உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள சகோதரிக்கு —என் வயது: 36. என் பெற்றோருக்கு, நானும், தம்பியும் தான். அம்மா, பள்ளி ஆசிரியை; அப்பா, வங்கி அதிகாரி; தம்பி, கல்லுாரியில் படிக்கிறான்.அம்மாவின் வார்த்தைக்கு நாங்கள், மறு வார்த்தை பேசியதில்லை. இப்படிதான் வாழ வேண்டும் என்று, அம்மா போட்ட கோட்டை, இன்று வரை தாண்டியதில்லை. நான், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.பொறியியல் படித்த மாப்பிள்ளைக்கு, என்னை திருமணம் செய்து வைத்தனர். அமைதியான குணம் கொண்டவர், கணவர். எங்களுக்கு ஒரு மகள் பிறந்தாள். அவளை, முழுக்க முழுக்க, கணவர் தான் வளர்த்தார் என்று சொல்ல வேண்டும். என் அம்மா சொல்லிக் கொடுக்கும் வரைமுறைகளை, மகளின் மூளையில் ஏற்ற முடியாது; ஏற்கவும் மாட்டாள். இன்றைய காலத்திற்கு ஏற்ப அத்தனை நவீன விஷயங்களும், அவள் அப்பாவால் ஊட்டி வளர்க்கப்பட்டாள். அப்பாவும் - மகளும், அவ்வளவு ஒட்டுதலுடன் இருப்பர்.மகளுக்கு, 16 வயதானபோது, விபத்தொன்றில் இறந்து போனார், கணவர். அவர் இழப்பால், நாங்கள் இருவருமே தத்தளித்து போனோம். என் எண்ணங்களும், மகளின் எண்ணங்களும் ஒத்துப்போகவே இல்லை. அவளது விருப்பங்களை முழு மனதுடன் நிறைவேற்ற இயலவில்லை.பள்ளிப் படிப்பை முடித்ததும், சுதந்திர பறவையாக இருக்கவே ஆசைப்பட்டாள், மகள். நண்பர்களுடன் வெளியிடங்களுக்கு செல்வது, 'க்ரூப் ஸ்டெடி' என்று, வெளியில் தோழிகளுடன் தங்குவது என்றிருந்தாள். அதுமட்டுமல்லாமல், புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு, பல இடங்களுக்கும் தனியாக செல்ல ஆரம்பித்தாள்.அவளது வயதும், போக்கும் பதற வைக்கிறது. அவள் நலன் கருதி, நான் விதிக்கும் கட்டுப்பாடுகள், அவளுக்கு கொடுமையாக தெரிகிறது. ஒரே வீட்டில் இருவரும் எதிரிகள் போல் இருக்கிறோம். இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தை குறைந்து போனது.வயதான என் பெற்றோர், ஏதாவது சொன்னால், கோபித்துக் கொள்கிறாள். அவளது ஒழுக்கத்தில், எந்த குறையும் இதுவரை ஏற்படவில்லை என்றாலும், என் மனம் பரிதவிக்கிறது. பெண்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளும், ஒருதலை காதல், 'ஆசிட்' வீச்சுகளும், பயத்தை அதிகரிக்கிறது.அவளை எப்படி பாதுகாப்பது என்று புரியவில்லை. தகுந்த ஆலோசனை வழங்குங்கள் அம்மா!—இப்படிக்கு, உங்கள் மகள்.அன்பு சகோதரிக்கு —எப்போதும் மகன்கள், அம்மாக்களுடனும், மகள்கள், அப்பாக்களுடனும் நெருக்கமாக இருப்பர். இதை, 'பிராய்டியன் தாக்கம்' என்பர். அதனால் தான், மகன்கள், அம்மா போல மனைவியையும், மகள்கள், அப்பா போல கணவனையும் தேடுகின்றனர்.