அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மாவுக்கு —நான், 28 வயது பெண். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். அப்பாவுக்கு வயது, 60. அவர் மிகவும் கஷ்டப்பட்டு என்னை படிக்க வைத்தார். அதனால், எனக்கு வேலை கிடைத்ததும், அவரை வேலையை விட்டு, ஓய்வு எடுக்கும்படி கேட்டுக் கொண்டேன்.கடந்த மூன்று ஆண்டுகளாக, அவர் வீட்டில் இருந்து வருகிறார். இதனால், அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இடையே வாக்குவாதம், சண்டை ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.எந்நேரமும் குறை கூறுதல் மற்றும் மோசமான வார்த்தைகளால் பழித்து பேசும் பழக்கம் உடையவர், அப்பா. இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார், அம்மா. எனக்கும், மன வருத்தம் தான்.கடின உழைப்பாளியாக இருந்தவர், தற்போது தலைகீழாக மாறி விட்டார். அம்மாவின் பெற்றோரிடம், அம்மா பற்றி அவதுாறாக கூறி வருகிறார். அதேசமயம், தன் வீட்டினருடன் அம்மா ஏதும் பேசிவிடாதபடி பார்த்துக் கொள்கிறார்.வீட்டின் அக்கம்பக்கத்தினரிடமும் குறை கூறியதால், மன வேதனையில் இருக்கிறார், அம்மா. எங்களால் இவரை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. 'வேறு ஏதாவது சுலபமான வேலைக்கு சென்று கவனத்தை திசை திருப்புங்கள்...' என்று கூறினாலும், அதில் அவருக்கு ஈடுபாடு இல்லை.இவர்களின் பிரச்னையால், என் பணியில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. இந்த பிரச்னை பற்றி அவரிடம் கேட்க போனபோது, என்னையே அடித்து விட்டார். அதன்பின், அவரிடம் பேசுவதே இல்லை. செய்வதறியாது திகைத்துள்ளேன். தயவுசெய்து எனக்கு ஒரு ஆலோசனை தாருங்கள்.— இப்படிக்கு,உங்கள் மகள்.அன்பு மகளுக்கு —பணி ஓய்வு பெறும் ஆண்கள், தங்களது அடையாளத்தில் பாதியை தொலைத்து விடுகின்றனர். அத்துடன், ஆக்கப்பூர்வமான முடிவுகளை எடுக்கத் தெரியாமல் செயலிழந்து விடுகின்றனர்.மேலும், அவர்களிடம் சுயநம்பிக்கை அருகிப் போகிறது. கூடுதலாய் அவர்கள் சந்தேக பேய்களாக அவதாரம் எடுக்கின்றனர். அவர்களுக்குள் மரண பயம் விஸ்வரூபிக்கிறது.பணி ஓய்வு பெறுபவர்களில், 6 சதவீதம் பேருக்கு, நோய்கள் அதிகரிக்கின்றன. 9 சதவீதம் பேருக்கு, மனநலம் பாதிக்கப்படுகிறது.பணி ஓய்வு பெறுபவர்களுக்கு, ஓய்வூதியம் கிடைத்தல் நலம். இல்லையென்றால், அவர்கள் வேண்டாத குப்பையாக, வீட்டு அங்கத்தினர்களால் பாவிக்கப்படுகின்றனர்.வேலியில் போன ஓணானை மடியில் விட்டு கொண்ட கதையாய், வேலை பார்த்து கொண்டிருந்த அப்பாவை, பணி ஓய்வு பெற வைத்து, வீட்டில் இருத்தி விட்டாய்.வேலைக்கு போகும்போது, உன் அப்பா காலை, 8:00 மணியிலிருந்து மாலை, 6:00 வரை, 10 மணி நேரம், பணி ஏற்பாட்டிலும், பணியிலும் இருப்பார். இப்போது ஒருநாளின், 24 மணி நேரமும் வீட்டில்.கோழி வளர்ப்போர், அதிகாலையில் கூண்டிலிருந்து அதை திறந்து விடுவர். ஊர் முழுக்க மேய்ந்து, மாலையில் வீடு திரும்பும்.கோழியை வீட்டிலேயே வைத்திருந்தால், வீடு முழுக்க நாசமாக்கும். வீட்டுப் பொருட்களை சீய்த்து போடும். நான்கைந்து கோழிகள் இருந்தால், ஒன்றோடொன்று சண்டையிட்டு ரத்தக்காயம் ஏற்படுத்தும்.உன் அப்பா விஷயத்தில் நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...1. நீயும், உன் அம்மாவும் எக்காரணத்தை முன்னிட்டும் அப்பாவிடம் வாக்குவாதம் செய்யாதீர். எந்தெந்த விஷயத்தில் உங்களை குறை சொல்கிறாரோ, அதை சரி செய்யுங்கள்.2. சமையலில் உப்பை குறையுங்கள்.3. அப்பாவின் நண்பர்களில் நல்லவரை, அமைதியானவரை தேர்ந்தெடுத்து, அவருடன் தினமும் பழக சொல்; நடைப்பயிற்சி கூட்டி போக சொல். சொல்ல விரும்பும் விஷயங்களை, அவர் மூலம் கூறு. ஓய்வு பெற்ற அப்பாவின் நண்பர், ஏதாவது பகுதிநேர பணியில் இருந்தால், அப்பாவையும் ஏதாவது ஒரு பகுதிநேர பணி செய்ய சொல்லி, நாசுக்காய் நண்பர் வழி வலியுறுத்தலாம்.4. அவ்வப்போது அப்பாவின் ரத்த அழுத்ததையும், சர்க்கரையையும் பரிசோதனை செய். இரண்டும் கட்டுக்குள் இருக்கும்படி மருந்து, மாத்திரைகளை உட்கொள்ள வை.5. 'டிவி' பார்த்தல், இசை கேட்டல், செடி வளர்த்தல் போன்ற பொழுது போக்குகள் ஏதாவது, அப்பாவுக்கு கிடைக்கும்படி செய்.6. அப்பாவை நேருக்கு நேர் பார்க்கும்போது, மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் பாச முகத்தை காட்டுங்கள். உங்களது உடல் மொழியில் சமாதான கொடி பறக்கட்டும். யாரிடமும் அவரை பற்றி குறை கூறாதீர்.7. அப்பா சுயசுத்தம் பேணவும், விரும்பிய உணவுகளை உண்ணவும் வழி செய்.8. அப்பாவுக்கு, மொபைல் போன் ஒன்றை பரிசளி. முகநுாலில் சேரட்டும். 'வாட்ஸ் - ஆப்' குழு அமைக்கட்டும். 9. அப்பா நல்ல மூடில் இருக்கும்போது, அவரிடம் மனம் விட்டு பேசு. 'வி லவ் யூ அப்பா...' என, கூறு.10. ஓய்வு பெற்ற பிறகும், அப்பா தான் குடும்பத் தலைவர் என்கிற நிதர்சனத்தை, அவர் உணரும் படி செய். கூர்மையான கொம்புகளுடன் சீறி நிற்கும் காளை மாட்டுடன் மல்லுக்கட்டாதே. பசும்புல்லை நீட்டி உச்சந்தலையை தடவிக் கொடு. காளை மாடு, உன் முன் மண்டியிடும். — என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.