண்டும் என்று அபிலாஷிக்கின்றனர். நல்லவேளை... உன் கணவன், உன்னை அவனது நண்பர்கள் முன், கவர்ச்சி காட்ட சொல்லவில்லை. இரு குழந்தைகளுக்கு தாயான, 35 வயது பெண்ணான உன்னிடம், சினிமா நடிகைகளின் கவர்ச்சி ஒளிந்திருப்பதாக, உன் கணவர் நம்புவது, பெருமைக்குரிய விஷயம் தானே!கணவனை மகிழ்விக்க, ஒரு மனைவி, அந்தரங்கமாய் ஆயிரம் செய்யலாம். நீ, கவர்ச்சி காட்டினால், உன் கணவர், விலைமகளிடம் போகவோ, மது அருந்தவோ மாட்டார் இல்லையா... மாலையில் குளித்து, வண்ணமயமான ஆடைகளை அணிந்து, வாசனை திரவியம் பூசு. 'லோகட்' ஜாக்கெட் அணி. 'லோ ஹிப்' தெரியும் வண்ணம், புடவை உடுத்து. மகளையும், மகனையும் தூங்க வைத்து, வேறு அறையில், உன் கணவரின் கண்களுக்கு மட்டும் கவர்ச்சி களியாட்டங்களை அரங்கேற்று.திருமணமான புதிதில், தலைகேசத்தை வாரி பூச்சூடி, இளமையாய், புதுமையாய் கணவனை வரவேற்றிருப்பாய். இப்போது, 'நமக்கு தான், 11 வயதில் மகளும், மூன்று வயதில் மகனும் இருக்கின்றனரே...' என்கிற எண்ணத்தில், சுய சுத்தம் பேணாமலும், மிதமான அலங்காரம் கூட செய்யாமலும் நின்றிருப்பாய். விலை உயர்ந்த இனிப்பு என்றாலும், அதை வண்ணமயமான அட்டை பெட்டியில் வைத்தால் தான் மதிப்பு. 22 காரட் தங்க நகை என்றாலும், மின்னும் வைரக் கற்கள் பதித்தால் தான், கண்ணை கவரும்.உன் மகள், இன்னும் நான்கைந்து ஆண்டுகளில் வயதுக்கு வந்து விடுவாள்; அவளது கண்களை உறுத்தா வண்ணம், உன் கவர்ச்சியை அரங்கேற்றம் செய். இதை, யாரிடமும் சொல்ல கூடாது என, உன் கணவரிடமும் சத்தியம் வாங்கு. உன் கணவர் இல்லாத பகல் பொழுதுகளில், ஆடை உடுத்தலில் கண்ணியம் காட்டு. உன் கவர்ச்சியை மொபைல் போன் மூலம், 'வீடியோ' எடுக்க, ஒருபோதும் அனுமதிக்காதே!உன் கணவர், மனசாட்சியை மதிப்பவர். தடம் புரண்டு விடக் கூடாது என்பதற்காக தான், உன்னை, கவர்ச்சி காட்ட சொல்கிறார். நான்கைந்து ஆண்டுகளில், அவரே இதிலிருந்து விடுபட்டு விடுவார்.ஆடுகிற மாட்டை ஆடியும், பாடுகிற மாட்டை பாடியும் கறக்க வேண்டும். கவர்ச்சி விரும்பும் காளையை, கவர்ச்சி காட்டி தான் மேய்க்க வேண்டும்!— என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.