இறந்த கணவர், மகளுக்கு என்ன விதமான நவீன விஷயங்களை ஊட்டி வளர்த்தார் என்பது, மில்லியன் டாலர் கேள்வி. என்னதான் ஒரு தந்தை, மகளிடம் நெருங்கி பழகினாலும், சமுதாயம் வரைந்த, 'லட்சுமணன் கோட்டை' இருவராலும் தாண்ட முடியாது.பெண்கள், 16 - 21 வயது வரை, அம்மாவை, ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள்; 21 - 28 வயது வரை, ஓரளவு மதிப்பர்; 28 - 50 வயது வரை, முழுக்க முழுக்க, அம்மாவின் நிழலில் ஒதுங்கி விடுவர்.ஒரு வீட்டில் ஆண் இறந்தால், இழப்பை ஒரு சில நாட்களில் சரிக்கட்டி விடலாம். பெண் இறந்தால், அந்த இழப்பை, 100 ஆண்டுகளானாலும் சரிக்கட்ட முடியாது. பள்ளிப் படிப்பை முடித்த மகளை கையாள்வது ஒரு கலை. அந்த கலையை திறம்பட கற்றுக்கொள்...* அம்மா ஸ்தானத்திலிருந்து இறங்கி, மூத்த தோழி ஸ்தானத்துக்கு மாறு. ஆண் - பெண் நண்பர்களுடன் பேசுவதை, 'ரேடியோ ஜாக்கி' போல, உன்னிடம் ஒப்பிக்க வேண்டும், மகள்* மகளுக்கு ஏதாவது அறிவுரை கூற வேண்டும் என்றால், 8 அடி, 16 அடி, 64 அடி செய்யுளாக கூறாதே. 1.75 அடி திருக்குறளாக கூறு. அறிவுரை தொனி இல்லாமல் ஆலோசனை இருக்கட்டும்* வெளியில் எங்கு போனாலும் சொல்லி விட்டு போகச் சொல். எத்தனை மணிக்கு வீட்டை விட்டு வெளியே போகிறாள், எத்தனை மணிக்கு வீடு திரும்புவாள் என்பதை, உன்னிடம் அவள் தெளிவாக அறிவிக்கட்டும்* மகளின் ஆண் நண்பர்களின் குணாதிசயங்களை, சாம, தான, பேத, தண்ட முறையில் அறிந்துகொள். தவறான நண்பர்கள் இருந்தால், துணிந்து கத்தரி* மகளிடம் பேசிக்கொண்டே இரு. அவள், 10 வார்த்தை பேசினால், நீ, 100 வார்த்தைகள் பேசி, பேச்சை வளர். மகளின் நியாயமான சந்தோஷங்களுக்கு ஒருபோதும் குறுக்கே நிற்காதே* பெண்கள் மீது நடக்கும் பாலியல் வன்முறை செய்திகளை சேகரித்து, அவளின் காதுகளுக்கு ஒலிபரப்பு* கணவனின் மரணம், உனக்கும், மகளுக்கும் சமமான துக்கத்தை தரும் விஷயம் என்பதை பறைசாற்று* மகளுக்கு, மோசமான தோழிகள் இருந்தால், மோப்பம் பிடித்து அவர்களை, அவளின் நட்பு வட்டத்திலிருந்து நீக்கு* நீ, தாயுமானவள் மட்டுமல்ல, தந்தையுமானவள் என்பதை மகளுக்கு உணர்த்து* 'சுதந்திரம் என்பது எல்லையில்லாதது அல்ல. சுதந்திரத்துக்கும் சில பல கட்டுப்பாடுகள் உள்ளன. உடல், மன பாதுகாப்பை உறுதி செய்து, பற. சிட்டுக்குருவிக்கு ஒரு உயரம் என்றால், பருந்துக்கு வேறொரு உயரத்தில் வானம் மகளே...' என, அறிவி.உங்கள் இருவரின் வாழ்வும், வளமும், ஒருவரோடு ஒருவர் இணைக்கப்பட்டது. மகள் வாழ்ந்தால், நீ வாழ்வாய். மகள் வீழ்ந்தால், நீ வீழ்வாய், சகோதரி.- என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !