அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மாவுக்கு —நான், 32 வயது ஆண்; அரசு பணியில் உள்ளேன். என் மனைவி வயது, 28; அவளும் அரசு பணியில் தான் உள்ளார். எங்களுடையது காதல் திருமணம். எங்கள் காதலை, பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டார், என் தந்தை. எங்களுக்கு இரு மகன்கள். மூத்தவன் பிறந்ததும், தன் தாய் வீட்டுக்கு போக ஆரம்பித்தாள், மனைவி. அவர்களும் சமாதானமாகி விட்டனர்.என் தந்தையின் அறிவுரைப்படி, நானும், அவ்வப்போது மாமியார் வீட்டுக்கு சென்று வருவேன். தன் அம்மா வீட்டுக்கு, மனைவி போக ஆரம்பித்தவுடன், என்னை மதிப்பதே இல்லை. நானும், மகன்களுக்காக அவற்றை பொறுத்துக் கொண்டேன்.இதற்கிடையே, அலுவலகத்தில் பணிபுரியும் திருமணமான ஒருவனிடம் பழக ஆரம்பித்தாள், மனைவி. அவனுடன் மணிக்கணக்காக போனில் பேசிக் கொண்டிருப்பாள். நான், 'யார் அவன்?' என்று விசாரித்தால், உடனே அழைப்பை, 'கட்' செய்து, அவனது நம்பரை அழித்து விடுவாள்.பலமுறை எச்சரித்தும் கேட்காததால், அவள் அம்மாவிடம் சொன்னேன். அவர்கள், அவளை கண்டிப்பதற்கு பதிலாக, என்னை தான் குறை கூறினர்.இந்த விஷயம் அறிந்து, அவனது மனைவி, அலுவலகத்துக்கே வந்து, என் மனைவியிடம் சண்டை போட்டு சென்றுள்ளாள். இதுவும் பின்னர் தான், எனக்கு தெரிய வந்தது.அதன் பிறகும், அவர்கள் மணிக்கணக்கில் பேசியதால், போலீசில் புகார் செய்தேன். அவர்கள், அந்த பையனை அழைத்து, 'இனி, இப்படி செய்ய மாட்டேன்...' என்று எழுதி வாங்கி, அனுப்பி விட்டனர்.இதனால், என்னுடன் சண்டையிட்டு, அவள் அம்மா வீட்டுக்கு சென்று விட்டாள்; நானும், என் தந்தை வீட்டுக்கு வந்து விட்டேன்.இந்நிலையில், நாங்கள் குடியிருந்த வீட்டை புதுப்பிக்க, என் மனைவியிடம் ஏற்கனவே கொடுத்திருந்த, இரண்டு லட்சம் ரூபாயை, தந்தை கேட்டபோது, இல்லையென்று கூறினாள்.'பணத்தை என்ன செய்தாய்...' என்று கேட்டேன்.'ஒரு லட்சத்தை, அம்மாவுக்கும், இன்னொரு லட்சத்தை, அவளது கள்ள காதலனுக்கும் கொடுத்திருக்கிறாள். நேரில் சென்று கேட்க போனால், என் மனைவியுடன் அறையிலிருந்து வெளியே வந்தான், அவன். இதைப் பற்றி மாமியார் எதுவுமே கண்டு கொள்ளவில்லை.மகன்களை என்னுடன் அழைத்து வர முயன்றபோது, பெரியவன் வர சம்மதித்தான். மனைவி தடுத்து, 'என்னை மீறி அழைத்துச் சென்றால், தற்கொலை செய்து கொள்வேன்...' என்று, மிரட்டுகிறாள். மகன்களுடன் போனில் பேச முயற்சித்தால், போனை, 'கட்' செய்து விடுகிறாள்.இனி, மகன்களை அவளிடம் விட்டு வைக்க, எனக்கு மனம் இல்லை.'சமாதானம் பேசி, அனைவரையும் அழைத்து வந்து, நம்முடனே வைத்துக் கொள்ளலாம்...' என்கிறார், தந்தை.எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நல்ல ஆலோசனை தாருங்கள் அம்மா.— இப்படிக்கு,உங்கள் மகன்.அன்பு மகனுக்கு —தற்போதைய தமிழ் சமூகத்தில், திருமண பந்தம் மீறிய உறவுகள் பயமுறுத்தும் அளவிற்கு அதிகரித்து விட்டன. திருமண பந்தம் மீறிய உறவுகளில், ஆண்கள் எவ்வளவு அதிகமாக ஈடுபடுகின்றனரோ, அவ்வளவு அதிகமாக பெண்களும் ஈடுபடுகின்றனர்.இருபாலாருக்கும் குற்ற உணர்ச்சி சிறிதும் இல்லை. தங்களது தவறுகள், குழந்தைகளை கடுமையாக பாதிக்குமே என, இருபாலாரும் கிஞ்சித்தும் வருத்தப்படுவதும் இல்லை. தமிழ் சமூகம், ஒட்டுமொத்தமாக மேற்கத்திய கலாசாரத்துக்கு தாவி விட்டது.மனைவியின் திருமண பந்தம் மீறிய உறவுக்கு, உன் நடவடிக்கைகள் கூட காரணமாய் இருக்கலாம். நீ ஒரு குடி நோயாளியா, அலுவலக வேலை பளுவால், தற்காலிக ஆண்மை குறைவு ஏற்பட்டவனா... தவறுகள் செய்யாத போதே மனைவியை சந்தேகப்பட்டு, துன்புறுத்தியவனா... உன் மனைவியிடம் விசாரித்து பார்த்தால் தான் தெரியும்.எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர், இல்லத்தரசியாக இருந்த மனைவிக்கு, பல லட்சம் செலவழித்து, தான் பணிபுரியும் இடத்தில், ஒரு வேலை வாங்கிக் கொடுத்தார். நண்பரின் மனைவிக்கும், அங்கிருந்த ஓட்டுனருக்கும் தொடர்பு ஏற்பட்டு விட்டது.நண்பருக்கு ஒரு மகன், ஒரு மகள். மனைவியின் கள்ளக் காதலை சகித்துக் கொண்டே அவளுடன் குடும்பம் நடத்துகிறார், நண்பர். மகன், மகளுக்கு திருமணம் செய்து வைத்த பிறகும், மனைவியின் கள்ளக் காதல் தொடர்கிறது. நண்பருக்கோ, குடும்பம் சிதறிப் போகாமல், மகள், மகன் வாழ்க்கையை, 'செட்டில்' செய்து விட்ட மகிழ்ச்சி.நீயும், என் நண்பர் போல சகிப்புணர்வுடன் இருப்பாய் என்றால், தந்தையின் அறிவுரைபடி மனைவியுடன் சமாதான பேச்சு நடத்து. சில திருமண பந்தம் மீறிய உறவுகள், சில ஆண்டுகளில் கசந்து விடும். கள்ளக் காதலனின் மனைவி, நைச்சியமாக செயல்பட்டு, உன் மனைவிக்கும், அவளது கணவனுக்கும் இருக்கும் தொடர்பை கத்தரித்து விடுவாள். அதற்கும் வாய்ப்பிருக்கிறது.மனைவியின் துரோகத்தை, உன்னால் மன்னிக்க முடியாது, சகிக்கவும் முடியாது என்றால், குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு போடு. மனைவியின் திருமண பந்தம் மீறிய உறவை நீதிமன்றத்தில் ஆதாரப்பூர்வமாய் நிரூபி. 'தவறு செய்யும் மனைவியுடன், குழந்தைகள் இருந்தால் கெட்டு விடும்; அவர்கள் என் பாதுகாப்பில் இருக்கட்டும்...' என, வாதாடு.மேற்சொன்ன இரண்டு முடிவுகளில் எதை எடுப்பதற்கும் முன், உன் மனைவியை அழைத்து பேசு.'என்னிடம் இருக்கும் குற்றங்கள் தான், உன்னை தவறு செய்ய துாண்டுகிறது என்றால், என்னை திருத்திக் கொள்கிறேன். நீ உறவு வைத்துள்ள ஆண், இன்னொரு பெண்ணுக்கு சொந்தமானவன். உங்களுடைய திருமண பந்தம் மீறிய உறவால், இரண்டு குடும்பத்து குழந்தைகளின் எதிர்காலமும் பாழாகி விடும்.'இது தேவையா... நீ அவனுடன் வாழ விரும்பினால், குழந்தைகளை என்னிடம் விட்டு விடு. ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லாது, இரு தரப்பும் விரும்பி, நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றுக் கொள்வோம். என்ன சொல்கிறாய்...' என, கேள்.'விவாகரத்து பெற்றுக் கொள்வோம்; ஆனால், குழந்தைகளை தர மாட்டேன்...' என, உன் மனைவி பிடிவாதம் பிடித்தால், விட்டுக் கொடு.மகன்கள் வளர்ந்து ஆளான பின், தாயின் தவறு புரிந்து, உன்னிடம் திரும்பி வர வாய்ப்புகள் உள்ளன. எந்த முடிவு எடுப்பது என்றாலும், ஒரு ஆண்டு ஆறப்போடு. அதுவரை, மனைவியிடம் பேச்சு நடத்தியபடியே இரு. நல்லதே நடக்கும் மகனே.— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்